
இன்று நான் சந்தித்த ஒரு சூக்குமவள்ளி
வழக்கம்போல இன்று காலையில் ஆறு மணிக்கு நாவலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தேன்.
என்னுடைய வீடு தாழம்பூரில் இருக்கிறது. அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, ஐந்தே முக்கால் மணிக்கும் ஆறு மணிக்கும் இடையில் நாவலூருக்கு வந்துவிடுவேன். சைக்கிளைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டுப் பேருந்தில் ஏறி, டைடல் பார்க்கில் இறங்குவேன். அங்கிருந்து 5சி பேருந்தைப் பிடித்து, ஆழ்வார்பேட்டை நாரத கான சபா நிறுத்தத்தில் இறங்கி, என்னுடைய அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம்.
ஆறு மணிக்குப் பேருந்து கிடைத்துவிட்டால், சுமார் எட்டு மணிக்குள் அலுவலகத்தை அடைந்துவிடலாம். இடையில் பேருந்துக்காகக் காத்திருக்க நேர்ந்தாலும் எட்டரை மணிக்குள் போய்விடுவேன். அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். பேருந்திலும் பெரும்பாலும் அமர இடம் கிடைக்கும். ஏழு மணிக்கு மேல் புறப்பட்டால், பேருந்தில் கூட்டமும் சாலையில் நெரிசலும் அதிகரித்துவிடும். பயண நேரமும் நீண்டுவிடும். அதனால்தான் ஆறு மணிக்கெல்லாம் வந்து நின்றுவிடுகிறேன்.
வழக்கமாக 102 பேருந்து வந்தால் ஏறிக்கொள்வேன். அதில் ஓரளவு இடம் கிடைக்கும். 19ஆம் எண் பேருந்தும் டைடல் பார்க் செல்லும். அதில் ஒரு வசதி உண்டு. நான் அடுத்து ஏற வேண்டிய 5சி பேருந்து நிற்கும் இடத்திலேயே இறங்கிக்கொள்ளலாம். 102 பேருந்தில் சென்றால், இறங்கிய பிறகு கொஞ்ச தூரம் திரும்பி நடக்க வேண்டும்.
இன்று 19ஆம் எண் பேருந்து வந்ததால் அதில் ஏறிக்கொண்டேன்.
பேருந்து நிரம்பியிருந்தது. அமர இடமில்லை. உள்ளே நிற்பதற்குக்கூடச் சிரமமாக இருந்தது.
பல இருக்கைகளில் இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். காதுகளில் ஹெட்செட்; கண்கள் செல்பேசித் திரையில். அவர்களுடைய கவனமும் உணர்வுகளும் அந்தச் சிறிய தொடுதிரைக்குள் அடங்கியிருந்தன. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.
சில வயதானவர்களும் அமர்ந்திருந்தனர். ஆனால், நின்றுகொண்டிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் வயதானவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களில், கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் வீட்டு வேலை செய்வதற்காக ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் பயணிக்கும் பெண்களும் இருந்தனர். அங்கே போய் நாள் முழுவதும் உழைக்க வேண்டும். அதற்கு முன்பே இவ்வளவு நேரம் நின்றுகொண்டு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
நான் ஏறியிருந்தது தாழ்தளப் பேருந்து. உண்மையில் அருமையான பேருந்து அது. நல்ல சாலையில் செல்லும்போது, பேருந்து நகர்வதே தெரியாது. வெண்ணெய்போல வழுக்கிக்கொண்டு செல்லும். மேடுபள்ளங்கள் இல்லாத சாலையில், சதாப்தி ரயிலில் பயணம் செய்வதுபோல அலுக்கல் குலுக்கல் இல்லாமல் போகும்.
ஆனால், ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. அங்கே பேருந்து இறங்கி ஏறும்போது, உள்ளே நிற்பவர்களும் தங்களைச் சமாளித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பேருந்துதான் குலுங்கிச் சிரமப்பட்டு நகர்கிறதே தவிர, ஓட்டுநர் தன்னுடைய இருக்கையில் சுகமாக அமர்ந்திருக்கிறார். ஒரு காலை மடித்து வைத்துக்கொண்டு, இன்னொரு காலைக் கீழே விட்டுக்கொண்டு, குழந்தைகள் வீட்டில் விளையாட்டுக் காரை ஓட்டுவதுபோல ஸ்டீயரிங் வளையத்தைத் திருப்புகிறார். லேசாகத் திருப்பினாலே அவ்வளவு பெரிய பேருந்தும் அந்தப் பக்கம் திரும்புகிறது!
முன்னால் செல்லும் காருக்குப் பின்னால் பேருந்தை வெகு அருகில் கொண்டுபோய் நிறுத்துகிறார். உள்ளிருந்து பார்க்கும் நமக்குத்தான், ‘‘அந்தக் காரை இடித்துவிடுமோ? முன்னால் நிற்கும் பேருந்தில் மோதிவிடுமோ?’’ என்று பயமாக இருக்கும். ஆனால், ஓரிரு அடி இடைவெளியில் துல்லியமாகக் கொண்டுபோய் நிறுத்துகிறார்.
அது பேருந்தின் இயந்திர அமைப்பா, இயக்கும் வசதியா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அவ்வளவு எளிதாக அந்தப் பெரிய வாகனத்தை இயக்குவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஓட்டுநருக்கு அருகில் நிற்க இடம் கிடைத்தால்தான் இவற்றையெல்லாம் கவனிக்க முடியும். முன்புறத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், பின்னால் சென்று ஏறிக்கொள்வேன்.
இந்தப் பேருந்தில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. தாழ்தளப் பேருந்து என்று பெயர்தான். பின்பகுதிக்குச் சென்றால் திருப்பதி மலையேறுவதுபோல ஏற வேண்டும்! முதலில் இரண்டு படிகள். கொஞ்சம் நடந்த பிறகு மறுபடியும் ஒரு படி. அதற்குப் பிறகு இன்னொரு படி. இப்படியே ஏறிக் கடைசியில், மலை உச்சியை அடைந்ததுபோல, பின்னால் இருக்கும் இருக்கைகளில் அமரலாம்.
அங்கே அமர்ந்தால் தலைக்கும் பேருந்தின் மேற்கூரைக்கும் இடையில் அரையடி இடைவெளிதான் இருப்பதுபோலத் தோன்றும். குலுக்கலும் பின்னால்தான் அதிகம்.
அந்தக் கடைசி வரிசையின் நடு இருக்கையில் அமரும்போது எனக்கு ஒரு கற்பனை வரும். நேரெதிரே பிடித்துக்கொள்ள எதுவும் இருக்காது. பேருந்தின் நடுப்பாதை முழுவதும் முன்னால் நீண்டிருக்கும். இருபுறமும் மக்கள் அமர்ந்தும் நின்றும் இருப்பார்கள்.
மகாராஜா பல்லக்கில் செல்லும்போது இப்படித்தானே இருக்கும்! இருபுறமும் மக்கள் கூட்டம்; எதிரே தங்குதடையில்லாத பாதை!
கால்களை நீட்டிச் சாய்ந்துகொண்டு பார்த்தால், பல்லக்கில் செல்லும் மகாராஜாவாகவே என்னை நினைத்துக்கொள்வேன்.
‘‘ஒரு பேரரசு இருந்து, அதில் நாம் மகாராஜாவாக இருந்தால் இப்படித்தானே பல்லக்கில் தூக்கிக்கொண்டு போவார்கள்!’’
அந்தக் கற்பனையை நினைத்துச் சிரித்துக்கொண்டு சிறிது தூரம் பயணிப்பேன்.
ஆனால், மகாராஜா என்ற நினைப்பில் கண்ணை மூடிக்கொண்டு கற்பனையில் மிதந்துவிடக் கூடாது. ஓட்டுநர் பிரேக்கை லேசாக அழுத்தினால்கூடப் போதும்; மகாராஜா முப்பது அடி முன்னால் பாய்ந்து விழ வேண்டியிருக்கும்!
இந்த நினைவு எனக்கு எப்போதும் இருக்கும். கவனமாக இருக்க முடியாத மனநிலையில் இருந்தால், அந்த நடு இருக்கையில் அமரவே மாட்டேன். எதிரே இருக்கை இருக்கும் பக்கமாக ஒதுங்கி அமர்ந்து, அதன் கம்பியைப் பிடித்துக்கொள்வேன்.
எப்போது திடீரென்று பிரேக் போடுவார்கள், எப்போது சட்டென்று பேருந்தைக் கிளப்புவார்கள் என்பது நமக்குத் தெரியாது. நின்றுகொண்டிருப்பவர்கள் பேருந்தின் அசைவுக்கேற்பத் தள்ளாடிக்கொண்டே இருப்பார்கள். டாஸ்மாக்கில் ஒரு குவாட்டரா, இரண்டு குவாட்டரா என்று அளவு தெரியாமல் குடித்துவிட்டு வந்தவர்கள்போல!
ஆனால், சில இளைஞர்களைப் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். எதையும் பிடித்துக்கொள்ளாமல், இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு, இரு கைகளாலும் செல்பேசியைப் பார்த்தபடியே பயணம் செய்வார்கள். அவர்களைப் பார்க்கும்போது கடலில் அலைச்சறுக்கு விளையாடுபவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். பேருந்தின் அசைவுகளுக்கு ஏற்ப உடலைச் சமநிலைப்படுத்திக்கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு அதுவும் ஓர் அலைச்சறுக்குப் பயணமாக இருக்குமோ!
இத்தனை வேடிக்கைகள் இருந்தாலும், தாழ்தளப் பேருந்துகளின் வருகை முதியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.
மற்ற பேருந்துகளில் முதல் படியிலேயே காலைத் தூக்கி வைப்பது பலருக்குச் சிரமம். முழங்கால் வலியுடன் இருக்கும் வயதானவர்கள் இருபுறக் கம்பிகளையும் பிடித்து, உடலை உந்தித்தான் ஏற வேண்டும். சில நேரங்களில் பின்னால் இருப்பவர் தாங்கி உதவ வேண்டியிருக்கும். கையில் பையும் இருந்தால் இன்னும் சிரமம். அதை யாரிடம் கொடுப்பது? எப்படிப் பிடித்துக்கொண்டு ஏறுவது?
தாழ்தளப் பேருந்தில் ஓட்டுநர் ஒரு பொத்தானை அழுத்தினால், பேருந்து இடதுபுறமாகச் சாய்ந்து, ஏறும் பகுதி இன்னும் தாழ்கிறது. சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளும் ஏறுவதற்கு வசதி இருக்கிறது. அப்படிப்பட்ட பயணிகள் வரும்போது, ஓட்டுநர் இறங்கி வந்து, அதற்கான சாய்வுப் பலகையை அமைத்து, அவர்களை உள்ளே ஏற்ற உதவுவதையும் பார்த்திருக்கிறேன்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தபோது பல இடங்களில் இத்தகைய வசதிகள் பயன்படுவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது நம்முடைய மக்களுக்கும் அந்தச் சௌகரியம் கிடைத்திருக்கிறது.
ஆனால், சில நேரங்களில் ஓட்டுநர் பேருந்தைத் தாழ்த்தாமலேயே நிறுத்தத்தில் நிறுத்துவார். யாராவது சிரமப்படுவதைப் பார்த்தால் மட்டும் கொஞ்சம் தாழ்த்துவார். ஒருவேளை, தேவைப்படும்போது செய்தால் போதும் என்று நினைக்கிறாரோ! அடிக்கடி இயக்கினால் அந்த விசை பழுதாகிவிடுமோ என்ற பரிவு பேருந்தின் மீது இருக்கிறதோ என்னவோ!
எப்படியோ, அது போகட்டும்.
இன்று முன்புறத்தில் கூட்டமாக இருந்ததால், பேருந்தின் பின்னால் சென்று, அந்தத் திருப்பதி மலையில் ஏற ஆரம்பித்தேன். இரண்டு படிகள் ஏறிப் பார்த்தால் அங்கேயும் கூட்டம். அமர இடமில்லை.
வலதுபுற இருக்கையில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஓர் ஆண். அந்தப் பெண்மணிக்கு அறுபது அல்லது அறுபத்தைந்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு வீட்டில் வேலை செய்வதற்குச் செல்பவராக இருக்கலாம் என்று தோன்றியது. அல்லது வியாபாரம் செய்பவராகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.
அவர் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஏதோ ஓர் உணர்வு இருந்தது. இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பார்த்தார். ஓரிரு நிறுத்தங்கள் கடந்த பிறகு, எழுந்திருக்கலாமா என்று யோசிப்பதுபோல இருந்தது. மறுபடியும் என்னைப் பார்த்தார்.
அவருக்கு அருகில் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி நின்றிருந்தேன்.
நான்கு நிறுத்தங்கள் கடந்த பிறகு, அந்த அம்மையார் என்னைப் பார்த்து, ‘‘உட்காருங்க ஐயா’’ என்று சொல்லியபடி எழுந்தார்.
அவர் என்னிடம் சொன்னது அந்த இளைஞனுக்குக் கேட்கவில்லை. அவர் இறங்கப் போகிறார் என்று நினைத்து, காலியான இருக்கையைப் பிடிக்க அவன் வேகமாக முன்வந்தான்.
ஆனால், அந்த அம்மையார் மீண்டும், ‘‘நீங்க உட்காருங்க ஐயா’’ என்று என்னிடம் சொல்லிவிட்டு இருக்கையை விட்டு வெளியே வந்தார்.
அப்போதுதான் அந்த இளைஞனுக்குப் புரிந்தது.
‘‘ஐயா, உட்காருங்க’’ என்று சொல்லி அவனும் ஒதுங்கிக்கொண்டான்.
நான் அமர்ந்துகொண்டேன். அந்த அம்மையார் இறங்கிவிட்டார் என்று நினைத்தேன். அதன் பிறகு அவரைக் கவனிக்கவில்லை.
ஒரு நிறுத்தம் கடந்தது. அடுத்த நிறுத்தமும் கடந்தது. திடீரென்று பார்த்தால், அவர் இறங்கும் படியில் அமர்ந்திருந்தார்!
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘இவர் இறங்கவில்லையா? எனக்காக இருக்கையைக் கொடுத்துவிட்டு, இங்கே வந்து படியில் அமர்ந்திருக்கிறாரா?’’
மனத்திற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவரும் வயதானவர்தானே!
ஆறு, ஏழு நிறுத்தங்கள் கடந்துவிட்டன. சுமார் இருபது நிமிடங்கள் பேருந்து ஓடியிருக்கும். அவர் அந்தப் படியிலேயே அமர்ந்திருந்தார். அவரைக் கடந்தும், அவர் மீது உரசியபடியும் பயணிகள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
பின்னால் திரும்பிப் பார்த்தேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. நான் எழுந்துகொண்டு அவரிடம் சொன்னேன்:
‘‘அம்மா, நீங்க இறங்கப் போறீங்கன்னு நினைச்சேன். நீங்க இறங்கலையா? இங்கே வந்து உட்காருங்க. நான் பின்னால இருக்கிற இடத்துக்குப் போறேன்.’’
‘‘இல்லை, இல்லை ஐயா. இதோ, என்னோட நிறுத்தம் வருது. நான் இறங்குறேன்.’’
அவர் இயல்பாகச் சொல்லிவிட்டு, இறங்குவதற்குத் தயாரானார்.
அவர் படியில் அமர்ந்திருந்தபோது ஒரு புகைப்படம் எடுத்திருந்தேன். அவருடன் இறங்கிச் சென்று, கொஞ்சம் பேசி, நன்றி சொல்லிவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறலாமா என்று நினைத்தேன். ஆனால், எனக்கும் நேரமாகிக்கொண்டிருந்தது. அவருக்கும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். பேசுவதற்காக அவரை நிறுத்தினால், அவருடைய நேரத்தையும் எடுத்துக்கொள்வதாகிவிடுமே என்று தோன்றியது.
அவர் இறங்கிச் சென்றார். என்னுடைய பயணம் தொடர்ந்தது. ஆனால், என் சிந்தனை முழுவதும் அந்த அம்மாவிடமே இருந்தது.
யார் அந்த அம்மா? அவரும் வயதானவர்தானே? எனக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? என்னிடம் எதையும் கேட்கவில்லையே! என்னைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாதே!
ஆனால், அந்த நேரத்தில் எனக்கு அந்த இருக்கை தேவைப்பட்டது. உடலில் அவ்வளவு சோர்வும் வலியும் இருந்தன. ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டு பயணம் செய்வது அன்று எனக்குச் சாதாரணமானதாக இல்லை.
ஏதோ ஒரு சக்தி இயங்குவதாக எனக்குத் தோன்றியது. அது எனக்குள்ளும் இருக்கிறது; அவருக்குள்ளும் இருக்கிறது. அவரை அது எப்படி இயக்கியது என்று தெரியவில்லை. அந்த இயக்கத்தில், எனக்கு ஓர் இருக்கை கிடைக்கும் சூழல் உருவானது.
இது ஏதோ ஒரு சூக்குமமான உண்மையாக எனக்குத் தெரிந்தது.
அதைப் பிரித்துப் பிரித்து அலசுவதில் எனக்கு நாட்டமில்லை. அந்த நிகழ்வில் ஓர் அழகு இருக்கிறது. ஒரு சக்தி இருக்கிறது. ஓர் உண்மை இருக்கிறது. அதைக் கவனிப்பதும், பிறகு மனத்தில் அசைபோடுவதுமே வாழ்க்கையின் ஓர் ஆனந்தமாக எனக்குத் தோன்றுகிறது.
இது இன்று மட்டுமே நிகழ்வதல்ல. இத்தகைய சூக்குமமான சக்தியைத் தாங்கிய ஆண்களும் பெண்களும் நம்மிடையே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் பல நேரங்களில் அவர்களைக் கவனிப்பதில்லை.
நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறோம். அவர்களைப் பற்றிக் குறை சொல்கிறோம். கோள் சொல்கிறோம். வசைபாடுகிறோம். அவர்களைப் பற்றித் தீங்கான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறோம். சில நேரங்களில் வதந்திகளையும் பரப்புகிறோம். இப்படியே நம் சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் இடத்தை நிரப்பிவிடுகின்றன.
ஆனால், இந்த அம்மையாரைப் போன்றவர்கள் நமக்குள் உருவாக்கிவிட்டுச் செல்லும் உணர்வுக்கு நாம் எவ்வளவு இடம் கொடுக்கிறோம்?
அந்த இளைஞனும் முதலில் இருக்கையைப் பிடிக்கத்தான் முன்வந்தான். ஆனால், விஷயம் புரிந்ததும், ‘‘ஐயா, உட்காருங்க’’ என்று ஒதுங்கினானே! அதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அந்த அம்மையார் செய்ததை ‘உதவி’ என்ற ஒரு சொல்லுக்குள் அடக்க எனக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவரை இயக்கியது. அவர் எழுந்து எனக்கு இருக்கை கொடுத்தார். நான் அமர்ந்துகொண்டேன். அவர் படியில் அமர்ந்தார். பிறகு, எதுவுமே நடக்காததுபோலத் தன் நிறுத்தத்தில் இறங்கிச் சென்றார்.
ஆனால், எனக்குள் ஒரு நன்றி உணர்வைப் பொங்க வைத்துவிட்டுச் சென்றார்.
இரண்டு நாட்கள் ஆனாலும் சரி, இரண்டு ஆண்டுகள் ஆனாலும் சரி, அவரை நினைக்கும்போது அந்த நன்றி உணர்வு எனக்குள் மீண்டும் பொங்கும் என்று தோன்றுகிறது. அந்த நன்றியே மகிழ்ச்சியாக மாறுகிறது.
இந்தச் சக்தி என்ன? இது என்ன சூக்குமமான சக்தி?
இது பெண்களிடம் மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களிடமும் இருக்கிறதா? அல்லது ஆண், பெண் இருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மையின் வெளிப்பாடா?
எனக்குத் தெரியவில்லை.
அவருடைய பெயரைக்கூட நான் கேட்கவில்லை. ஆனால், என் மனத்தில் அவர் ஒரு பெயரைப் பெற்றுவிட்டார்.
சூக்குமவள்ளி.

Leave A Comment