இன்று இளைஞர்கள் எதை நோக்கி ஓடுகிறார்கள் என்று சில நேரங்களில் எண்ணத் தோன்றுகிறது.
பேருந்தில் ஏறியதும் இருக்கையைப் பிடித்து அமர்வதில் சிலர் மிகுந்த தீவிரம் காட்டுகிறார்கள். அமர்ந்தவுடன் காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு, பயண நேரம் முழுவதையும் வீடியோக்களிலும் ரீல்ஸ்களிலும் செலவிடுகிறார்கள். தனக்கொரு வசதியான இடம் கிடைத்துவிட்டதே என்பதையே ஒரு வெற்றியாகக் கருதுகிறார்கள்.
அதே பேருந்தில் ஒரு முதியவரோ, நிற்பதற்குச் சிரமப்படும் ஒருவரோ ஏறும்போது, அவருக்குத் தன் இருக்கையை அளித்து, அவர் சௌகரியமாக அமர உதவுவதிலும் ஒரு வெற்றி இருக்கிறது. பிறருடைய தேவையைக் கவனிப்பதிலும், அவர்களுக்காகச் சிறிது சிரமத்தை ஏற்றுக்கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கிறது.
ஆனால், இருக்கையைப் பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை, அதைத் தேவைப்படுபவருக்கு விட்டுக்கொடுப்பதில் காட்டுகிறோமா?
நம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதோடு, பிறருடைய சிரமங்களைக் குறைக்கும் அக்கறையும் வளர வேண்டும். அந்த அக்கறையின்றி நாம் அடையும் முன்னேற்றம் ஒரு வேடிக்கையான வளர்ச்சியாகவே இருக்கும்.
—————-
கவனிப்பதே கல்வி
ஓர் இடத்தில் நின்று, நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்தாலே பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு கவனித்துக் கற்றுக்கொள்ளும் பழக்கம் வகுப்பறைகளிலும் வளர்க்கப்பட வேண்டும்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, எதிரே இருந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்தேன். ஒன்றில், ஒரு பிரபல நடிகர் வீட்டு உபயோகப் பொருளை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார். மற்றொன்றில், ஒரு விளையாட்டு வீரர் விளையாட்டுப் பொருளுக்கு விளம்பரம் செய்திருந்தார். அடுத்ததாக ஒரு பள்ளியின் விளம்பரம். அதில் நடிகரும் விளையாட்டு வீரரும் இணைந்து நின்று, அந்தப் பள்ளியில் சேருமாறு அழைத்தார்கள்.
அப்போது என்னைக் கடந்து ஒரு பள்ளி வாகனம் சென்றது. அதில் ஒரு பிரபல விளையாட்டு வீரரின் பெயரில் ‘இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்று எழுதியிருந்தது.
அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது: காந்தியின் பெயரில் ஓர் ‘இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்பதை நாம் ஏன் அவ்வளவு இயல்பாக நினைத்துப் பார்ப்பதில்லை? காந்தியின் பெயர் என்றால் கிராமத்துப் பள்ளி, எளிய உள்ளூர்ப் பள்ளி என்ற பிம்பம்தான் நமக்குள் உருவாகிறதா?
உலகம் முழுவதும் சத்தியம், அகிம்சை, மனித ஒற்றுமை குறித்த சிந்தனையை விதைத்தவர் காந்தி. அவருடைய பெயரை உள்ளூருக்குள் சுருக்கிவிட்டு, திரையுலகப் புகழையும் விளையாட்டுப் புகழையும் உலகத்தரத்தின் அடையாளங்களாக ஏற்றுக்கொள்கிறோமா?
இது பள்ளிகளின் பெயர்களைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல. நாம் எதை உயர்வாக மதிக்கிறோம், யாரை நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறோம் என்ற கேள்வியும் ஆகும்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கவனித்தபோது, இத்தனை கேள்விகள் எழுந்தன.
Leave A Comment