சுமார் 55 வருடங்களுக்கு முன்னால் நான் அவரைச் சந்தித்தேன். அப்பொழுது அவருக்கு வயது 50, எனக்கு 19.
அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு என்னவோ ஒன்று, என்னை அவருடனேயே இருபத்தொரு வருடங்கள் வாழ வைத்தது.
பிறகு?
பிறகென்ன, இன்னும் முழு ஐக்கியமானேன் அவருடன். ஆம், 1993-இல் அவர் தன்னுடைய 73-ஆவது வயதில் மறைந்து போனார் உடலளவில். அதனால் அன்றிலிருந்து இன்றுவரை, இனி என்றும், அவர் என்னுள் வாழத் தொடங்கி விட்டார்.
என்னவோ ஒன்று, ஆம், எந்த ஒன்று என்னை அவருடன் பிணைத்தது? நட்பு எதனால் உருவாகிறது என்று புரிந்த உங்களுக்கு நான் சொல்லப் போவது நிச்சயம் விளங்கும்.
பணம், பதவி, பட்டம், பாலுணர்வு, தனிமை, அந்தஸ்து, கௌரவம், திறமை, வேலை, கொள்கை, இப்படி எத்தனையோ காரணங்களால் மனிதர்கள் வாழ்வில் பிணைக்கப்பட்டுப் பிரிந்து போய் மீண்டும் கூடி…., அதைத்தானே உறவென்கிறது உலகம், இல்லையா?
ஆனால் அவருடன் என்னைப் பிணைத்தது எது? அந்த என்னவோ ஒன்று என்ன?
அந்த ஒன்று என்ன என்று புரியாத நிலையில் நாங்கள் இணைந்து தேடிக் கொண்டே இருந்தோம். அந்தத் தேடுதல்தான் அது!
இன்று அவர் உடல் அளவில் இல்லை. ஆனால் அந்தத் தேடுதலை என்னுள் நிரந்தரமாக்கி விட்டார் அவர். இதுவே நட்பின் உச்சம் என்று அவர் என்னுள் ஆழத்தில் உணர்த்தி விட்டார்.
அந்த அளவு அவர் என்னுள் இரசவாதம் புரிய வேண்டுமென்றால், அசாத்திய திறமை, ஞானம், பக்தி, தெளிவு, தலைமைப் பண்பு கொண்டவராய் அவர் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அதுதான் இல்லை.
வேறு என்னதான் விசேடத் திறமை அவரிடம் இருந்தது? மேற்சொன்ன எவையுமே அவரிடம் இல்லாத ஒரே சிறப்புத்தான் அவரை நிரப்பி இருந்தது. அதனால் அவ்வளவும் இருந்தன அவரிடம்.
ஒரு உருவகமற்ற உருவத்தைக் கொண்டிருந்தார் அவர். என்னைப் பற்றிய பல உருவகங்களை நானே உருவாக்கி அவைகளைக் கொண்டு வதைப்பட்டு வாழும் ஓர் இளைஞனாய் அவருடன் நட்பு கொண்டேன் அப்பொழுது.
வெற்றுக் கூடாய் அவர் இருப்பதாய் முதலில் எனக்குத் தோன்றியது, முதல் சந்திப்பில். பிறகுதான் மெல்ல மெல்லப் புரிந்தது கண்ணுக்குத் தெரியாத கருணையால் நிறைந்த அமுதக்கலசம் அப்படித்தான் வெறுமையாகத் தோற்றம் தரும் என்று.
அவருடைய உறவாடலில் நான் சிறிது சிறிதாய் வெற்றுக்கூடாகிக் கொண்டிருந்திருக்கிறேன் என்று வெகுகாலம் கழித்துப் புரிந்தது எனக்கு.
அந்தப் பரிணாமத்தில் ஒருபுறம் ஆனந்தம் கிட்டினாலும் மறுபுறம் ஒரு நிரந்தரமற்ற உலகில் நுழைவது போல் இருக்கும், பயம் தோன்றும்.
ஆனால் இன்றோ, அந்த நிரந்தரமற்ற நிலையே நிரந்தரமான ஆனந்தம் என்று புரிகின்றது.
நட்பு என்றால் இதுவன்றோ நட்பு! நண்பன் என்றால் இவனன்றோ என் நண்பன் என்று எப்பொழுதும் என் உள்ளம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
காந்தியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகை நடத்துபவர், இலக்கியவாதி, அச்சக முதலாளி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், நகைச்சுவையாளர், சொற்பொழிவாற்றல் மிக்கவர், காந்தி அமைதி நிறுவனச் செயலர்- இப்படியாக அவரை எப்படியாவது அடையாளத்துக்குள் அடைக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடித்துக் கொண்டே இருக்கக் கூடியவர் என்ற முத்திரையைப் பதித்துக் கொண்டவர்.
நட்புக்கு வயது இல்லை என்று உணர்த்தியவர். இவர் வீட்டுப் பழையமுதும் அமிர்தமாகும்.
என்னுள் இருந்த உலகின் பிரம்மாண்டத்தை எளிதில் உணர்த்தியவர்.
உலகைக் காரணம் காட்டிப் பொய்யாக வாழும் மானுட வாழ்வில் தனக்குத் தானே உண்மையாக வாழ்ந்தாலே போதும் என்று கற்றுத் தந்தவர்.
தூங்காமல் உலகிற்குக் கேடு விளைவிப்பதை விட, தூங்குவதே மிகச் சிறந்த சேவை என்பவர்.
சைவமோ அசைவமோ மனிதனை இணைக்க உதவும் உணவே உன்னதமான உணவு என்பவர்.
அறநெறிகளைப் புறத்தே அறிவுறுத்துவதை விட அகத்துக்கு முதலில் உணர்த்த வேண்டும் என்பவர்.
பழமையின் பதிவுகளைத் துடைத்துப் போட்டு என்றும் புதுமையில் புரண்டு கொண்டிருந்தவர் அவர்.
இப்படி எத்தனையோ சொல்லலாம் அவரைப் பற்றி. மேலும் மேலும் அறிய ஆர்வம் உந்தித் தள்ளுகிறதோ?
‘இவனன்றோ என் நண்பன்’ என்ற என்னுடைய சிறு நூல் போதாது.
இரசித்துப் படித்து ஆனந்தத்தில் திளைத்து வாழலாமே!
உருவகமற்ற உறவுகளை உருவாக்குவோம்!!!
சூ.குழந்தைசாமி
Share This Post :
2 Replies to “The Smiling Gandhian: T.D.Tirumalai”
M.D.Chander
26 Oct 2026
A tribute to the great Gandhian, well narrated in a friendly manner, by his true disciple Dr.S.Kulandaisamy. I did a squirrel role alongwith Dr.Krishnamoorthi in proof reading the manuscript of this book. Dr.S.K’s gratitude to Gandhia Maamani is expressed short, though he has much more memories to add.
2 Replies to “The Smiling Gandhian: T.D.Tirumalai”
A tribute to the great Gandhian, well narrated in a friendly manner, by his true disciple Dr.S.Kulandaisamy. I did a squirrel role alongwith Dr.Krishnamoorthi in proof reading the manuscript of this book. Dr.S.K’s gratitude to Gandhia Maamani is expressed short, though he has much more memories to add.
Dear Chander Sir,
Greetings and Thanks 😊
Perhaps the two letters of prefix M & D in your name mean: Magnanimity and Dayaalu.
😃