ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ஆசிரியையின் கண்களிலும் நீர் நிறைந்தது.
அரவிந்தன் தொடர்ந்தான்:
“நீ அம்மாவைப் பார்த்ததில்லையே பாட்டி…”
“அவங்க என்னைக் கையால அடிக்கும்போது… அந்தக் கை என் மேல படும்போது…”
அவன் தேம்பினான்.
“அம்மாவே என்னைத் தொடுற மாதிரி இருக்கு பாட்டி…”
பாட்டியின் கை பேரனின் தலையைத் தடவியது.
அரவிந்தன் அந்தக் கையைப் பிடித்துக்கொண்டான்.
“அதனாலதான் கம்பை ஒளிச்சேன்.”
சிறிது நேரம் அமைதி.
பிறகு மிகவும் மெதுவாகச் சொன்னான்:
“டீச்சர் கன்னத்தைத் தொட்டுப் பார்க்கணும்னுகூட எனக்கு ஆசையா இருக்கு பாட்டி…”
அதற்குமேல் ஆசிரியையால் ஜன்னலுக்கு வெளியே நிற்க முடியவில்லை.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினார்.
அரவிந்தன் திடுக்கிட்டு எழுந்தான்.
“டீச்சர்…!”
அடுத்த நொடி—
அவர் அவனை வாரி அணைத்துக்கொண்டார்.
அரவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆசிரியையின் கண்ணீர் அவனுடைய தலைமீது விழுந்தது.
அவருடைய கைகள் அவனுடைய முதுகை வருடின.
அரவிந்தன் முதலில் அமைதியாக இருந்தான்.
பிறகு—
“அம்மா…”
என்று மிக மெதுவாக அவனிடமிருந்து ஒரு குரல் வந்தது.
ஆசிரியையின் அணைப்பு இன்னும் இறுகியது.
அதுவரை அடிவாங்கும்போதுகூட அழாத அரவிந்தன்—
அன்று அழுதான்.
தேம்பித் தேம்பி அழுதான்.
ஆறு வயதில் அடக்கிவைத்த அழுகையெல்லாம் அன்று வெளிவந்ததுபோல் அழுதான்.
அவனுடைய தேம்பல் அடங்க வெகுநேரமானது.
மறுநாள் வகுப்பறைக்கு ஆசிரியை வந்தார்.
மேசை அருகே நின்றார்.
குழந்தைகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
அவருடைய பார்வை ஒரு கணம் அரவிந்தனைத் தேடியது.
அவன் வழக்கம்போலப் புன்னகைத்தான்.
ஆசிரியையும் புன்னகைத்தார்.
பிறகு மேசையின் ஓரத்தில் இருந்த அந்தக் கம்பை எடுத்தார்.
குழந்தைகள் அமைதியானார்கள்.
ஆசிரியை அந்தக் கம்பைப் பார்த்தார்.
ஒரு கணம் அரவிந்தனைப் பார்த்தார்.
பிறகு—
அதை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு வெளியே சென்றார்.
திரும்பி வந்தபோது அவர் கையில் கம்பு இல்லை.
அன்றிலிருந்து—
அந்த வகுப்பில் எந்தக் குழந்தையின் மீதும் கம்பு விழவில்லை.
அரவிந்தன் மட்டும் மாறவில்லை.
அவன் அவ்வப்போது ஆசிரியையின் அருகில் வந்து நின்றுகொண்டுதான் இருந்தான்.
ஆனா இப்போது ஆசிரியை,
“போடா… போய் உட்கார்!”
என்று விரட்டுவதில்லை.
அவனுடைய தலையை மெதுவாகத் தடவுவார்.
அரவிந்தன் கண்களை மூடிக்கொள்வான்.
அந்த ஒரு கணத்தில்—
அவனுக்கு மீண்டும் அம்மா கிடைத்துவிடுவாள்.
எழுதியவர்:
சூ. குழந்தைசாமி
Share This Post :
2 Replies to “சிறுகதை : அம்மாவின் கை”
Kayalvizhi
28 Aug 2026
Really amazing story. Tears on eyes. I am also have stick to beat students… Now… What I do… I will try to change myself sir… Thank you… Always inspiring sir..
2 Replies to “சிறுகதை : அம்மாவின் கை”
Really amazing story. Tears on eyes. I am also have stick to beat students… Now… What I do… I will try to change myself sir… Thank you… Always inspiring sir..
அன்பே வாழ்கை, மற்றது குப்பை, அதுவும் மக்கா குப்பை.