இன்னொரு சூக்குமவல்லி
இன்று காலையில் உத்தரமேரூர், குன்னவாக்கம் சர்வசேவ வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கே தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் பெண்மணியை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால், இன்று அவருடன் நிகழ்ந்த உரையாடல் எனக்குள் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
அவர் பள்ளி வளாகத்தில் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். மரங்களைப் பார்த்தார். பறவைகளைப் பார்த்தார். அதே கவனத்துடன் மாணவர்களையும் மாணவிகளையும் பார்த்தார். ஆசிரியர்களிடம் நின்று பேசினார். தலைமை ஆசிரியை என்ற பதவியை முன்னிறுத்தும் பாவனை அவரிடம் தெரியவில்லை.
நான் அங்கே இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.
இரண்டு மாணவிகளை மூன்று ஆசிரியைகள் சுற்றி நின்றுகொண்டு கடிந்துகொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகள் அழத் தொடங்கிவிட்டார்கள்.
தலைமை ஆசிரியை அருகில் சென்று கேட்டார்.
“என்ன நடந்தது?”
“இல்லை மேடம், இந்தப் பெண்கள் வகுப்பு நடத்தும்போது கவனிப்பதில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.”
தலைமை ஆசிரியை மாணவிகளைப் பார்த்தார். பிறகு ஆசிரியைகளிடம் கேட்டார்.
“அவர்களுக்குப் பேச வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். என்ன பேசுகிறார்கள் என்று கேட்டிருக்கலாமே?”
“பேச விட்டால் பேசிக்கொண்டே இருப்பார்கள், மேடம். வகுப்பை எப்படி நடத்துவது?”
“சரி. அவர்கள் பேசாமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?”
“எவ்வளவோ சொல்லிவிட்டோம். இவர்களுக்கு ஒழுக்கமே இல்லை.”
“ஒழுக்கம் இல்லை என்று சொல்கிறீர்களே… ஒழுக்கம் என்றால் என்ன?”
அந்தக் கேள்வி ஆசிரியைகளுக்குச் சற்றே எரிச்சலை ஏற்படுத்தியதுபோலத் தெரிந்தது.
“ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். வகுப்பைக் கவனிக்க வேண்டும். வீட்டுப்பாடத்தை ஒழுங்காக எழுத வேண்டும். நல்ல மதிப்பெண் பெற வேண்டும். பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதெல்லாம்தானே ஒழுக்கத்தின் அடிப்படை, மேடம்?”
“அப்படியா? ஒழுக்கத்திற்கு இதைத் தவிர வேறு விளக்கம் இருக்கிறதா?”
“வேறு என்ன இருக்க முடியும்? இப்போதே ஒழுங்காக நடக்காதவர்கள் நாளைக்குச் சமுதாயத்தில் எப்படி நடப்பார்கள்? திமிராக நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவார்கள். கணவனுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள். இதையெல்லாம் இப்போதே சரிசெய்ய வேண்டாமா?”
அந்த இரண்டு குழந்தைகளும் தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தார்கள்.
தலைமை ஆசிரியை குரலை உயர்த்தவில்லை.
“நீங்கள் ஒழுக்கத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். அது அத்தோடு முடிந்துவிடுகிறதா? இன்னும் யோசித்துப் பார்க்க ஏதாவது இருக்கிறதா?”
“இன்னும் என்ன இருக்க முடியும், மேடம்?”
“சரி. நீங்கள் பாடம் சொல்லிக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எதை உணர்த்த விரும்புகிறீர்கள்?”
“என்ன மேடம், திரும்பத் திரும்ப இப்படிக் கேட்கிறீர்கள்? அவர்கள் படிக்க வேண்டும். நிறைய மதிப்பெண் பெற வேண்டும். நல்ல வேலைக்குப் போக வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும். குடும்பத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.”
“இதையெல்லாம் நீங்கள் அவர்களுக்காகச் செய்துவிட முடியுமா? அல்லது அவர்கள்தான் செய்ய வேண்டுமா?”
“அவர்கள்தான் செய்ய வேண்டும்.”
“அப்படியானால், தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பாதையை அவர்களே அறிய வேண்டுமல்லவா? அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”
ஆசிரியைகளில் ஒருவர் பொறுமையிழந்து கேட்டார்.
“அப்படியானால் வகுப்பில் கவனிக்காவிட்டாலும் அப்படியே விட்டுவிடலாமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள், மேடம்?”
“நீங்கள் எதை நிறைவேற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறேன்.”
“பள்ளிக்கென்று சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க வைப்பதுதான் எங்களுடைய கடமை. அதைத்தான் எங்களுடைய வெற்றியாகவும் நினைக்கிறோம்.”
“அந்தச் சட்டதிட்டங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்று யோசித்திருக்கிறீர்களா?”
“நீங்கள் ஏதோ குழப்புகிறீர்கள், மேடம். எங்களுக்குப் புரியவில்லை.”
“நீங்கள் சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை. படிக்க வேண்டும். கவனிக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான உந்துதல் எங்கிருந்து வர வேண்டும்?”
அவர் சற்று நிறுத்தினார்.
“படிக்க வேண்டும் என்று யார் உணர வேண்டும்? இன்னொருவர் பேசும்போது கவனிக்க வேண்டும் என்று யார் புரிந்துகொள்ள வேண்டும்? தங்களுடைய செயலுக்கு என்ன விளைவு என்று யார் பார்க்க வேண்டும்? அவர்களுக்குப் பதிலாக நீங்களே முடிவு செய்துகொண்டிருப்பீர்களா? அவர்களே முடிவெடுக்கக் கற்க வேண்டாமா?”
“அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மாட்டேன் என்கிறார்களே!”
“அப்படியானால் உங்களுடைய கடமை என்ன?”
இந்த முறை ஆசிரியைகள் உடனே பதில் சொல்லவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒருவர் சொன்னார்.
“அவர்கள் முடிவெடுப்பதற்கு நாம் வழிகாட்ட வேண்டும்.”
“வழிகாட்ட வேண்டும் என்கிறீர்கள். அதிலும் நீங்கள் முடிவுசெய்த பாதையில்தான் அவர்கள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது தங்களுக்கான வழியை அவர்களே கண்டுகொள்வதற்கு உதவப்போகிறீர்களா?”
மீண்டும் அமைதி.
பிறகு இன்னொரு ஆசிரியை மெதுவாகச் சொன்னார்.
“அவர்களே கண்டுகொள்வதற்கு உதவ வேண்டும்.”
“அப்படியானால் இப்போது என்ன செய்திருக்கலாம்?”
மாணவிகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் பதில் சொன்னார்.
“பேசினார்கள் என்றவுடன் கோபப்பட்டிருக்க வேண்டாம். ஏன் பேச வேண்டியிருந்தது என்று கேட்டிருக்கலாம்.”
மற்றொருவர் தொடர்ந்தார்.
“அவர்கள் பேசிய விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் உரையாடியிருக்கலாம். உடனே பேச வேண்டிய அளவுக்கு அது முக்கியமானதா என்று அவர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கலாம்.”
முதலில் கோபமாகப் பேசிய ஆசிரியை சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னார்.
“அல்லது பாடம் நடத்தும்போது அவர்களுக்குச் சலிப்பாக இருந்ததா என்று கேட்டிருக்கலாம். கவனம் சிதறியிருந்தால், ஏன் சிதறியது என்று யோசித்திருக்கலாம்.”
தலைமை ஆசிரியை தலையசைத்தார்.
“அப்போது நீங்களும் அவர்களும் சேர்ந்து ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும், இல்லையா?”
ஆசிரியைகள் அமைதியாக இருந்தார்கள்.
“அதை விட்டுவிட்டு, விதிகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இது பள்ளிக்கூடமாக இருக்குமா? காவல் நிலையமாகவோ சிறைக்கூடமாகவோ மாறிவிடாதா?” என்று கேட்டார்.
நான் அதையெல்லாம் சற்று விலகி நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதுவரை மாணவிகளிடம் மட்டுமே கேள்வி கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியைகள், தங்களையும் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தார்கள்.
எனக்கு வியப்பாக இருந்தது.
பல பள்ளிகளில் தலைமை ஆசிரியரே விதிகளை நிறைவேற்றும் நிர்வாகியாக மாறிவிடுகிறார். ஆசிரியர்கள் வகுப்பை அடக்கி வைத்திருக்கிறார்களா, மாணவர்கள் பேசாமல் இருக்கிறார்களா என்பதைத்தான் கவனிக்கிறார். ஆசிரியர்களும் அதற்கேற்றபடி தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இங்கே வேறுவிதமாக நடந்தது.
பிறகு அந்தத் தலைமை ஆசிரியை தனியாக வந்தபோது அவரிடம் கேட்டேன்.
“பல இடங்களில் தலைமை ஆசிரியர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் எல்லாவற்றையும் நடத்துகிறார்கள். நீங்கள் அதைக் கையில் எடுத்ததுபோலத் தெரியவில்லையே?”
அவர் புன்னகைத்தார்.
“மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய செயல்களைத் தாங்களே புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதுதானே என் வேலை?”
“அப்படி இருந்தால் பாடங்களை எப்படிப் படிப்பார்கள்?”
“சுயமாகச் சிந்திப்பதற்கான நல்ல ஏற்பாடு இருந்தால், பாடங்களைக் கற்பதும் எளிதாகும். அதற்கு மாறாக நம் விருப்பத்தை அதிகாரத்தால் திணித்துக்கொண்டிருந்தால், சில மாணவர்களை வேண்டுமானால் வெற்றியாளர்களாக உருவாக்கலாம். ஐந்து சதவீதம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாநிலத்தில் முதலிடம் பெறுகிறவர்களைக்கூட உருவாக்கிவிடலாம். ஆனால், மீதமுள்ள தொண்ணூற்றைந்து சதவீதம் பேருக்கு என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டுமே!”
நான் பள்ளியில் படித்த நாட்களை நினைத்துக்கொண்டிருந்தேன்.
அவர் மேலும் சொன்னார்.
“ஆசிரியர்கள் காவலர்களாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் பள்ளி சிறைக்கூடமாகிவிடும். மாணவர்களின் செயல்களுக்கு உடனுக்குடன் தீர்ப்புச் சொல்லிக்கொண்டிருந்தால் நீதிமன்றமாகிவிடும். அங்கே ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி இருக்காது. குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி இருக்காது.
“ஒரு குழந்தை தன்னைக் கவனிக்கத் தொடங்குவது, தன்னுடைய செயலைப் புரிந்துகொள்வது, இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வதை அறிந்துகொள்வது—அங்கேதானே கல்வி தொடங்குகிறது?”
நான் அவரிடம் இன்னொரு கேள்வி கேட்டேன்.
“நீங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டார்களா? இப்போது சில இளைஞர்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்குப் போய் விதவிதமாக முடியை வெட்டிக்கொண்டு வருகிறார்கள். உங்கள் பள்ளிக்கும் அப்படி வந்தால் என்ன செய்வீர்கள்? அதை ஒழுக்கமின்மையின் அடையாளமாகக் கருத மாட்டீர்களா?”
அவர் நிதானமாகச் சொன்னார்.
“ஐயா, புறத்தோற்றத்தை வைத்து ஒருவருடைய ஒழுக்கத்தை முடிவு செய்ய முடியுமா? ஒவ்வொருவரும் தங்களுடைய வளர்ச்சியில் பல மனநிலைகளைக் கடந்து வருகிறார்கள். ஒருவர் மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்கிறார், அவருடைய செயலால் பிறருக்குத் துன்பம் ஏற்படுகிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?”
பிறகு ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
“எங்கள் பள்ளியிலும் நான்கு மாணவர்கள் அப்படித்தான் முடியை வெட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அதற்காக அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை.
“ஒருநாள் மாலை நான் காரில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சாலையோரத்தில் ஒருவர் தள்ளுவண்டியில் நிறைய பாரத்தை ஏற்றிக்கொண்டு இழுத்துச் சென்றார். ஒரு சிறிய பள்ளத்தில் வண்டியின் சக்கரம் மாட்டிக்கொண்டது.
“அவரால் அதை நகர்த்த முடியவில்லை. இழுத்துப் பார்த்தார். பின்னால் போய்த் தள்ளிப் பார்த்தார். வண்டி நகரவில்லை. பின்னால் வாகனங்கள் தேங்க ஆரம்பித்தன.
“அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இந்த நான்கு மாணவர்களும் நின்றிருந்தார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்குப் போவதற்காகப் பேருந்திற்குக் காத்திருந்தார்கள்.
“மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது இவர்கள் நால்வரும் ஓடினார்கள். ஒருவர் சக்கரத்திற்கு அருகில் குனிந்தார். மற்றவர்கள் வண்டியைத் தள்ளினார்கள். பள்ளத்திலிருந்து சக்கரத்தை வெளியே எடுத்து, கொஞ்ச தூரம் வரை வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
“அதோடு போகவில்லை. அருகிலிருந்த தேநீர்க் கடையில் அந்த மனிதருக்குத் தேநீரும் வாங்கிக்கொடுத்தார்கள்.
“நான் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.”
அவர் என்னிடம் கேட்டார்.
“அந்த நேரத்தில் அவர்களுடைய முடியைப் பற்றி நினைப்பதா? அல்லது அவர்கள் செய்ததைப் பார்ப்பதா?”
என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
அவர் தொடர்ந்தார்.
“தங்களுக்குள் ஓர் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வது வேறு. வெளியிலிருந்து ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு நிற்பது வேறு. அந்த மனிதருக்கு உதவுங்கள் என்று அங்கே யாரும் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. தாங்களாகப் பார்த்தார்கள். செய்ய வேண்டியதைச் செய்தார்கள்.
“அப்படிப் பார்த்துச் செயல்படுவதற்கான சுய சிந்தனைக்கு இடமே கொடுக்காமல், விதிகளைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? நம்முடைய கண்காணிப்பு இருக்கும்போது மட்டும் ஒழுங்காக இருப்பதைக் கற்றுக்கொள்வார்கள். கண்காணிப்பு இல்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போகலாம்.”
“அப்படியானால் முடியைப் பற்றி அவர்களிடம் பேசவே மாட்டீர்களா?” என்று கேட்டேன்.
“பேசுவேன். பேசாமல் விட்டுவிடுவது சுதந்திரம் கொடுப்பதாகாது. ஆனால், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று முத்திரை குத்திவிட்டுப் பேச மாட்டேன்.”
“எப்படிப் பேசுவீர்கள்?”
“ஒருநாள் அவர்களை அழைத்து அமரச் செய்வேன். இந்த மாதிரி முடி வெட்டிக்கொள்ள ஏன் தோன்றியது என்று கேட்பேன். அவர்கள் சொல்வதைக் கேட்பேன்.
“பிறகு, உங்கள் தோற்றத்தைப் பற்றியே அடிக்கடி நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா, அதனால் வகுப்பில் கவனம் சிதறுகிறதா என்று கேட்டுப் பார்க்கலாம். அல்லது முடி எப்படி இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் பாடத்தைக் கவனிக்க முடிகிறதா என்றும் பேசலாம். அவர்களுடைய அனுபவத்தை அவர்களே கவனிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
“நான் கேள்வி கேட்டவுடன் எனக்குப் பிடித்த பதிலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். அவர்கள் யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரமும் வேண்டுமே!”
அவர் சொல்வதைக் கேட்டபோது, மாணவர்களுடன் உரையாடுவதற்கும் அவர்களை விசாரிப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் பற்றி நான் யோசித்தேன்.
அவர் மேலும் சொன்னார்.
“இதில் நான் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறேன் என்று என்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக்கொள்வதற்குக்கூட இடமில்லை. அந்த மாணவன் ஒரு மனிதன். நான் ஒரு மனுஷி. ஒருவரையொருவர் மதித்து உரையாடுகிறோமா என்பதுதான் முக்கியம்.
“அந்த நேரத்தில் நான் தலைமை ஆசிரியை என்ற பதவியை முன்னால் நிறுத்திக்கொள்வதில்லை. குழந்தைகளுடைய நிலையிலிருந்து அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்போது அவர்கள் தங்களுடைய எண்ணங்களுக்கும் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஆரம்பிக்கிறார்கள்.
“தாங்களாகச் சிந்திக்கத் தொடங்கிய பிறகு, மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவே ஒன்றைச் செய்ய வேண்டுமா என்று அவர்களே கேட்கிறார்கள். தங்களுக்குப் பொருந்தாததை விலக்கிக்கொள்ளவும் முடிகிறது. எடுத்த முடிவிற்கும் செய்த செயலுக்கும் பொறுப்பேற்க ஆரம்பிக்கிறார்கள்.”
“ஆனால், பள்ளியில் மதிப்பெண்ணையும் பார்க்க வேண்டியிருக்கிறதே?” என்று கேட்டேன்.
“பார்க்க வேண்டியதுதான். ஆனால், மதிப்பெண் வாங்குவதற்குப் பயிற்சி கொடுப்பதோடு ஆசிரியருடைய வேலை முடிந்துவிடுகிறதா? தன்னுடைய வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கக்கூடிய ஒரு மனிதனாக வளர்வதற்கு உதவ வேண்டாமா?
“அதனால்தான் படிப்பில் சிரமப்படுகிற மாணவர்களை என் கவனத்தில் வைத்திருப்பேன். அவர்களுடன் பேசுவதற்கும் அவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.
“சில ஆசிரியர்களுக்கு இது வியப்பாக இருக்கும். ஏற்கெனவே நன்றாகப் படிப்பவர்களுக்குக் கூடுதல் பயிற்சி கொடுத்து இன்னும் அதிக மதிப்பெண் பெற வைக்கலாமே என்று நினைப்பார்கள்.
“ஆனால், படிப்பில் சிரமப்படுகிற ஒரு குழந்தை தன்னுடைய சிரமத்தைத் தானே அறியத் தொடங்கும்போது மாற்றம் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறேன். எங்கே புரியவில்லை, எப்போது கவனம் சிதறுகிறது, எதைக் கேட்கத் தயங்குகிறது என்பதை அதனால் சொல்ல முடிகிறது. அங்கிருந்து நாம் சேர்ந்து வேலை செய்யலாம்.
“சுயமாகச் சிந்திக்க இடம் கிடைத்த பிறகு கவனம் மேம்பட்டு, படிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்ட மாணவர்கள் இருக்கிறார்கள். அதிக மதிப்பெண் சிலருக்கு மட்டுமே உரியது என்று நாம் ஏன் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்?”
அவர் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார்.
“பாடங்களைப் படித்து, மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண் வாங்கிப் பாராட்டுப் பெறுவது ஒரு திறமை. ஆனால், ஒரு குழந்தையிடம் இருப்பது அது மட்டும்தானா?
“ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் படைப்பாற்றல் பொங்கிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுவதற்கு வழி தேடுகிறது. எதையாவது செய்துபார்க்க வேண்டும், தன்னுடைய எண்ணத்திற்கு ஓர் உருவம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது.
“அந்த உந்துதல் என்னவென்று குழந்தைக்கே தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். அதனால் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்துபார்க்கிறது. சில நேரங்களில் அது புறத்தோற்றத்தில் வெளிப்படுகிறது. முடியை வேறுவிதமாக வெட்டிக்கொள்கிறது. மற்றவர்களைப் போல இல்லாமல் ஏதாவது செய்ய முயல்கிறது.
“நாம் அந்த வேறுபாட்டைப் பார்த்தவுடன் ஒழுக்கமின்மை என்று முடிவுசெய்துவிடுகிறோம். ஆனால், அதன் பின்னால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தவிப்பு இருக்கிறதா என்று கவனித்திருக்கிறோமா?
“வித்தியாசமாக நடந்துகொள்ளும் ஒவ்வொரு குழந்தையையும் பற்றி ஒரே முடிவுக்கு வர வேண்டியதில்லை. அதன் பின்னால் என்ன இருக்கிறது என்று அந்தக் குழந்தையுடன் பேசிப் பார்க்கலாமே! படைப்பாற்றல் வெளிப்படுவதற்கான வழியை அது தேடிக்கொண்டிருந்தால், அதற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளைப் பள்ளியில் உருவாக்கலாமே!”
பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்.
“அதற்கு முதலில் ஆசிரியரிடம் என்ன வேண்டும் தெரியுமா?”
நான் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்தேன்.
“மாணவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பணிவு வேண்டும்.”
அந்த வார்த்தை என்னுள் நின்றது.
அவர் தொடர்ந்தார்.
“நான் ஆசிரியர்; எனக்குத் தெரியும். நீ மாணவன்; நான் சொல்வதைக் கேள் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கி வர வேண்டும்.
“நீ ஏன் இப்படிச் செய்தாய் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, இதைச் செய்ய உனக்கு எப்படித் தோன்றியது என்று அறிந்துகொள்ள விரும்ப வேண்டும்.
“அந்தச் செயலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? எது அவனைத் தூண்டுகிறது? அவனுடைய சிந்தனை எப்படிப் போகிறது? தானாகக் கண்டறிந்தது எது? பிறரைப் பார்த்துப் பின்பற்றுவது எது? இவற்றை இருவரும் சேர்ந்து பார்க்கலாம்.
“அதற்குப் பொறுமையாக அமர்ந்து உரையாட வேண்டும். ஆசிரியர் என்ற பிம்பத்தை முன்னால் நிறுத்தாமல், ஒரு மனிதராக அந்தக் குழந்தையுடன் உறவாட வேண்டும். அப்போது குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இடம் கிடைக்கும்.
“இதற்குப் பள்ளிக்கூடம் எவ்வளவு சிறந்த இடம்!
“பல குழந்தைகளுக்கு வீட்டில் இப்படிப் பேசுவதற்கான சூழல் கிடைப்பதில்லை. தெருவில் யார் நின்று கேட்கப்போகிறார்கள்? நண்பர்களுடன் இருக்கும்போதும் தங்களுக்குள் நிகழ்வதை நிதானமாகப் பார்ப்பதற்கான நேரம் அமையாமல் போகலாம்.
“ஆனால், ஆசிரியருக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. தினமும் அந்தக் குழந்தையைச் சந்திக்கிறோம். அதன் முயற்சிகளையும் தயக்கங்களையும் பார்க்கிறோம். அந்த வாய்ப்பை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வி.
“அதன் உள்ளிருப்பதை வெளிப்படுத்த உதவுகிறோமா? அல்லது நமக்குப் பழக்கமான வடிவத்திற்குள் அதை அடைக்க முயல்கிறோமா?”
இதைச் சொல்லும்போது அவருடைய குரலில் வருத்தம் தெரிந்தது.
“முரட்டுத்தனமாக மாணவர்களை ஒழுங்குபடுத்த முயலாதீர்கள். மிரட்டியும் தண்டித்தும் ஒழுக்கத்தை உருவாக்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள் என்று எத்தனையோ முறை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
“கேட்கும்போது தலையசைப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை தங்கள் சொல்லுக்கு உடனே கீழ்ப்படியவில்லை என்றால் மீண்டும் பழைய முறைக்கே திரும்பிவிடுகிறார்கள். கொஞ்சம் கடுமையாக நடந்தால்தான் அடங்கும் என்று சொல்கிறார்கள்.
“வன்முறையால் அடக்கிவிட முடியும் என்ற இந்த நம்பிக்கைதான் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
“இதை இன்னொரு அறிவுரையாகக் கேட்டுவிட்டு மறந்துவிடக் கூடாது. ஒரு குழந்தையுடன் அமர்ந்து, அதைத் தீர்ப்பிடாமல் கேட்டுப்பார்க்க வேண்டும். அதன் சிந்தனை வெளிப்படுவதற்கு இடம் கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது என்ன நிகழ்கிறது என்பதை ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்திலேயே அறிய வேண்டும்.”
அவருக்குள் இவ்வளவு தெளிவும் உந்துதலும் அமைதியான அணுகுமுறையும் எப்படி வந்தன என்று வியப்பாக இருந்தது. அதைப் பற்றி அவரிடமே கேட்டேன்.
அவர் சொன்னார்.
“ஐயா, மனித மனத்தைப் பற்றிய புரிதல் நம் எல்லோருக்கும் வேண்டும். முக்கியமாக ஆசிரியர்களுக்கு அது மிகவும் அவசியம். பாடங்களைப் படிப்பதுடன் மனித உளவியலையும் படிக்க வேண்டும்.
“ஒரு பாடத்தில் நாம் திறமை பெற்றுவிடலாம். ஆனால், அந்தப் பாடத்தைக் கற்க வரும் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை அதற்குள் எப்படிக் கொண்டுசெல்ல முடியும்?
“மனித உளவியலைப் புரிந்துகொள்ளத் தொடங்கினாலே, பல சூழல்களில் எப்படி நடந்துகொள்வது என்பதை நாமே கண்டறிய முடியும். ஒவ்வொன்றுக்கும் வெளியிலிருந்து யாராவது வந்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை.
“மாணவர்களின் உணர்வுகளைக் கவனித்து, அவர்களை எந்த விதத்தில் அணுகுவது என்று ஓர் ஆசிரியர் தன்னையே பயிற்றுவித்துக்கொண்டால், அதன் பயன் வகுப்பறையோடு நின்றுவிடாது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப உறவுகளிலும் அந்தப் புரிதல் உதவும். மற்றவர்களை அணுகுவதில் மட்டுமல்ல, தன்னையே புரிந்துகொள்வதிலும் மாற்றம் ஏற்படும்.
“இந்த வாய்ப்பு தங்கள் பணிக்குள் இருக்கிறது என்பதைப் பல ஆசிரியர்கள் உணர்வதில்லை.”
பிறகு அவர் வாழ்க்கையின் வலிகளைப் பற்றிப் பேசினார்.
“நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடிபடுகிறோம். வலிகளை அனுபவிக்கிறோம். சிரமங்களைச் சந்திக்கிறோம். ஆசிரியர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
“ஆனால், நமக்கு ஏற்பட்ட வலியை நாம் என்ன செய்கிறோம்?
“அதை நம்முடன் வகுப்பறைக்குள் எடுத்துவந்து குழந்தைகள்மீது இறக்கிவைக்கிறோமா? அல்லது அந்த வலியைப் புரிந்துகொண்டு, அதைத் தாங்கும் வலிமையை நமக்குள் வளர்த்துக்கொள்கிறோமா?
“வலியை ஏற்றுக்கொண்டு உள்வாங்கி, அதை மற்றவர்களுக்கான வலியாக மாற்றாமல் இருப்பதற்கு ஒரு பயிற்சி வேண்டும். நமக்குச் சிரமம் இருந்தாலும், நம்மைச் சந்திக்கும் குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கான இடத்தை அளிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
“அதைக் கற்றுக்கொள்ளும்போது, மற்றவர்களை அடக்க வேண்டும், நம் அதிகாரத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற தேவை மெதுவாகக் குறைகிறது.”
அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை ஆழமாகத் தொட்டது.
“ஆசிரியர் பணி அறப்பணி என்று சொல்கிறோம். அது அமைதிக்கான பணியும்கூட.
“அந்த அமைதி முதலில் ஆசிரியருக்குள் பாதுகாக்கப்பட வேண்டும்.
“உடல்நலம் இருக்கிறது. பொருள் வசதி இருக்கிறது. தேவையான வளங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அமைதி இல்லாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
“வசதிகள் இருப்பதாலேயே அமைதி வந்துவிடுவதில்லை. அவை இல்லாததால் அமைதியாக இருக்கவே முடியாது என்பதும் இல்லை. எந்தச் சூழலிலும் தனக்குள் நிகழ்வதைக் கவனித்து, அமைதிக்கான மனநிலையை வளர்த்துக்கொள்ள ஒருவர் முயல முடியும்.
“ஆசிரியர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனக்கு ஏற்படும் வலியை வலுவாக மாற்றும் பயிற்சியை மேற்கொண்டிருந்தால், குழந்தைகளுக்கும் அதற்கான அடிப்படையை உருவாக்க முடியும்.
“அப்போது அமைதியைப் பற்றிப் பாடம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம். குழந்தைகளுடன் நாம் நடந்துகொள்ளும் விதத்திலேயே அதைக் காட்ட முடியும்.”
அவர் ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது, அந்தப் பணியில் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றியே மீண்டும் மீண்டும் சொன்னார்.
“ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள், ஐயா.
“இன்றைய சமுதாயத்தில் இளைய தலைமுறையை அழிவை நோக்கி இழுக்கும் சூழல்கள் எத்தனையோ இருக்கின்றன. அப்படிப்பட்ட காலகட்டத்தில், நம் கையில் ஒரு தலைமுறையின் குழந்தைகள் வந்து சேர்கிறார்கள்.
“அவர்களுக்குள் சுயமாகச் சிந்திப்பதற்கான விதையை விதைக்க முடிகிறது. தங்களுடைய உணர்வுகளை அறியவும், தங்கள் வலிகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை வலிமையாக மாற்றிக்கொள்ளவும் உதவ முடிகிறது.
“வாழ்க்கையில் சிரமமே வராது என்று அவர்களுக்கு உறுதி கொடுக்க முடியாது. ஆனால், சிரமம் வரும்போது தங்களையே இழந்துவிடாமல் அதைப் பார்க்கக் கற்றுக்கொள்ள உதவலாம்.
“அப்படிச் செய்யக்கூடிய ஆசிரியரைவிடச் சிறந்த ஆசிரியர் யார் இருக்க முடியும்?
“இந்த வாய்ப்பு பள்ளியில் நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.”
அவர் குழந்தைகளை எப்படிப் பயிற்றுவிக்கிறார் என்று அறியத்தான் முதலில் கேட்டேன். ஆனால், பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தன்னையே எப்படிப் பயிற்றுவித்துக்கொள்கிறார் என்பதை அறிய முடிந்தது.
தனக்குள் எழும் கோபத்தைக் கவனிப்பது, தன்னுடைய வலியை மற்றவர்கள்மீது சுமத்தாமல் இருப்பது, அதிகாரத்தை முன்னிறுத்தாமல் உரையாடுவது—இவற்றை அவர் தனக்கான அன்றாடப் பயிற்சியாகக் கொண்டிருந்தார்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த பிறகும் அந்த உரையாடல் எனக்குள் தொடர்ந்தது.
ஆசிரியைகள் மாணவிகளிடம் கேட்ட கேள்விகள் நினைவுக்கு வந்தன. பிறகு தலைமை ஆசிரியை கேட்ட கேள்விகள் நினைவுக்கு வந்தன.
முதலில் கேட்டவை குழந்தைகளை அழ வைத்தன. பின்னால் கேட்டவை பெரியவர்களைச் சிந்திக்க வைத்தன.
ஒன்றில், மற்றவரை மாற்றுவதற்கான அவசரம் இருந்தது. மற்றொன்றில், அவருடன் சேர்ந்து புரிந்துகொள்வதற்கான பொறுமை இருந்தது.
அன்று அந்தப் பள்ளியில் நான் பார்த்தது, மாணவர்கள் கற்க வேண்டியதைப் பற்றிய உரையாடல் மட்டுமல்ல. ஆசிரியர்களும் கற்கத் தொடங்கிய ஒரு தருணம்.
அவரிடம் விடைபெற்றபோது, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் பேசிவிட்டு வருகிறேன் என்ற உணர்வு மட்டும் எனக்கு இருக்கவில்லை. சம்பளத்திற்காக ஒரு பதவியில் பணிபுரிகிறவர் என்று அவரை என்னால் பார்க்க முடியவில்லை.
வாழ்க்கையின் சூக்குமத்தை அறிந்துகொள்ளப் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரைச் சந்தித்துவிட்டு வருவதாக உணர்ந்தேன். அந்தப் பயணத்தில் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயல்கிறார்.
எனக்கு அவர் ஒரு சூக்குமவள்ளியாகக் காட்சியளித்தார்.
அவர்தான் திருமதி ஆர்.சுகன்யா அவர்கள்.
புகைப்படத்தில் மத்தியில் இருப்பவர்.

Leave A Comment