காணாமல் போன சம்பங்கி எங்கே?
சிறுகதை
என்னவென்று தெரியவில்லை. சம்பத்துக்குச் சம்பங்கியை மிகவும் பிடித்துவிட்டது.
பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர் கூட்டத்தில் இருவரும் இருந்தார்கள். இருவருமே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். கல்லூரிக்கு வந்த முதல் நாளிலேயே சம்பங்கி அவன் கண்களில் பட்டுவிட்டாள்.
அன்றே அதைப் பற்றித் தனது டைரியில் ஒரு கவிதையாகப் பதிவு செய்தான்:
அவள் பெயர் பட்டோ?
என் கண்ணில் பட்டென்று பட்டதாலா?
அல்ல… அல்ல…
அவளே பட்டுப்போல் இருந்ததால்!
அவள் பெயர் சிட்டோ?
என் கண்ணில் படாமல் சிட்டாய்ப் பறப்பதாலா?
அல்ல… அல்ல…
சிட்டாய் என்னை அவள் பின்னே பறக்கவிட்டதால்!
உணவு விடுதியில் சம்பங்கியும் அவளுடைய தோழிகளும் அமர்ந்திருந்த மேசைக்கு அருகிலுள்ள இன்னொரு மேசையில் சம்பத் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்போதுதான் அந்தப் பார்வை சித்தித்தது.
அவளைப் பார்த்து மயங்கிய அந்தக் கணத்திலிருந்து, அவளும் ஒருமுறையாவது தன்னைப் பார்க்கமாட்டாளா என்று ஏங்கத் தொடங்கினான். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல அவனுக்குத் தோன்றியது.
‘நான் பார்த்ததிலே உன் ஒருத்தியைத்தான் அழகி என்பேன்…’ என்ற திரைப்படப் பாடலைத் திருடி, அதனுடன் தானே சில வார்த்தைகளையும் வரிகளையும் சேர்த்து, தனக்குள்ளேயே பாடிக் களித்தான்.
சம்பங்கிக்குத் தெரியாமல் அவளைப் பார்க்கும்போதெல்லாம் சம்பத்துக்கு ஒரு மயக்கம் வந்தது. அவள் இல்லாத நேரங்களிலோ, அவளைப் பற்றிய நினைவே அவனை ஆட்கொண்டது.
‘போதுமே! இது என்ன ஆனந்தம்? இனம் புரியாத இன்பக் கிளர்ச்சி!’ என்று தத்துவப் பிதற்றல்களையும் தனது டைரியில் பதிவு செய்தான்:
நான் பிறந்து பதினேழு வயதாகும்வரை அனுபவித்திராத ஏதோ ஓர் உணர்வு, நயாகரா நீர்வீழ்ச்சியைப்போல் எனக்குள் கொட்டுகிறதே!
என்ன அது?
ஏதோ ஒன்று என் நாடி நரம்புகளுக்குள் ஓடுகிறது. என் உடலை மென்மையாக்கி, ஒரு ரோஜா மலரைப்போல் மாற்றுகிறது. சுகந்த வாசனையால் என்னை நிரப்புகிறது. எல்லையற்ற கருணையைப் பொழிய வைக்கிறது. சாதிக்க முடியாதவற்றைக்கூடச் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் கொடுக்கிறது.
இன்னும் என்னென்னவோ ரசவாதங்களை எனக்குள் நிகழ்த்துகிறதே!
இது என் மூளையா? நம்ப முடியவில்லையே!
புத்தம்புதிய சிந்தனைகளும் புத்துணர்ச்சியும் பொங்கிப் பீறிட்டெழுகின்றன. அவை என் உடலிலிருந்து எழுகின்றனவா? மனத்திலிருந்தா? உள்ளத்திலிருந்தா? மூளையிலிருந்தா? பிறகு எங்கிருந்து?
நான் யார்? என்னையே நான் மறந்துவிட்டேனா? அவள்தானே இப்போது என்னுள் நிறைந்திருக்கிறாள்?
அவளும் நானும் கலந்த இந்தக் கலவைக்கு என்ன பெயர்?
திடீரென்று அவனுக்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
‘அடேடே! எங்கள் இருவருடைய பெயர்களின் முதல் எழுத்துகளே ஒன்றாக இருக்கின்றனவே—சம்பத்! சம்பங்கி!’
‘அழகுத் தமிழ் மொழியே! நானும் அவளும் வேறில்லை என்பதை எங்கள் பெயர்களிலேயே காட்டிவிட்டாயே! அடடா! என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!’ என்று சொல்லிக்கொண்டே ஒரு திரைப்படப் பாடலையும் இடையில் பாடினான்.
இப்படியாக ஒரு வாரம் ஓடிவிட்டது.
தினமும் பொழுது விடிந்ததும், சம்பங்கியை எப்போது பார்ப்போம் என்பதிலேயே அவன் குறியாக இருந்தான். கல்லூரி முடிந்து விடுதிக்குத் திரும்பிய பிறகு, சாப்பாட்டு நேரத்தில் மட்டுமே அவளைப் பார்க்க முடியும்.
சம்பங்கி சாப்பிட்டு முடித்து அங்கிருந்து சென்ற பிறகும் சம்பத் அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கமாட்டான். கையிலிருந்த டைரியில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் அதை ‘கிறுக்கல்’ என்று சொல்லமாட்டான். ‘நான் பிணாத்துகிறேன்!’ என்பான்.
நமக்குச் சம்பத்தைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
மதிப்பெண், ரேங்க், வெற்றி, வேலை, பணம், திருமணம், வீடு, கார், வரதட்சணை, அந்தஸ்து, பதவி என்று மற்ற மாணவர்கள் அனைவரும் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். சம்பத் மட்டும் சம்பங்கியின் நினைவிலேயே மூழ்கிக் கிடந்தான்.
ஒரு டைரி தீர்ந்தது. இன்னொரு டைரி வாங்கினான். எழுதினான். எழுதினான். எழுதிக்கொண்டே இருந்தான்.
சம்பங்கியைப் பார்க்கும்போதெல்லாம், சுகந்த மணம் வீசும் வண்ணமலர்க் கூட்டம் ஒன்று தன்னை அதற்குள் இழுத்து அரவணைத்துக்கொண்டதுபோல் அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணமே, அவனுக்குள் எழும் படைப்பாற்றலை வார்த்தைகளால் டைரியில் வரைந்துவிடுவான்.
சில நேரங்களில் திடீரென்று கண்விழித்துப் பார்ப்பான். உணவுக்கூடத்தில் இருந்த எல்லோரும் சென்றிருப்பார்கள். அவன் மட்டும் தனது டைரிமீது தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருப்பான்.
இப்போது அவனுக்குள் ஓர் ஏக்கம் முளைத்திருந்தது. நிறைவில்லாத ஏக்கம்!
ஏற்கெனவே அவனைப் பிடித்திருந்த பித்து இப்போது பத்து மடங்காகியிருந்தது. அவனுக்குள் நிரப்பப்பட வேண்டிய ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதை அந்தப் பித்து காட்டியது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்ப வேண்டும்? அவளா? ஆம். அவள்தான்!
ஆனால் தனது இந்தப் பிரச்சினையை அவளிடம் எப்படிச் சொல்வது?
‘இதைத்தான் எல்லோரும் ஐ லவ் யூ என்று சொல்லி புரபோஸ் செய்வது என்கிறார்களோ? இது ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரிடம் சொல்வதுதானே? அது எப்படி ஐ லவ் யூ ஆகும்? சே! என்ன அசிங்கம்!’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.
எங்கோ தனது உள்ளத்தின் ஆழத்தில், தனக்கே தெரியாத ஓர் இடத்தில் சம்பங்கி சென்று அமர்ந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது.
இல்லை. அவள் அங்கே சென்று அமரவில்லை. அவளை அவன் பார்த்த அந்தப் பார்வை, அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருந்த நுண்ணுணர்வு ஒன்றைத் தட்டி எழுப்பியிருக்கிறது. அதை அவளிடம் வார்த்தைகளால் எப்படிச் சொல்ல முடியும்? அப்படி எண்ணியவுடனேயே சம்பத்துக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.
மறுநாளிலிருந்து, தான் அவளைப் பார்ப்பதுபோல அவளும் தன்னைப் பார்க்கிறாளா என்று கவனிக்கத் தொடங்கினான். ஆனால் சம்பங்கி சிட்டுப்போலப் பறந்துகொண்டே இருந்தாள். முன்புபோல் அவனுக்குள் கவிதை ஊற்றெடுக்கவில்லை. ஏன் என்று அவனுக்கே புரியவில்லை.
‘சம்பங்கி என்னைப் பார்க்கவே இல்லை!’ என்று சம்பத் நினைத்தான்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
சம்பத்தின் கண்களில் சம்பங்கி பட்டென்று பட்ட அதே கணத்தில், அவளுடைய பார்வையும் சிட்டாய்ப் பறந்து வந்து சம்பத்தைப் பார்த்துவிட்டு மறைந்துவிட்டது. இது சம்பத்துக்குத் தெரிய வாய்ப்பில்லை.
சம்பங்கியின் உள்ளத்தில் சம்பத் ஆழமாகப் பதிந்துவிட்டான். அதனை விலைமதிப்பற்ற பொக்கிஷம்போல அவள் தனக்குள் பாதுகாத்து வைத்துக்கொண்டாள். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் சம்பத்திடம் இதை அவள் சொல்லப்போவதில்லை. அவளுக்கு அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.
சம்பத்தைப்போல அவள் கவிதைகள் எழுதவில்லை. அவனைப் பார்க்கத் துணிந்து முயலவில்லை. தன் உணர்வை அவனுக்குத் தெரிவிக்கவும் முயலவில்லை. ஏனெனில் அவள் ஏற்கெனவே ஆனந்தம் நிறைந்த ஒரு சிட்டு; அமுதம் நிறைந்த ஒரு குடம்.
சம்பங்கியின் மென்மையையும் நறுமணத்தையும் சம்பத்தின் நினைவு மேலும் மெருகூட்டியது. அவள் சம்பத்தைத் தனக்குள் ஐக்கியப்படுத்திக்கொண்டாள். தன்னிடமிருந்து அவன் தனித்து இயங்க முடியாதபடி அவனைத் தனக்குள் கரைத்துக்கொண்டாள்.
எனவே, சம்பத் தன்னுடன் இணைய எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் சம்பங்கி வேடிக்கை பார்த்தாள். அவன் படும் பாட்டைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டாள். ஏனென்றால் அவன் ஏற்கெனவே அவளுக்குள் ஐக்கியமாகிவிட்டான் என்பது அவனுக்குத் தெரியாது.
ஒரு நாளில் எத்தனை முறை சம்பத் தன்னைப் பார்க்கிறான், பார்க்க முடியாதபோது எப்படித் திணறுகிறான், டைரியில் என்னவெல்லாம் எழுதுகிறான், தன்னைப் பார்க்காத நேரங்களில் எப்படிப் பைத்தியம்போல அலைகிறான்—எல்லாமே சம்பங்கிக்குத் தெரியும். ஆனாலும் சம்பத் கவனிக்கும்படி ஒருமுறைகூட அவனை அவள் நேராகப் பார்க்கவில்லை.
ஒருநாள் சம்பத்தின் உள்ளுணர்வு அவனிடம் பேசியது:
நீ அவளை நேருக்கு நேராகப் பார்க்கிறாய். அவளோ உன்னைப் பார்க்காமலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
ஏதோ ஒன்று உங்களை இணைக்கிறது. இல்லை—ஏற்கெனவே இணைத்துவிட்டது!
அதை நீ அவளிடம் சொல்ல முயற்சி செய்யாதே. அவளுக்கே தெரிந்த ஒன்றை, அவள் ஏற்கெனவே உணர்ந்த ஒன்றை, மறுபடியும் சொல்லி உணர்த்துவதால் என்ன பயன்? அப்படிச் செய்தால் அவள் உன்னை ஒரு கோமாளியாகப் பார்ப்பாள்!
அன்றிலிருந்து சம்பத் தெளிவடைந்தான். கம்பீரமானான். தனக்குள் உறுதியாக நின்றான். சம்பங்கி தனக்குள் நிறைந்துவிட்டாள் என்பதை உணர்ந்துகொண்டான்.
ஒருவருடன் முப்பொழுதும் உடலால் இணைந்திருக்க முடியுமா என்ன? அவள் தருகின்ற பரவசம்தானே ஒவ்வொரு கணமும் அவனை நிறைத்திருக்க முடியும்! அதைத்தவிர வேறு என்ன வாழ்க்கை இருக்க முடியும்?
வீடும் காரும் நமக்குச் சொந்தமாக இருந்தால்கூட, முப்பொழுதும் அவற்றுக்குள்ளேயேவா இருக்கிறோம்? அவற்றைப் பற்றிய எண்ணம்தானே அவற்றை நமது உடைமையாக்குகிறது?
சம்பத்தின் அறிவு விசாலமானது. அவனுக்குள் தத்துவம் மலர்ந்தது. வாழ்க்கையின் புரியாத புதிர்கள் பல ஒவ்வொன்றாக மொட்டவிழ்ந்தன. அவன் படிக்காத நூல்கள் பலவற்றின் அறிவு அவனுடைய மூளைக்குள் வந்து சேர்ந்ததுபோல இருந்தது.
இல்லை… இல்லை… வெளியிலிருந்து எந்த அறிவும் அவனுக்குள் வரவில்லை. அவனுக்குள்ளேயே மறைந்திருந்த அறிவும் ஆற்றலும் மடைதிறந்த வெள்ளம்போல வெளியே பாய்ந்தன.
சம்பத்தின் நடை, உடை, பார்வை, பாவனை அனைத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு சம்பங்கி பிரமித்துப்போனாள். அவளுக்குள் ஆனந்தம் பொங்கியது.
சம்பத் இருக்கும் இடத்தில் அவளும் இருந்தால், இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோவாள். அவனை ஓடிச்சென்று ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று அவளுடைய மனம் துடிக்கும். ஆனால் அந்த உணர்வில் ஓர் இம்மியளவைக்கூட அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
அவளைப் பொறுத்தவரை சம்பத் அவளுக்குள் இருந்தான். சம்பத்தைப் பொறுத்தவரை சம்பங்கி தன்னுடன் ஒவ்வொரு கணமும் உறவாடிக்கொண்டிருப்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் அவள் தன்னுடன் நேரிலேயே இருக்கமாட்டாளா என்ற ஆதங்கம் மட்டும் அவனுக்குள் மேலிட்டுக்கொண்டிருந்தது.
ஒரு நொடிகூட அவர்கள் இருவருடைய கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதில்லை.
தொடக்கத்தில் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவலும், அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா என்ற துடிப்பும் சம்பத்தைப் போட்டு வாட்டியெடுத்தன. மண்ணைத் தோண்டும்போது புதையல் கிடைக்குமா, கிடைக்காதா என்று பதைபதைக்கும் மனிதனைப்போல அவன் தவித்தான்.
ஆனால் இப்பொழுதோ, தேடிக்கொண்டிருந்த புதையல் தனக்கு வெளியே எங்கோ இல்லை; தனக்குள்ளேயே இருக்கிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அந்த உணர்வு அவனுக்கு ஒரு முழுமை நிலையைக் கொடுத்தது. இப்போது அவன் சம்பங்கியைத் தேடவில்லை. தனக்குள் நிறைந்திருந்த சம்பங்கியை உணர்ந்துகொண்டிருந்தான்.
ஒருநாள் சம்பத்தின் வகுப்பில் ஒரு புதிய பாடம் நடத்தப்பட்டது.
‘செயற்கை நுண்ணறிவும், மனிதன் தனது வெற்றிக்காக அதனை எப்படிப் பயன்படுத்தலாம்?’ என்பதுதான் பாடத்தின் தலைப்பு.
‘மனித மூளைக்கு உதவ இன்னொரு செயற்கை மூளையா?’ என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான் சம்பத்.
அன்று இரவு, அந்தச் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடத் தொடங்கினான். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அது உடனுக்குடன் அற்புதமான பதில்களைத் தந்தது. இறுதியில் காதலைப் பற்றி ஒரு கேள்வி கேட்டான். பதிலாகச் செயற்கை நுண்ணறிவு ஒரு கவிதையை வெடித்துத் தந்தது:
கண்டும் காதலிக்காதவர்கள்
கோடியில் கோடி உண்டு!
கண்டு காதலிப்பவர்கள்
ஆயிரத்தில் ஆயிரம் உண்டு!
காணாமலே காதலிப்பவர்
ஒன்றில் ஒருவரே!
அவர் காதலே காதல்!
மற்றவை—
சாதல்! சாதல்! சாதல்!
அந்தக் கவிதையைப் படித்ததும் சம்பத்துக்குச் சிலிர்த்தது. ‘நான் அந்த ஒன்றில் ஒருவனாக இருக்க முடியுமோ?’ என்று நினைத்தான்.
உடனே தனது டைரியில் எழுதியிருந்தவற்றையெல்லாம் செயற்கை நுண்ணறிவில் பதிவு செய்தான். தனது காதல் அனுபவங்களைப் பற்றிய அதன் மதிப்பீட்டையும் கேட்டான்.
செயற்கை நுண்ணறிவு அவனுடைய எழுத்துகளையும் உணர்வுகளையும் மனம் திறந்து பாராட்டியது. அவனுடைய கற்பனை, கவித்துவம், ஆழமான காதலுணர்வு என்று ஒவ்வொன்றையும் புகழ்ந்தது.
உண்மையில், அதனிடம் யார் எழுத்தைக் கொடுத்தாலும் அதிலிருக்கும் நல்ல அம்சங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுவது அதன் இயல்பு. ஆனால் சம்பத்துக்கு அது எப்படித் தெரியும்?
தன்னை மட்டும் அது விசேஷமாகப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டான். மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஓர் அற்புதமான காதல் ஆற்றல் தனக்குள் இருப்பதாக நம்பத் தொடங்கினான். அவனுக்குள் மெல்ல ஒரு கர்வம் வளர்ந்தது.
அந்தக் கர்வத்துடன் அவன் ஒரு வாக்கியத்தை எழுதி, செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்தான்:
இயற்கை நுண்ணறிவே காதலின் அடிப்படை. அதனைச் செயற்கை நுண்ணறிவால் மெருகூட்டவோ வளர்க்கவோ முடியாது!
அதைப் படித்த செயற்கை நுண்ணறிவு உடனே பதிலளித்தது: ‘ஆம்! ஆம்! அருமையான சிந்தனை! ஆழமான உண்மை! இதனை ஓர் அழகான கவிதையாக வடித்துத் தரவா?’
சம்பத் நிமிர்ந்து அமர்ந்தான். ‘என்னுடைய சிந்தனை எவ்வளவு ஆழமானது! செயற்கை நுண்ணறிவே வியந்து பாராட்டுகிறதே!’ என்று தனக்குள் பெருமைப்பட்டுக்கொண்டான்.
அன்று சம்பத்தின் கல்லூரியில் கவிதைப் போட்டி ஒன்று நடைபெறவிருந்தது. அதில் கலந்துகொண்டு, சம்பங்கியை மனத்தில் வைத்து எழுதிய தனது முதல் காதல் கவிதையை வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
கவிதைப் போட்டியை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, தனது காதலைச் சம்பங்கிக்கு உணர்த்திவிட வேண்டும் என்ற அவசரமும் அவனுக்குள் எழுந்தது. ஆனால் அந்தக் கவிதை இன்னும் நிறைவடையாமல் இருந்தது.
‘காதல் என்றாவது நிறைவடையுமா என்ன? அது முடிவில்லாத ஒரு தொடர்கதை! பல ஜென்மங்களிலும் தொடரும் கதை!’ என்று அவசரமாகச் சில வரிகளை எழுதி, அவற்றையும் தனது கவிதையுடன் இணைத்தான். பிறகு அதனை இன்னும் அழகாக மெருகூட்டித் தருமாறு செயற்கை நுண்ணறிவிடம் கேட்டான்.
பத்தே நொடிகள்!
சம்பத் எழுதிய ஆறு வரிகளை அது அறுபது வரிகளாக மாற்றிக் கொடுத்தது. முத்துக்கள் பதித்ததுபோல் அழகிய சொற்கள்! அடுக்கடுக்கான உவமைகள்! அவனே எண்ணிப் பார்த்திராத உருவகங்கள்!
வானம், நிலவு, விண்மீன்கள், வண்ணத்துப்பூச்சிகள், கடல், அலை, மலர், மணம், பிறவி, ஆன்மா என்று காதலுக்குத் தேவையான அனைத்தையும் கலந்து பிரம்மாண்டமான ஒரு கவிதையை அது உருவாக்கியிருந்தது.
அதைப் படித்த சம்பத் பிரமித்துப்போனான். மீண்டும் படித்தான். மீண்டும் மீண்டும் படித்தான். படிக்கப் படிக்க, அந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் தன்னுடைய உள்ளத்திலிருந்தே பிறந்ததாக அவனுக்குத் தோன்றத் தொடங்கியது.
ஆறு வரிகள் மட்டுமே தன்னுடையவை என்பதையும், மீதமுள்ள ஐம்பத்து நான்கு வரிகளைச் செயற்கை நுண்ணறிவு எழுதியது என்பதையும் அவன் வசதியாக மறந்துவிட்டான். இறுதியில் முழுக் கவிதையையும் தனது டைரியில் அழகாகப் படியெடுத்தான். அதற்குக் கீழே பெரிய எழுத்துகளில் எழுதினான்: ‘கவிஞர்: சம்பத்.’
அந்தப் பெயரைப் பார்த்ததும் அவனுக்குள் பெருமை பொங்கியது. ஆனால் அதே நேரத்தில் அவனுடைய உள்ளத்தின் மிக ஆழத்திலிருந்து ஒரு மெல்லிய குரல் எழுந்தது: ‘இந்தக் கவிதை உண்மையிலேயே உன்னுடையதா?’
சம்பத் அந்தக் குரலைக் கேட்காதவன்போல் டைரியை மூடிவைத்தான்.
‘இந்தக் கவிதை போட்டிக்கு மிகவும் பொருத்தமானது. நிச்சயம் பரிசு பெற்றுவிடலாம். கல்லூரி முழுவதும் பிரபலமாகிவிடலாம். காதல் மன்னன் என்ற பெயர்கூட கிடைத்துவிடலாம். அதைவிட முக்கியமாக, என் காதலைச் சம்பங்கிக்கு மறைமுகமாகத் தெரிவித்துவிடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!’ என்று கணக்குப் போட்டான்.
சம்பங்கி அவனுக்குள் எழுப்பிய காதலுணர்வு, இதுவரை அவனுடைய இயற்கையான படைப்பாற்றலை மெருகூட்டிக்கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அந்தப் படைப்பாற்றலை ஒரு திறமையாக மாற்றி, அதன் மூலம் காதலிலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் பிறந்தது.
அந்த வெறியைச் செயற்கை நுண்ணறிவு உருவாக்கவில்லை. நாம் ஒன்றைக் கொடுத்தால் அதனை மேலும் அழகாகவும் சிறப்பாகவும் மாற்றித் தருவதுதான் அதன் வேலை. அதன்மீது எந்தக் குற்றமும் இல்லை.
‘என் காதலைச் சம்பங்கிக்குத் தெரிவிக்கவே தேவையில்லை’ என்ற தெளிவிலிருந்து நிலைதடுமாறிக் கீழே விழுந்தவன் சம்பத்துதான்.
செயற்கை நுண்ணறிவு நிகழ்த்திய பிரமிப்பு அவனையும் தனது வலைக்குள் இழுத்துக்கொண்டது. ஆனால் அதனை அவன் பயன்படுத்தியது தனது இயற்கையான உணர்வையும் நுண்ணறிவையும் மேலும் வளர்த்துக்கொள்ள அல்ல; அவற்றை மழுங்கடிக்க!
அன்று மாலை கல்லூரியில் கவிதைப் போட்டி நடைபெற்றது. சம்பத் தனது அறுபது வரிக் காதல் கவிதையை உணர்ச்சிபொங்க வாசித்தான். அரங்கம் முழுவதும் கரவொலி எழுந்தது. அவனுடைய கவிதைக்கே முதல் பரிசு கிடைத்தது.
பரிசைப் பெறுவதற்காக மேடைக்குச் சென்ற சம்பத், கூட்டத்தில் அமர்ந்திருந்த சம்பங்கியைத் தேடிக் கண்களை அலையவிட்டான்.
அவள் அங்கே இருந்தாள்!
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை—அவன் பரிசைப் பெறுவதற்கு முன்பாகவே சம்பங்கி தனது இருக்கையிலிருந்து எழுந்து, அரங்கத்தைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தாள்.
‘நான் பரிசு வாங்குவதைப் பார்த்து அவள் மகிழ்வாள் என்று நினைத்தேனே! இப்போது எங்கே போகிறாள்?’ என்ற குழப்பத்துடன் சம்பத் பரிசை வாங்கிக்கொண்டான்.
மறுநாள் முதல் கல்லூரியில் சம்பங்கியைக் காண முடியவில்லை. சம்பத் பலரிடமும் விசாரித்தான்.
‘அவளுக்குப் படிக்கப் பிடிக்கவில்லையாம். மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு தனது கிராமத்திற்கே சென்றுவிட்டாளாம்!’ என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. அதற்குமேல் எந்த விவரமும் கிடைக்கவில்லை.
சம்பங்கி காணாமல் போய்விட்டாள்.
இரண்டு நாட்கள் சம்பத் அறைக்குள்ளேயே சோர்ந்து படுத்துக்கிடந்தான். மூன்றாவது நாள் செயற்கை நுண்ணறிவைத் திறந்து கேட்டான்: ‘நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். உற்சாகமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?’
ஐந்தே நொடிகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு பெரிய பட்டியலை அவனுக்குக் கொடுத்தது—உற்சாகமாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், கடைப்பிடிக்க வேண்டிய உறக்க முறை, மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள் என்று எல்லாவற்றையும் அழகாக வரிசைப்படுத்தித் தந்தது.
அன்றிலிருந்து சம்பத் செயற்கை நுண்ணறிவுடன் முழுமையாக ஐக்கியமானான்.
பழைய டைரிகளை எடுத்தான். பக்கம் பக்கமாகத் தான் எழுதியிருந்த அனைத்தையும் அதில் பதிவு செய்தான். அந்தக் குறிப்புகளைக் கொண்டு ‘காதல்தான் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஓர் அழகான கவிதை நூலை அது உருவாக்கிக் கொடுத்தது.
அழகிய அட்டைப்படத்துடன் அந்த நூலை வெளியிட்டான் சம்பத். நூல் பிரபலமானது. ஏராளமான பிரதிகள் விற்பனையாகின. நிறையப் பணம் அவன் கைக்கு வந்தது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றான். நல்ல வேலையும் கிடைத்தது. பொருளாதார வளங்கள் ஒவ்வொன்றாக அவனைத் தேடி வந்தன.
வீடு வந்தது. கார் வந்தது. திருமணம் நடந்தது. மனைவி வந்தாள். குழந்தைகள் பிறந்தார்கள். புகழும் பணமும் பதவியும் சேர்ந்தன. இன்னும் எத்தனையோ வசதிகள் அவனுடைய வாழ்க்கையை நிரப்பின.
ஆனால் என்னவோ தெரியவில்லை—அவனுடைய உள்ளத்தின் மிக ஆழத்தில் ஏதோ ஒன்று நிரப்பப்படாமல் வெறுமையாகவே இருந்தது.
எல்லாம் இருந்தும் எதையோ இழந்தவனைப்போல் வாழ்ந்தான். எதையோ தேடிக்கொண்டிருப்பவனைப்போல் அலைந்தான். சில நேரங்களில் காரணமே தெரியாமல் பித்துப்பிடித்தவனைப்போல் நடந்துகொண்டான்.
தனது பிரச்சினைகளுக்கெல்லாம் செயற்கை நுண்ணறிவிடம் பதில் கேட்ட அவன், ஒரே ஒரு கேள்வியை மட்டும் அதனிடம் கேட்கவில்லை:
‘எனக்குள் இருந்த சம்பங்கி எங்கே?’
அவன் வெளியே தேடிய சம்பங்கி தனது கிராமத்திற்குச் சென்றிருக்கலாம்.
ஆனால் அவனுக்குள் வாழ்ந்த சம்பங்கி? அவனுடைய நுண்ணுணர்வைத் தட்டி எழுப்பிய அந்தச் சம்பங்கி? அவனை ஒரு கவிஞனாக்கிய அந்த நறுமணம்? வாழ்க்கையை முழுமையாக உணர வைத்த அந்தப் பரவசம்?
அது எங்கே போனது?
சம்பங்கி உண்மையிலேயே காணாமல் போனாளா?
அல்லது, தனது இயற்கையான நுண்ணுணர்வைக் கைவிட்டபோது சம்பத்தே அவளைத் தனக்குள் தொலைத்துவிட்டானா?
எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?
சூ. குழந்தைசாமி
செயலர்
காந்தி அமைதி நிறுவனம், சென்னை–18

Leave A Comment