
சூ. குழந்தைசாமி
திருமணத்திற்குப் பிறகு பரிகாரனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது.
அதற்கும் ஒரு பின்னணி இருந்தது.
பரிகாரன் தனிக்காட்டு ராஜா. ராஜாவைப் போலவே வாழ்ந்தவன்.
“நாமெல்லாம் ராஜ பரம்பரை!” என்று அவனுடைய அப்பா சிறுவயதிலிருந்தே சொல்லிச் சொல்லி அவனை நம்ப வைத்திருந்தார்.
ஆனால், ஒருவன் ராஜாவாக வாழ்வதற்கு எத்தனை பேர் அவனுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்று பரிகாரன் ஒருபோதும் யோசித்ததில்லை.
அவனுடைய ஜாதகமோ என்னவோ, நவீன காலத்திலும் அவனுடைய ‘ராஜ வாழ்க்கை’க்குக் குறைவில்லை. கார்ப்பரேட் கம்பெனியில் வேலை. மாதம் மூன்று லட்சம் ரூபாய் சுளையாக வங்கிக் கணக்கில் விழும்.
வீட்டைப் பெருக்கித் துடைக்க ஒருத்தி. துணி துவைத்து, காயவைத்து, இஸ்திரி செய்து வைக்க ஒரு பையன். சமையலுக்கு ஓர் அம்மா. கார் ஓட்ட டிரைவர். குடியிருக்க மூன்றடுக்கு வில்லா. காலை மாலை வாக்கிங் போகவும், கதை அடிக்கவும் நண்பர்கள் கூட்டம்.
இதற்கெல்லாம் மேலாக, எந்தக் காரியத்தை எப்போது தொடங்க வேண்டும் என்று நேரம் குறித்துத் தர ஒரு ஜோசியர்!
எந்தக் கோயிலுக்குப் போக வேண்டும், எந்தப் பூவை எடுத்துச் செல்ல வேண்டும், எந்த நிற உடை அணிய வேண்டும், எந்தத் திசையில் நின்று என்ன மந்திரம் சொல்ல வேண்டும்—எல்லாவற்றையும் ஜோசியரிடம் கேட்டுத்தான் செய்வான்.
இப்படி வாழ்க்கை ராஜபோகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது,
‘பெண்டாட்டி என்ற பெயரில் ஒரு பெண்ணை வீட்டுக்குள் கொண்டுவந்து எதற்கு மாட்டிக்கொள்ள வேண்டும்?’
என்பதே அவனுடைய எண்ணம்.
திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான்.
ஆனால் அந்த ஜோசியரே ஒருநாள்,
“உனக்கு இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்த பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவது மகனுடைய கடமை!”
என்று சொன்னார்.
ஜோசியர் சொல்லிவிட்டாரே!
திருமணம் செய்துகொண்டான்.
பெயருக்கு ஏற்றாற்போலவே குணவதி—எளிமை, பாசம், பண்பு, அன்பு நிறைந்தவள்.
மனைவி வந்த மறுநாளிலிருந்து வீட்டுப் பணியாளர்கள் ஒவ்வொருவராக நிறுத்தப்பட்டார்கள்.
“இனி வீட்டைப் பார்த்துக்கொள்ள குணவதி இருக்கிறாளே!”
பரிகாரனின் கணக்கு அவ்வளவுதான்.
வீட்டின் அத்தனை வேலைகளையும் அவள் செய்தாள்.
அதோடு முடிந்ததா?
டைனிங் டேபிளில் எல்லாம் இருந்தாலும் குணவதி பக்கத்தில் நின்று ஒவ்வொன்றாக எடுத்துப் பரிமாற வேண்டும்.
சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவந்து, அவனுடைய கையைப் பிடித்துக் கழுவிவிட வேண்டும்!
முதல் வருடம் அவனுடைய செய்கைகள் அவளுக்குக் குழந்தைத்தனமாகத் தெரிந்தன. பாசத்தால் பொறுத்துக்கொண்டாள்.
இரண்டாம் வருடம் வெகுளித்தனமாகத் தெரிந்தது. பரிவால் பொறுத்துக்கொண்டாள்.
மூன்றாம் வருடம் அன்பால் மாற்றிவிடலாம் என்று நினைத்தாள்.
ஐந்தாம் வருடமும் அதே நிலை தொடர்ந்தபோது அவளுடைய பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது.
ஒருநாள் பரிகாரன் டைனிங் டேபிளில் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தான்.
தண்ணீர் பாட்டில் அவனுக்கு முன்னாலேயே இருந்தது.
“குணவதி!”
சமையலறையிலிருந்து ஓடிவந்தாள்.
“இந்த பாட்டில் மூடியைத் திறந்து கொடு.”
அவ்வளவுதான்.
ஐந்து வருடங்களில் முதல் முறையாகக் குணவதி வெடித்தாள்.
“இந்த மேசையில உட்கார்ந்து பேப்பர்தானே படிக்கிறீங்க? பாட்டில் மூடியை நீங்களே திறந்துக்கிட்டா என்ன?”
பரிகாரன் அதிர்ந்துபோனான்.
இப்படி ஒரு வார்த்தையை அவன் வாழ்நாளில் கேட்டதில்லை!
உடனே காலண்டரைப் பார்த்தான்.
மகாளய அமாவாசைக்கு இன்னும் ஒரு வாரம்தான்!
திருமணத்திற்கு முன்பு நண்பன் முகுந்த் சொன்னது நினைவுக்கு வந்தது.
“டேய்! அமாவாசை, பௌர்ணமின்னு வந்துட்டா பெண்டாட்டிங்க கத்துவாங்க, அடிப்பாங்க, லூசாயிடுவாங்க. ஜாக்கிரதை! அதனாலதான் சொல்றேன்—கல்யாணமே வேண்டாம்டா!”
அந்த வார்த்தைகள் காதில் ஒலித்தன.
சிறிது நேரத்தில் குணவதி அருகில் வந்தாள்.
“சாரிங்க… உடம்பெல்லாம் என்னவோ வலிச்சது. அதனால கோபத்துல ஏதோ கடுமையா ஒரு வார்த்தை சொல்லிட்டேன். மன்னிச்சுக்குங்க.”
“இல்ல! இல்ல! இப்பெல்லாம் உன் போக்கே சரியில்லை. உன்னையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்!”
என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
கார் நேராக ஜோசியர் வீட்டிற்குப் பறந்தது.
அவர் சாதாரண ஜோசியர் அல்ல.
கார்ப்பரேட் ஜோசியர்!
சாமிப் படங்கள், எல்.இ.டி. விளக்குகள், குளிர்சாதன வசதி, லேப்டாப், பிரிண்டர்—எல்லாம் கொண்ட நவீன ஆன்மிக அலுவலகம்!
உள்ளே நுழைவதற்கு முன் பெரிய தாம்பாளத்தில் பழங்களோடு பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றையையும் வைக்க வேண்டும். பிறகு சாமியாரின் காலில் விழ வேண்டும்.
பரிகாரன் தனியாக வரவில்லை. உயிர் நண்பன் முகுந்தையும் அழைத்து வந்திருந்தான். பரிகாரனை முதன்முதலில் இந்தச் சாமியாரிடம் அறிமுகப்படுத்தியதே முகுந்த்தான்.
“என்ன பரிகாரா! எப்படி இருக்கே? குணவதி எப்படி இருக்கா? அன்பு பொங்குதா?”
நீண்ட தாடியை உருவிக்கொண்டே கேட்டார் சாமியார்.
பரிகாரனுக்குப் பேச்சே வரவில்லை.
முகுந்த்தான் ஆரம்பித்தான்.
“சாமி! அடங்காப்பிடாரி மனைவி! அவளோட கொடுமை தாங்க முடியல சாமி!”
பிறகு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான்.
“என்னப்பா அங்க பார்க்கிறே?” என்றார் சாமியார்.
“இல்ல… சாமியம்மா…”
“வருஷக்கணக்கா ஆச்சுப்பா அவளை விட்டுத் தொலைச்சு! ‘ஏறுக்கு மாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்!’ அப்படித்தான் சாமியாராயிட்டேன். இப்ப ரொம்ப நிம்மதி!”
என்று சொல்லி வலப்பக்கம் திரும்பினார்.
சீடன் உடனே பெரிய டம்ளரில் பாதாம்பால் நீட்டினான்.
ஆற அமரக் குடித்தார். மீசையிலும் தாடியிலும் ஒட்டியிருந்த பாலைக் பட்டுத் துண்டால் துடைத்தார்.
பிறகு கண்களை மூடிக்கொண்டார்.
சிறிது நேரம் கழிந்தது.
“சாமி…” என்று மெதுவாக அழைத்தான் முகுந்த்.
கண்களைத் திறந்தார்.
முகத்தில் ஞானப் புன்னகை.
“பரிகாரா… இது சாதாரண விஷயம் இல்லை. இது பெண்டாட்டி விஷயம்!”
பரிகாரன் நடுங்கினான்.
“பெண் தெய்வமல்லையா? பித்ருக்கள் தோஷம் போட்டு ஆட்டி வைப்பாங்க—பெண்டாட்டி மூலமா!”
“சாமி! என்ன சொல்றீங்க?”
“எத்தனை ஜென்மமா, எத்தனை பரம்பரையா உங்க குடும்பத்து ஆண்கள் பெண்டாட்டி தாசன்களாகி மூதாதையர்களை அவமதிச்சிருக்காங்களோ யாருக்குத் தெரியும்? குடும்பத்தில ஒவ்வொருத்தருக்கும் ஓர் இடம் இருக்கு. அந்த எல்லையை மீறினா தெய்வக் குற்றம்!”
“சாமி! நான் பெண்டாட்டிதாசன் இல்லையே!”
“அடே பரிகாரா! ஒரே ஒரு வார்த்தை உன்னை எதிர்த்துப் பேசினதுக்கே அலறி அடிச்சுக்கிட்டு எங்கிட்ட ஓடிவந்திருக்கே! இன்னும் ரெண்டு வார்த்தை பேசினா அவ கால்ல விழுந்துருவே!”
முகுந்த் மெல்லக் கேட்டான்:
“அப்போ சாமி… மனைவியை அடக்கி வைக்க ஏதாவது பரிகாரம் சொல்லுங்க.”
சாமியார் கண்களை மூடினார்.
சட்டென்று திறந்தார்.
லேப்டாப்பில் ‘டக்… டக்… டக்…’
பிரிண்டர் இரண்டு தாள்களைக் கக்கியது.
பரிகாரன் வாங்கிப் பார்த்தான்.
ஒரே நாளில் ஒன்பது கோயில்கள்!
ராமேஸ்வரம் முதல் காசி வரை!
அதிகாலை ஒரு மணிக்குத் தொடங்கி இரவு பன்னிரண்டு மணிக்குள் எல்லாப் பரிகாரங்களையும் முடிக்க வேண்டும்!
“சாமி! இது எப்படி முடியும்?”
“அட மடையா! விமானத்தில போ! ரயில்ல போ! கார்ல போ! க்யூல நிக்காதே. துட்டைக் கொடுத்தா உடனடியா பரிகாரம் செய்ய ஆட்கள் இருக்காங்க. இது சீரியஸ் விஷயம்!”
பரிகாரன் தயங்கினான்.
“வேற வழியே இல்லையா சாமி? ஏகப்பட்ட செலவாகுமே…”
சாமியார் அவனை உற்றுப் பார்த்தார்.
“அப்படியா? சரி. பிளான் ‘ஏ’ விட்டுருவோம். பிளான் ‘பி’க்குப் போவோம்!”
மீண்டும் லேப்டாப்.
‘டக்!’
பிரிண்டரில் ஒரு தாள் வெளிவந்தது.
“உனக்கு நல்ல நேரம்ப்பா! வர்ற சனிக்கிழமை மகாளய அமாவாசை. ஜென்மம் ஜென்மமா ஒட்டிக்கிட்டிருக்கிற பித்ரு தோஷத்தை அன்னைக்கே விரட்டிடலாம்!”
இருவரும் சாமியாரின் முகத்தையே பார்த்தார்கள்.
“அன்னைக்கு உங்க மனைவிங்களை அவங்க அறைக்குள்ளேயே பூட்டி வச்சிருங்க.”
இருவரும் திடுக்கிட்டார்கள்.
“அவங்க நடந்த இடம், தொட்ட பாத்திரம், சமையலறை, வீடு—எல்லாத்தையும் நீங்களே கழுவிச் சுத்தம் பண்ணணும்.”
இருவருடைய முகமும் சுருங்கியது.
“வேற ஆளை வேலைக்கு வச்சீங்கன்னா அவங்களோட பித்ரு தோஷமும் உங்களை ஒட்டிக்கும்!”
இப்போது இன்னும் சுருங்கியது.
“சமையலும் நீங்களே செய்யணும். பிள்ளைகளை நீங்களே பார்த்துக்கணும். எல்லாம் முடிச்ச பிறகு நான் தர்ற தீர்த்தத்தை மனைவி மேல தெளிச்சு, அவளைக் குளிக்க வச்சு, நல்ல சாப்பாடு போட்டு சாப்பிட வைக்கணும்.”
“சாமி…!”
“இன்னும் முடியல!”
இருவரும் வாயை மூடிக்கொண்டார்கள்.
“எல்லாம் முடிஞ்ச பிறகு மனைவியைப் பூஜை அறையில நிற்க வச்சு,
‘ஓம் மனைவியே நம:!
ஓம் மனைவியே நம:!
ஓம் மனைவியே நம:!’
என்று மூன்று முறை சொல்லி அவள் காலில் விழுந்து வணங்கணும்!”
பரிகாரனும் முகுந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“சாமி… இது பரிகாரமா?”
“அதுதான் பரிகாரம்! முக்கியமா—அவள் உங்க கால்ல விழுந்துடக் கூடாது. நீங்கதான் அவள் கால்ல விழணும். அப்பத்தான் பூஜை நிவர்த்தியாகும்!”
“என்னடா இது… கிணறு வெட்டப் பூதம் கிளம்புதே!” என்று முணுமுணுத்தான் முகுந்த்.
“போங்க! வெற்றி உங்களுக்கே!”
என்று ஆசீர்வதித்து அனுப்பினார் சாமியார்.
சனிக்கிழமை.
அதிகாலை நான்கு மணி.
வழக்கம்போல் எழுந்த குணவதி காபி போடுவதற்காக அறையை விட்டு வெளியே வர முயன்றாள்.
கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது!
அருகில் படுத்திருந்த ஆறு வயது மகனையும் காணவில்லை.
“என்னங்க! என்னங்க! கதவு ஏன் பூட்டியிருக்கு?”
வெளியிலிருந்து பரிகாரனின் குரல்.
“நாலு மணி நேரம் பொறுமையா உள்ளேயே இரு. பித்ரு தோஷப் பரிகாரம் பண்ணிக்கிட்டிருக்கேன்!”
“என்னங்க! வீடு பெருக்கணும், துடைக்கணும், பாத்திரம் தேய்க்கணும்… நீங்க ஒண்டியா என்ன பண்ணுவீங்க? கதவைத் திறங்க. நான்தான் வேலை செய்யப் பிறந்தவ! நீங்க ராஜ பரம்பரை!”
“இன்னைக்கு மட்டும் பேசாம உள்ளேயே இரு!”
பரிகாரன் வேலையைத் தொடங்கினான்.
வீடு முழுவதும் பெருக்கினான்.
பாத்திரங்களைத் தேய்த்தான்.
டெட்டால், பினாயில் என்று கிடைத்ததையெல்லாம் ஊற்றி வீடு முழுவதையும் மாப் போட்டான்.
மஞ்சள் தண்ணீர் தெளித்தான்.
தனக்குத் தெரிந்த மந்திரங்களையெல்லாம் உரக்கச் சொன்னான்.
வேர்த்து விறுவிறுத்தது.
ஆனால் விசித்திரமாக அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது.
‘நம்ம கையாலேயே வீடு இவ்வளவு சுத்தமா ஆகுதே!’
செல்போனில் யூடியூப் பார்த்துச் சமையல் செய்தான்.
மகன் எழுந்ததும் அவனைக் குளிப்பாட்டினான். உடை அணிவித்தான்.
பிறகு தானும் குளித்தான்.
எல்லாம் முடிந்தபோது மணி எட்டு.
சாமியார் கொடுத்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு மனைவியின் அறைக் கதவைத் திறந்தான்.
அறையிலும் குணவதி மீதும் தீர்த்தத்தைத் தெளித்தான்.
“குணவதி… இப்ப வெளியே வா.”
அவனுடைய குரலில் இருந்த கனிவு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வெளியே வந்த குணவதி வீட்டைப் பார்த்தாள்.
ஒரே அதிர்ச்சி!
“என்னங்க! இம்புட்டுப் பாத்திரங்களையுமா நீங்க தேய்ச்சீங்க? வீடு இவ்வளவு சுத்தமா இருக்கு!”
அவள் கண்கள் கலங்கின.
“ஐயய்யோ! என் மேல இவ்வளவு கோவமா? ஐந்து வருஷத்துல ஒரு வார்த்தை கடுமையா சொல்லிட்டேன். அதுக்காக உங்களையே இவ்வளவு கஷ்டப்படுத்திக்கிட்டீங்களே! மன்னிச்சுக்குங்க. இனி வாயையே திறக்க மாட்டேன்!”
என்று அழுதபடி அவன் காலில் விழப் போனாள்.
பரிகாரன் பதறிப்போனான்.
‘அடடா! பரிகாரம் உல்டாவாயிடுமே!’
அவளைத் தடுத்தான்.
சட்டென்று அவனே குணவதியின் காலில் விழுந்தான்.
ஒருமுறை.
இரண்டுமுறை.
மூன்றுமுறை.
“ஓம் மனைவியே நம:!
ஓம் மனைவியே நம:!
ஓம் மனைவியே நம:!”
குணவதி திகைத்துப்போய் நின்றாள்.
பரிகாரன் எழுந்தான்.
“குணவதி… தப்பு பண்ணிட்டேன்!”
அவன் குரல் தழுதழுத்தது.
“இந்த நாலு மணி நேரத்துல வீட்டைப் பெருக்கினேன், துடைச்சேன், பாத்திரம் தேய்ச்சேன், சமையல் பண்ணினேன், பையனைக் குளிப்பாட்டினேன். ஏதோ புதுசா இருந்தது. ஆனா… சந்தோஷமாவும் இருந்தது.
இதையெல்லாம் நீ தினமும் தனியா செஞ்சிருக்கே!
வேலைக்காரங்களை நிறுத்திட்டு எல்லா வேலையையும் உன் தலையில கட்டினேனே!
கணக்குப் பார்த்தா இதுக்கெல்லாம் மாதம் இருபதாயிரம் ரூபாய் கொடுக்கணும். இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுவேலை செய்வோம். அந்த இருபதாயிரத்தை மாதம் சேமிப்போம். ஒரு சொந்த வீடு வாங்குவோம்!”
குணவதி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக அவளுக்குக் கணவன் அருகில் இருப்பதுபோல் தோன்றியது.
அவனுடைய மார்பில் சாய்ந்தாள்.
பரிகாரன் மனதுக்குள் சாமியாருக்கு நன்றி சொன்னான்.
ஆனால்—
அவன் முழுவதுமாக மாறிவிட்டானா?
இல்லை!
‘நாலு மணி நேரம் மனைவியை அறைக்குள்ள பூட்டி வைக்க முடிஞ்சுதே! பரிகாரமும் வெற்றியா முடிஞ்சுது!’
என்ற ஒரு பெருமிதம் இன்னும் உள்ளே இருந்தது.
‘நான் யார்? ராஜ பரம்பரை!’
என்று மனதுக்குள் மீசையை முறுக்கிக்கொண்டான்.
அப்போது முகுந்திடமிருந்து ஃபோன்.
“ஆமாண்டா! பூஜை வெற்றிகரமா முடிஞ்சது!”
சிறிது நேரம் கேட்டுவிட்டு,
“என்ன? நாளைக்கு வாக்கிங்கா? இனிமே நான் தனியா போய்க்கிறேன். நீயும் தனியா போ. வீட்டுல ஏகப்பட்ட வேலை இருக்குடா! ஆபீஸ் வேலை மட்டும் வேலை இல்ல. வீட்டுவேலையும் வேலைதான். நீயும் பித்ரு தோஷம் திரும்ப வராம பார்த்துக்கோ! பை!”
ஃபோனை வைத்தான்.
அதே நேரம் குணவதியின் செல்போனில் ஒரு மெசேஜ்.
முகுந்தின் மனைவியிடமிருந்து.
“குணா, நம்ம ரெண்டு பேரு வீட்டுல நடந்த பூஜையைப் பற்றிச் சாமியாருக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்.
ஏற்கனவே நாம ரெண்டு பேரும் சாமியாரைப் போய்ப் பார்த்தது நம்ம புருஷனுங்களுக்குத் தெரியாது. உளறி வச்சிறாதே!
சாமியார் அனுப்பிய மெசேஜை ஃபார்வர்ட் பண்ணியிருக்கேன். பாரு!”
குணவதி ஆவலுடன் திறந்தாள்.
சாமியாரின் செய்தி:
“என் அன்பு மகள்களே,
நீங்கள் என்னை வந்து பார்த்ததற்கும், என்மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி.
உங்க புருஷன்களுக்கு உங்க அருமை தெரியல. பெண்டாட்டியோட அருமை தெரியாதவன் கடைசியில் சாமியாராப் போறதுக்குத்தான் லாயக்கு. என்னைப் போல!
உங்க புருஷனுங்க ரெண்டு பேருமே குழந்தைங்க மாதிரி. கொஞ்சம் பொறுமையாப் பார்த்துக்குங்க. இனிமே நல்லா நடந்துக்குவாங்கன்னு நினைக்கிறேன்.
பரிகாரன் கொடுத்த பத்தாயிரம் ரூபாயையும் என் சீடன் மூலமா உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.
பெண் பாவம் பொல்லாதது!
சாமியார் நானே அதுக்குப் பயப்படுறேன் என்பது யாருக்குத் தெரியும்?
அடுத்த ஜென்மத்திலயாவது ஒரு நல்ல புருஷனா இருக்க முயற்சி செய்றேன்.
நீங்கள்தான் என்னை ஆசீர்வதிக்கணும்!”
மெசேஜைப் படித்து முடித்த குணவதி கணவனைப் பார்த்தாள்.
அவன் ஒன்றும் தெரியாமல் சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான்.
அவள் உதட்டில் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.
பித்ரு தோஷம் போனதோ இல்லையோ—
‘ராஜ பரம்பரை’க்கு முதல் முறையாக வீட்டுவேலை பிடித்திருந்தது!

Leave A Comment