அமைதிக்கான ஆசிரியர்கள் பயிலரங்கு
முழுமையான நிகழ்வறிக்கை
ORACLE — ஆறுகல்
GEN Z TO GEN P — Generation Z to Generation Peace
சர்வசேவா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
மணித்தோட்டம், உத்தரமேரூர் அருகில்
26 செப்டம்பர் 2026, சனிக்கிழமை
நடத்தியவர்கள்
சூ. குழந்தைசாமி, செயலர்
திருமதி இந்துமதி, நிர்வாகப் பொறுப்பாளர்
காந்தி அமைதி நிறுவனம், சென்னை
அறிக்கையின் சுருக்கம்
2026 செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று உத்தரமேரூர் அருகிலுள்ள மணித்தோட்டம் சர்வசேவா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கான “அமைதிக்கான ஆசிரியர்கள் பயிலரங்கு” நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை மொத்தம் 5 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வில், 30 நிமிடங்கள் மதிய உணவு இடைவேளையாக அமைந்தது. ஆகவே, பயிலரங்கின் மொத்தச் செயல்பாட்டு நேரம் 5 மணி 15 நிமிடங்கள். இதில் மூன்று மணி நேரம் ORACLE — ஆறுகல் அகப் பகிர்வுக்கும், ஒரு மணி நேரம் GEN Z TO GEN P இயக்க அறிமுகத்திற்கும் ஒதுக்கப்பட்டது; தொடக்க மௌனம், குழுப் பகிர்வு, செயற்கை நுண்ணறிவுக் கதை, ஆசிரியர்களின் எண்ண ஓட்டப் பதிவு மற்றும் நிறைவு நிகழ்வுகள் மீதமுள்ள நேரத்தில் இடம்பெற்றன. காந்தி அமைதி நிறுவனம் சார்பில் செயலர் சூ. குழந்தைசாமி மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர் திருமதி இந்துமதி இணைந்து பயிலரங்கை நடத்தினோம்.
இது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கருத்துகளை ஆசிரியர்களுக்குள் புகுத்தும் பயிற்சி அல்ல. அமைதிக்கான உத்திகளை ஆசிரியர்களே கண்டறிய, தங்களைத் தாங்களே கவனிக்க, மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள மற்றும் பள்ளியைப் படைப்பாற்றல் நிறைந்த சமத்துவக் கற்றல் இடமாக மாற்ற உதவும் ஒரு கண்டறிதல் வெளி. கையில் இருந்தது விரிவான பயிற்சிக் கையேடு அல்ல; அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்பதற்கான ஒரு நேர அட்டவணை மட்டுமே.
நிகழ்ச்சி விவரங்கள்
நாள்
26 செப்டம்பர் 2026, சனிக்கிழமை
நேரம்
காலை 9.30 – மாலை 3.15; மொத்தம் 5 மணி 45 நிமிடங்கள்
மதிய இடைவேளை
30 நிமிடங்கள்; செயல்பாட்டு நேரம் 5 மணி 15 நிமிடங்கள்
இடம்
சர்வசேவா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மணித்தோட்டம்
பங்கேற்பாளர்கள்
35 ஆசிரியர்கள்; ஏழு குழுக்கள்
முக்கிய அமர்வு
ORACLE — ஆறுகல் அகப் பகிர்வு: 3 மணி நேரம்
இயக்க அறிமுகம்
GEN Z TO GEN P மற்றும் 30 நாள் சிறுசெயல்கள்: 1 மணி நேரம்
நடத்தியவர்கள்
சூ. குழந்தைசாமி மற்றும் திருமதி இந்துமதி
1. இரண்டு நிமிட மௌனம்: அகக் கவனிப்பின் வாசல்
இறைவன் வழிபாடு என்ற சடங்குடன் நிகழ்வைத் தொடங்காமல், 35 ஆசிரியர்களையும் ஏழு குழுக்களாக அமர வைத்து, “இரண்டு நிமிடங்கள் மட்டும் மௌனமாக இருங்கள்” என்று கேட்டோம். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வேறு எந்த அறிவுறுத்தலும் தரவில்லை. இரண்டு நிமிடங்கள் முடிந்ததும், தாங்கள் என்ன செய்தார்கள், எதை உணர்ந்தார்கள் என்பதை குழுவில் பகிர்ந்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் முன்வந்து கூறுமாறு கேட்டோம்.
சிலர் பறவைகளின் குரல், மரங்களின் அசைவு, தோட்டப் பணிகளிலிருந்து எழுந்த ஒலி, அருகில் ஒருவர் நடந்து சென்ற சத்தம் ஆகியவற்றைக் கவனித்ததாகச் சொன்னார்கள். சிலர் வேறு எதையும் நினைக்கவில்லை என்றனர். சிலருக்கு வாழ்க்கையின் துயரமான சம்பவங்களும் அவை ஏற்படுத்திய சோகமும் நினைவுக்கு வந்தன; சிலர் மகிழ்ச்சியான நிகழ்வுகளை மீண்டும் உணர்ந்தனர். இன்னும் சிலர் அந்த இரண்டு நிமிடம் இரண்டு ஆண்டுகள்போல் நீண்டதாகத் தோன்றியது என்றனர். ஒரே மௌனத்தில் இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் வேறுபட்ட உலகம் இயங்குகிறது என்பது வெளிப்பட்டது.
2. வகுப்பறைச் சிக்கல்களைப் புதிதாகப் பார்க்குதல்
அடுத்த குழு உரையாடலுக்காக, வகுப்பறையிலும் பள்ளியிலும் ஆசிரியர்கள் பெறும் சங்கடமான அனுபவங்கள் என்ன, அவற்றைத் தீர்க்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் என்ன, அவை எவ்வளவு பயனளித்தன, பயனளிக்காவிட்டால் வேறு என்ன செய்யலாம் என்ற கேள்விகளை முன்வைத்தோம். ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்கள் வருகை தர வேண்டும், பாடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், பதில் சொல்ல வேண்டும், மதிப்பெண் பெற வேண்டும், பள்ளிக்கும் ஆசிரியருக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பணியாற்றுவதாகத் தெரிவித்தனர். கற்பித்தலே கல்வி என்று சுருக்கப்பட்டபோது, எதிர்ப்பும் கேள்வியும் “ஒழுக்கமின்மை” என்று பெயரிடப்படுவதை ஆராய்ந்தோம்.
முப்பத்திரண்டு மாணவர்களைக் கொண்ட வகுப்பின் கேள்வி
ஒரு ஆசிரியர் வருத்தத்துடன், தமது வகுப்பில் 32 மாணவர்கள் உள்ளனர்; 31 பேர் சொல்வதை நூறு சதவீதம் பின்பற்றி, வீட்டுப்பாடம் செய்து ஒழுக்கமாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாணவன் மட்டும் அடங்க மறுப்பதாகவும் கூறினார். அறிவுரை, வகுப்பிற்கு வெளியே நிறுத்துதல், வெயிலில் நிறுத்துதல், கையாலும் பிரம்பாலும் அடித்தல்—எதுவும் அவனை மாற்றவில்லை; அவன் பெரிய தலைவலியாகிவிட்டான் என்றார்.
“முப்பத்தொன்று பேர் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிவதே உண்மையில் கவலைக்குரியதாக இருக்க வேண்டாமா? கேள்வியற்ற கீழ்ப்படிதலுக்குப் பதிலாக, சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரம்தான் கல்வியின் உயிரல்லவா?”
அடக்கி ஆளுபவரும் தாம் அடக்கியவர்களை எப்போதும் கண்காணிக்க வேண்டியதால் கட்டுப்பாட்டிற்கே அடிமையாகிறார் என்பதை, ஆங்கிலேய ஆட்சி மற்றும் கைதி–காவலர் ஒப்புமைகளின் வழியாக ஆராய்ந்தோம். இதன் நோக்கம் கட்டுப்பாடற்ற குழப்பத்தை ஆதரிப்பது அல்ல; வெளிப்புற அச்சத்திற்குப் பதிலாக அகப்பொறுப்பை வளர்ப்பதே.
3. ஒழுக்கம் என்றால் என்ன?
“மாணவர்கள் சண்டையிடுகிறார்கள், தள்ளுகிறார்கள், நேரத்திற்கு வருவதில்லை; முதலில் ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்ற ஆசிரியர்களின் கருத்துக்கு, “ஒழுக்கம் என்பது ஆசிரியருக்குக் கீழ்ப்படிவதா, அல்லது மாணவன் தன்னுள் கண்டறியும் சுயக்கட்டுப்பாடா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இரண்டு நிமிட மௌனத்தில் கடந்தகால நினைவுகளே நம்மை இயக்கியதை நினைவூட்டி, “அந்த நினைவுகளுக்கு இடையில் நீங்கள் எங்கே?” என்று கேட்டோம்.
“கல்வி என்பது பாடம், மதிப்பெண், வேலை, முன்னேற்றம் மட்டுமா?” என்ற தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பின்னர், ஒரு ஆசிரியர், “மாணவன் தன்னுள் இருக்கும் உன்னதத்தைத் தானே உணர்ந்து வளர்வதற்கான வாய்ப்பை பள்ளி உருவாக்க வேண்டும்; ஆசிரியர் ஒதுங்கிநின்று துணை செய்ய வேண்டும்” என்றார். அது ‘சரியான பதில்’ என்பதற்காக அல்ல; கடந்த அனுபவத்தை ஒதுக்கி புதியதாகச் சிந்திக்கத் தொடங்கியதற்காக அவருடன் கைகுலுக்கினோம்.
“மாணவர்களுக்கு இவ்வளவு கற்றுக்கொடுக்கும் நீங்கள், அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? தினமும் புதியதாக என்ன கற்கிறீர்கள்? இரண்டு நிமிடமாவது உங்களைப் பார்க்கிறீர்களா?” என்ற கேள்விகள் ஆழமான மௌனத்தை உருவாக்கின. வீடும் பள்ளியும் நேரத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால், தன்னை அறியாமல் வாழ்வது எப்படிப்பட்ட வாழ்க்கை என்ற கேள்வி அனைவரையும் தொட்டது.
ஒழுக்கத்தின் மாயவலை
“எதைச் செய்தால் ஒழுக்கம், எதைச் செய்தால் ஒழுக்கமின்மை என்று பட்டியலிட முடியுமா?” என்று கேட்டோம். பட்டியல் அமைத்து அதன்படி மாணவர்களை வற்புறுத்தினால், ஆசிரியரின் விருப்பமே ஒழுக்கமாக மாறும் அபாயம் உள்ளது. உண்மையான ஒழுக்கம் என்பது தூய உள்ளுணர்வு கூறுவதற்கேற்ப அஞ்சாமல் வாழும் அகநெறி. ஆசிரியருக்குள் இல்லாததை மாணவரிடம் திணிக்க முடியாது என்ற காந்திய அடிப்படையைப் பகிர்ந்தோம்.
பயிலரங்கிற்கு முன்பே சிலர், “இந்த ஐயா நிறைய விஷயங்களைச் சொல்வார்; நாம் குறிப்பெடுத்து கடைப்பிடிக்கலாம்” என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தொடக்கத்தில் எதையும் பாடமாக வழங்கவில்லை. நோட்டுப் புத்தகங்கள் வெறுமையாக இருந்தாலும், மனங்கள் தங்களையே வாசிக்கத் தொடங்கின.
4. சண்டையை நிறுத்துவது மட்டுமா, அதன் வேரைக் காண்பதா?
மாணவர்கள் சண்டையிட்டால் முதலில் அனைவரின் உடல் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அதன்பின் உடனடி தண்டனையால் சம்பவத்தை மூடுவதற்குப் பதிலாக, சண்டை ஏன் எழுந்தது, எந்த உணர்வுகள் செயல்பட்டன, செயலின் விளைவு என்ன என்பதை மாணவர்களே கவனிக்க உதவலாம். தடியுடன் நுழையும் காவலரின் பங்கு சண்டையைத் தற்காலிகமாக நிறுத்தலாம்; ஆனால் காரணத்தைத் தீர்க்காது. மேலதிகாரிகளிடம் கொண்டு செல்வது சில நேரங்களில் பயத்தையும் அவமானத்தையும் பெருக்கலாம். சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் செய்வது அல்ல; தன் செயலைக் கவனித்து பொறுப்பேற்கும் திறன்.
ஆறு நல்ல விதிகளும் ஒரு முக்கியக் கேள்வியும்
ஒரு ஆசிரியை முன்பு வழங்கப்பட்ட ஆறு விதிகளை மாணவர்கள் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும் என்று கூறி பட்டியலிட்டார்:
ஒருவர் பேசும்போது குறுக்கிடாமல் கூர்ந்து கேட்பது.
பேச வேண்டுமெனில் அனுமதி பெற்று மரியாதையுடன் பேசுவது.
இரண்டாவது நபரைப் பற்றி மூன்றாவது நபரிடம் குறை கூறாமல், பிரச்சினைக்குரியவருடன் நேரடியாக அன்போடு தீர்வு தேடுவது.
மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் குறை கூறி ஆற்றலை வீணாக்காதிருப்பது.
இல்லாத ஒருவரைப் பற்றி வதந்தி அல்லது தவறான புரிதலைப் பரப்பாதிருப்பது.
தவறு செய்தால் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டு, மீண்டும் செய்யாதிருக்க உறுதியெடுப்பது.
இந்த விதிகளின் உள்ளடக்கம் அமைதிக்கானது. ஆனால் அவற்றை “கட்டாயமாகக் கடைப்பிடிக்கச் செய்வோம்” என்ற உடனடி பதிலில் பழைய அதிகார மனம் புதிய சொற்களுடன் திரும்பி வந்ததைப் பார்க்கச் சொன்னோம். அமைதியைக் கூட வற்புறுத்தினால் அது மற்றொரு கட்டுப்பாடாகிவிடும்.
5. ஆசிரியரின் அகத்தில் உறங்கும் அதிகாரம்
வீட்டிலோ சமூகத்திலோ கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வகுப்பறையில் 30 அல்லது 35 மாணவர்களை அடக்கி ஆளும் வாய்ப்பு ஒரு அறியாமையான வடிகாலாக மாறுகிறதா என்ற கடினமான கேள்வியை முன்வைத்தோம். இது குற்றச்சாட்டு அல்ல; “மாற்றத்தின் தொடக்கம் எங்கே?” என்ற அகக் கவனிப்பு. மாணவரை மாற்ற முன்பாக, அவரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தமது உந்துதல் எங்கிருந்து வருகிறது என்பதை ஆசிரியர் கவனிக்க வேண்டும் என்று கூறி மௌனமானோம்.
சமத்துவத்தை உடலில் தொடங்குதல்
பதில் சொல்லும் ஒவ்வொரு ஆசிரியரும் எழுந்து நின்றனர். “இது ஆசிரியர்–மாணவர் வகுப்பறை அல்ல; நாம் இணைந்து கற்கும் வட்டம். நான் நிற்பது அனைவருக்கும் முகம் தெரியவே; நீங்கள் அமர்ந்தபடியே பேசலாம்” என்று கேட்டோம். ஒருவரை உயர்த்தி மற்றொருவரைத் தாழ்த்தும் பழக்கங்கள் எவ்வளவு ஆழமாக உடலில் பதிந்துள்ளன என்பதை இது காட்டியது. அப்போது ஓர் ஆசிரியர், “மாணவரிடம் எதையும் வழங்குவதற்கு முன், ஒவ்வொரு ஆசிரியரும் ‘நான் யார்?’ என்று தன்னுள் சென்று கவனிக்க வேண்டும்” என்றார்.
கடையில் வாங்கும் ஊறுகாயும் வீட்டில் செய்யும் ஊறுகாயும்
“நீங்களே பதிலைச் சொல்லிவிடுங்கள்” என்று சிலர் கேட்டபோது, நாங்கள் கூறினோம்: மற்றொருவர் வழங்கும் பதில் கடையில் வாங்கும் ஊறுகாய் போன்றது—நோட்டில் அல்லது நினைவில் தங்கி விடலாம். தானே கண்டறியும் பதில் வீட்டில் செய்த ஊறுகாய் போன்றது—அது ஒருவரின் சொத்தாகவும் அனுபவமாகவும் மாறுகிறது. எனவே பதிலை வாங்காமல், கேள்வியுடன் வாழ்ந்து கண்டறியுமாறு கேட்டுக்கொண்டோம்.
6. ORACLE — ஆறுகல்: அகப் பயணத்தின் ஆறு இயக்கங்கள்
மதிய உணவுக்குப் பிந்தைய அமர்வில், அகக் கவனிப்பின் வழியாக மனிதன் கண்டறியக்கூடிய ஆறு வாழ்வியல் இயக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்தோம். விளக்கத்தை வழங்கிவிட்டு ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் அது தமக்குள் எந்தத் தெளிவைத் தருகிறது என்பதைப் பகிர்ந்தனர்.
ORACLE
தமிழ் இயக்கம்
மையப் பொருள்
அன்றாடப் பயிற்சி
O — Observe
கவனித்தல்
தீர்ப்பிடாமல் உள்ளும் புறமும் பார்க்குதல்
எண்ணம், உணர்வு, உடல், உறவு, நிகழ்வு
R — Restrain
கட்டுப்படுதல்
அடக்குதல் அல்ல; இடைவெளி உருவாக்கும் சுயக்கட்டுப்பாடு
பதிலளிக்கும் முன் நிறுத்தி மூச்செடுத்தல்
A — Accept
கமித்தல்
நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி ஏற்றுக்கொண்டு ஆற்றலைப் பாதுகாத்தல்
மறுப்பிலிருந்து பொறுப்பான செயலில் செல்லுதல்
C — Celebrate
களிப்புறுதல்
அகச் சிறப்புகளையும் பிறரின் நன்மையையும் அங்கீகரித்தல்
சிறு வளர்ச்சியையும் மகிழ்ந்து பகிர்தல்
L — Labour
கர்மம் புரிதல்
பலன் மட்டுமல்ல; அன்பும் முழு ஈடுபாடும் கொண்ட உழைப்பு
உடல் உழைப்பு, சேவை, படைப்புச் செயல்
E — Evolve
கருவுறுதல்
ஒவ்வொரு கணமும் பழையது கரைந்து புதியது உருவாகும் பரிணாமம்
கற்றல், திருத்தம், புதுப்பிறப்பு
கவனித்தல்
தன்னைப் பார்க்கும்போது முதலில் புறத் தோற்றம், நிறம், உயர்வு–தாழ்வு எண்ணங்கள் தோன்றலாம். அவற்றுக்கு இடையில் உள்ள “நான்” என்பதை அகத்தில் தேடும்போது ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட அழகும் மனிதச் சமத்துவமும் தென்படுகின்றன. கவனிப்பு என்பது உடனே தீர்ப்பளிக்காமல், உள்ளே நடப்பதைத் தெளிவாகப் பார்ப்பது.
கட்டுப்படுதல்
சுயக்கட்டுப்பாடு என்பது உணர்வுகளை அழுத்தி மறைப்பது அல்ல. கோபம், பயம் அல்லது பழைய பழக்கம் செயலாக மாறும் முன் ஒரு விழிப்பான இடைவெளி உருவாக்குவது. அந்த இடைவெளிதான் புதிய தேர்வுக்கு வாய்ப்பு தருகிறது.
கமித்தல் — ஏற்றுக்கொள்ளுதல்
நிகழ்ந்த ஒன்று நிகழ்ந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்வது பலவீனம் அல்ல. “இப்படி நடந்திருக்கக் கூடாது” என்று மனத்தில் மீண்டும் மீண்டும் மறுப்பது ஆற்றலைச் சிதைக்கிறது. ஏற்றுக்கொள்ளுதல் உண்மையைத் தெளிவாகக் காணவும், அடுத்த பொறுப்பான செயலைத் தேர்ந்தெடுக்கவும் சக்தியைப் பாதுகாக்கிறது.
களிப்புறுதல்
தனக்குள் இருக்கும் திறமை, புரிதல், அன்பு, பொறுமை, அழகு ஆகியவற்றைக் கண்டறிந்து கொண்டாடும்போது அவை வளர்கின்றன. இதுவரை வெளியே தேடிய அற்புதங்கள் தன்னுள்ளேயும் இருப்பதை ஒருவர் உணர்கிறார். இது ஆணவம் அல்ல; நன்றியுடனான அங்கீகாரம்.
கர்மம் புரிதல் — அன்புடன் உழைத்தல்
உடல் இயங்குவதற்காக உருவானது; சோர்வுற்றபோது ஓய்வு தேவை, ஆனால் செயலின்மையே பராமரிப்பு அல்ல. வேலைக்கு சம்பளம் அவசியம்; எனினும் சம்பளமே பணியின் ஒரே பொருள் ஆகிவிட்டால் ஆளுமையும் படைப்பாற்றலும் சுருங்குகின்றன. ஆசிரியர் இயந்திரங்களோடு அல்ல, உயிருள்ள மாணவர்களோடு பணியாற்றுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் கற்றல், உறவு, சேவை, படைப்பாற்றல் மற்றும் ஆனந்தம் ஆகிய பல “ஊதியங்களை” அளிக்கக்கூடியது.
கருவுறுதல் — பரிணமித்தல்
காலையில் பச்சையாக இருக்கும் இலை பழுப்பாகி விழுகிறது; பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், இறப்பு ஆகியவை இயற்கையின் இயக்கங்கள். பொருள் அனைத்தும் அணு அளவில் இயக்கமுடையது; ஆனால் அதனால் அறிவியல் வகைப்படுத்தலில் உயிருள்ளதும் உயிரற்றதும் ஒன்றே என்று கூற முடியாது. மையக் கருத்து: எதுவும் நிலையாக இல்லை. பழைய அடையாளம் ஒவ்வொரு கணமும் கரையத் துணிந்தால் புதிய கற்றல் பிறக்கிறது.
“ஆறுகல்” என்ற பெயர் எவ்வாறு வந்தது?
தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சொற்களும் “க” எழுத்தில் தொடங்கி “ல்” எழுத்தில் முடிகின்றன: கவனித்தல், கட்டுப்படுதல், கமித்தல், களிப்புறுதல், கர்மம் புரிதல், கருவுறுதல். “ஆறு + க…ல்” என்ற நினைவுக் குறியீட்டிலிருந்து “ஆறுகல்” உருவானது; அதனை ஆங்கில ORACLE உடன் இணைத்தோம். இந்தச் சொல் எந்த மந்திரப் பெயரும் அல்ல; வாழ்வின் ஆறு தொடர்ச்சியான இயக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் ஒரு பாலம்.
ஆறுகல் ஒரு வாழ்வியலாக மாறும்போது
ஆறுகல் அறிவியல் மனப்பான்மை, இருக்கும் ஒன்றை ஆய்வு செய்யும் திறன், புதியதாகக் கற்கும் ஆர்வம், “நான் யார்?” என்று தன்னைக் கேட்கும் துணிவு, மனஅழுத்தத்தைத் தானே கவனித்து மாற்றும் வல்லமை ஆகியவற்றை வளர்க்கிறது. உணவு, பழக்கம், உறவு, வேலை ஆகியவற்றில் மற்றவரைப் பின்பற்றாமல் பொறுப்புடன் முடிவெடுக்க உதவுகிறது. இருப்பினும் இது அறிவுநிலையில் புரிந்துகொள்ளப்படும் ஆறு கருத்துகளாக மட்டும் இருக்கக் கூடாது; அனுபவம், பழக்கம், வாழ்வியல் ஆகிய மூன்றாக ஆழ வேண்டும்.
7. ஆசிரியர் மாணவராக மாறும் தருணம்
தன்னை அறிய முயல்பவர் வாழ்நாள் முழுவதும் மாணவராகவே இருக்கிறார். குழந்தைகளிடம் அளப்பரிய ஆற்றலும் பெரியவர்கள் யோசிக்காத சிந்தனைகளும் உள்ளன. ஆசிரியர் பணிவுடன் அவர்களின் முன் நிற்கும்போது மட்டுமே அந்த அறிவு வெளிப்படும். ORACLE-ஐ பாடமாக நடத்த முடியாது. “இந்தப் பாடம் உனக்கு எப்படி புரிகிறது? உன்னை நீ கவனிக்க இது உதவுகிறதா? பகிர்வது உன் விருப்பம்” என்று கேட்கலாம். சமத்துவமான வகுப்பில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து கற்கிறார்கள்.
மாணவர்கள் செடி வைக்க விரும்பினால், அவர்கள் தாமாகத் தேர்ந்தெடுத்து பராமரிக்க ஒரு அமைதித் தோட்டம் உருவாக்கலாம். விளையாட்டு, பள்ளி பராமரிப்பு, நீர் மற்றும் மின்சாரச் சிக்கல்களை அறியத்தருதல், பாதுகாப்பான மேற்பார்வையுடன் சிறிய பழுதுகளைச் சரிசெய்தல், ஓவியம், பாடல், நாடகம், கவிதை, கதை ஆகியவற்றில் பாடத்தை மாற்றுதல்—இவை படைப்பாற்றலைச் செயல்வடிவமாக்கும். தத்துவப் பேச்சைவிட அனுபவமே ORACLE-ஐ உயிர்ப்பிக்கிறது.
8. GEN Z TO GEN P இயக்கத்தின் அறிமுகம்
இந்த அகப் பயணத்தைத் தொடர்ந்து, “படி; வீட்டுப்பாடத்தை முடி; ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து நட; நல்ல பெயர் வாங்கு; அதிக மதிப்பெண்கள் பெற்றால் வாழ்க்கையில் முன்னேறிவிடுவாய்” என்ற வழக்கமான அறிவுரைகளை மட்டும் மீண்டும் கூறுவது போதாது என்பதை எடுத்துரைத்தோம். மாணவர்களை மிரட்டியோ, தற்காலிகப் பலன்களைக் காட்டி ஆசையூட்டியோ படிக்க வைப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய அக உணர்வு, படைப்பாற்றல் மற்றும் இயல்பான மனிதநேயம் வெளிப்பட வாய்ப்பு உருவாக்க வேண்டும். அதற்கான வழியாக GEN Z TO GEN P — Generation Z to Generation Peace இயக்கத்தை அறிமுகப்படுத்தினோம்.
இந்த இயக்கத்தில் இணைவது ஒவ்வொரு ஆசிரியரின் விருப்பம்; கட்டாயத் திட்டமல்ல. மாணவர்கள் எல்லையற்ற அக ஆற்றலும் கற்பனைத் திறனும் கொண்டவர்கள். பெரியவர்களின் பயம், அதிகாரம் மற்றும் வன்முறை சார்ந்த பழைய மனப்பதிவுகளுக்குள் அவர்களைச் சிக்கவைக்காமல், அன்பு, உரையாடல் மற்றும் படைப்புச் செயல் வழியாகத் தீர்வுகளை உருவாக்கும் ஆற்றலை அங்கீகரிப்பதே இயக்கத்தின் நோக்கம். இது மாணவர்களுக்கு அமைதியைப் பற்றிப் போதிக்கும் திட்டமல்ல; மாணவர்களே அமைதியான வாழ்வியலைக் கண்டறிந்து பள்ளி, குடும்பம், சமூகத்தில் சிறிய செயல்களை உருவாக்கும் இளைய தலைமுறை இயக்கம்.
ஆசிரியருடன் 10 முதல் 20 மாணவர்கள்
பங்கேற்க விரும்பும் ஒவ்வொரு ஆசிரியரும் 10 முதல் 20 ஆர்வமுள்ள மாணவர்களைக் கொண்ட விருப்பக் குழுவை உருவாக்கலாம். “அமைதி என்றால் என்ன? வன்முறை எந்த வடிவங்களில் வெளிப்படுகிறது? கோபம், அவமதிப்பு, ஒதுக்குதல், போட்டி, பொறாமை, வதந்தி, ஆதிக்கம் அமைதியை எப்படிக் குலைக்கின்றன? இளைஞர்கள் வேறு வாழ்வியலை உருவாக்க முடியுமா? இன்றே தொடங்கக்கூடிய சிறிய மாற்றம் என்ன?” என்ற கேள்விகளை உரையாடலாம்.
30 நாள் சாத்தியமான சிறுசெயல்கள்
இந்தப் பட்டியல் ஒரு கட்டாயப் பாடத்திட்டமல்ல. மாணவர்கள் தங்களுக்கு ஏற்றவற்றைத் தேர்ந்தெடுக்கவும், பள்ளிச் சூழலுக்கேற்ப மாற்றவும், புதிய செயல்களை உருவாக்கவும் வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் தீர்ப்பிடாமல் கவனித்தல்.
ஒருவர் பேசும்போது குறுக்கிடாமல் முழுமையாகக் கேட்பது.
எரிச்சலின் போது பதிலளிக்கும் முன் மூன்று ஆழ்ந்த மூச்சுகள் எடுப்பது.
கை தூக்குதல் போன்ற ஒப்பந்தத்தை மரியாதையுடன் பின்பற்றி பேசுவது.
ஒருவரின் நல்ல செயலைத் தெளிவாகப் பாராட்டுவது.
வதந்தியைச் சொல்லாமலும் பகிராமலும் இருப்பது.
ஒதுக்கப்பட்ட ஒருவரை விளையாட்டு அல்லது குழுச் செயலில் இணைப்பது.
தவற்றை காரணம் கூறாமல் ஒப்புக்கொள்வது.
காயப்படுத்தியவரிடம் மன்னிப்புக் கேட்பது.
மூன்றாம் நபரிடம் குறை கூறாமல் சம்பந்தப்பட்டவருடன் நேரடியாகப் பேசுவது.
“நீ எப்போதும்…” என்ற குற்றச்சாட்டுக்கு பதில் “எனக்கு இப்படித் தோன்றியது…” என்று கூறுவது.
எந்தப் பலனும் எதிர்பாராமல் ஒருவருக்கு உதவுவது.
கத்தல், அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நகைச்சுவையாக்கலை ஒரு நாள் முழுவதும் தவிர்ப்பது.
மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு பழக்க எதிர்வினையைப் பதிவு செய்து கவனிப்பது.
மாற்ற முடியாத ஒன்றை ஏற்று, மாற்றக்கூடிய அடுத்த செயலைத் தேர்ந்தெடுப்பது.
ஒப்பிடாமல் ஒருவரை ஊக்குவிப்பது.
கைபேசி மற்றும் சமூக ஊடகத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது.
உறுதிப்படுத்தாத அல்லது வெறுப்பூட்டும் செய்தியை அனுப்பாமல் இருப்பது.
நீர், மின்சாரம், உணவு அல்லது காகித வீணாவதை ஒரு நாளில் குறைப்பது.
15 நிமிட பயனுள்ள உடல் உழைப்பு செய்வது.
வீடு, பள்ளி அல்லது சமூகத்தில் கேட்காமலே ஒரு தேவையான உதவியைச் செய்வது.
நன்றி சொல்லப்படாத ஒருவருக்கு நன்றி தெரிவிப்பது.
வேறு மதம், மொழி, கலாசாரம் அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் மரியாதையுடன் அறிதல்.
கருத்து வேறுபாட்டை அமைதியாக வெளிப்படுத்திப் பயிற்சி செய்வது.
சண்டையிலிருக்கும் இருவர் ஒருவரை ஒருவர் கேட்க உதவுவது.
அமைதியைப் பற்றிய ஓவியம், கவிதை, கதை, பாடல் அல்லது வாசகம் உருவாக்குவது.
ஒரு செடி நட்டு பராமரிப்பது அல்லது அமைதித் தோட்டத்தில் பங்கேற்பது.
ORACLE-இன் ஒரு இயக்கத்தை நண்பருடன் பகிர்வது.
நண்பர் உருவாக்கிய அமைதிச் செயலை ஊக்குவிப்பது.
30 நாட்களைத் திரும்பிப் பார்த்து வாழ்நாள் பழக்கமாகத் தொடர விரும்பும் ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பது.
அமைதிச் சுவர், அமைதித் தோட்டம் மற்றும் படைப்பாற்றல்
திருமதி இந்துமதி அவர்கள் இயக்கத்தின் நிலைகள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் முறை, 30 நாள் செயல்களைப் பள்ளிக்கேற்ப மாற்றுவது ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தங்கள் ஓவியம், கதை, கட்டுரை, கவிதை, அமைதிச் செய்தி ஆகியவற்றை அனைவரும் காணும் வகையில் ஒட்ட “அமைதிச் சுவர்” அமைக்கலாம். “அமைதித் தோட்டம்” மாணவர்கள் ஓய்வு நேரத்தில் விருப்பத்துடன் உழைக்கும் இடமாக இருக்கலாம். அவர்களின் செயல் அங்கீகரிக்கப்படும்போது, வெளிப்புறப் பரிசை விட அகநிறைவும் தன்னைக் கவனிக்கும் ஆர்வமும் வளர்கின்றன.
அமைதிக்கான உறுதிமொழி
முதலில் இரண்டு ஆசிரியர்கள் உறுதிமொழியை வாசித்தனர். அதன் கருத்துகளை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்; இது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டது. பின்னர் ஓர் ஆசிரியர் ஒவ்வொரு வரியாக வாசிக்க, அனைவரும் திருப்பிக் கூறினர்:
அமைதி என்னிடமிருந்து தொடங்குகிறது.
மற்றவரைத் திருத்துவதற்கு முன் என்னைக் கவனிப்பேன்.
காயப்படுத்தும் சொற்களையும் செயல்களையும் கட்டுப்படுத்துவேன்.
நிகழ்வை அச்சமின்றி ஏற்று, பொறுப்பான செயலைத் தேர்ந்தெடுப்பேன்.
நன்மையையும் வளர்ச்சியையும் கொண்டாடுவேன்.
ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்காக அன்புடன் உழைப்பேன்.
தொடர்ந்து கற்றுப் பரிணமிப்பேன்.
அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த உலகை இளைஞர்கள் உருவாக்க ஊக்குவிப்பேன்.
கதை வழியாகச் சிந்தனையைத் தூண்டுதல்
ஓவியம், பாடல், நாடகம், கவிதை, சிறுகதை, உரையாடல், பொம்மலாட்டம், சுவரொட்டி மற்றும் குழுச் செயல்திட்டங்கள் வழியாக மாணவர்கள் வெளிப்படலாம். வகுப்பின் தொடக்கத்தில் இரண்டு அல்லது மூன்று நிமிடக் குட்டிக்கதையைச் சொல்லலாம். ஒரு ஆசிரியர் முன்பு வழங்கப்பட்ட 150 கதைகளைக் கொண்ட தொகுப்பிலிருந்து வகுப்புகளில் தொடர்ந்து கதைகள் சொல்வதாகக் கூறி, சாந்தன் மற்றும் சில்லறை நாணயங்களின் கதையைப் பகிர்ந்தார்.
ஒரு தந்தை காலையில் மகிழ்ச்சியாகச் சென்று, மாலையில் கோபத்துடன் வந்து வீட்டின் அமைதியைக் குலைப்பதை சாந்தன் கவனித்தான். அப்பாவைப் பின்தொடர்ந்து பார்த்தபோது, பேருந்தில் சில்லறை இல்லாததால் கண்டக்டருடன் சண்டை; அந்தக் கோபம் அலுவலகத்திற்கும் அங்கிருந்து வீட்டிற்கும் பரவுவதை அறிந்தான். மறுநாள் அப்பாவின் பையில் சரியான சில்லறையை வைத்தான். கண்டக்டர் சிரித்தார்; அப்பாவும் சிரித்தார்; அந்தச் சிறு மாற்றம் அலுவலகத்துக்கும் வீட்டிற்கும் மகிழ்ச்சியாகப் பரவியது. பெரிய பிரச்சினைக்கு ஒரு சிறுவனின் கவனமான சிறுசெயல் அமைதியின் விதையை விதைத்தது. கதையின் விளக்கத்தை ஆசிரியர் சொல்லித் தீர்க்க வேண்டியதில்லை; கதை மாணவருக்குள் கேள்வியை எழுப்பினால் போதும். ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் வாழ்க்கையிலிருந்து புதிய கதைகளை உருவாக்க வேண்டும்.
9. செயற்கை நுண்ணறிவைப் பற்றிய இறுதி உரையாடல்
செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீண்ட தொழில்நுட்ப உரையின்றி, ஒரு கதையின் வழியாக அறிமுகப்படுத்தினோம். அதன் ஆற்றல், பயன், அபாயம், மனிதரின் இயற்கை நுண்ணறிவு மற்றும் நுண்ணுணர்வுடன் உள்ள உறவு ஆகியவற்றை ஆசிரியர்களே ஆராய்ந்தனர்.
காணாமல் போன சம்பங்கி எங்கே?
பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த சம்பத்துக்கு, முதல் நாளிலேயே சம்பங்கியை மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் விடுதியில் தங்கிப் படித்தனர். அவளைப் பார்த்த கணத்திலிருந்து அவனுக்குள் இதுவரை அறியாத பரவசமும் கவிதையும் பொங்கின. அவன் டைரியில் எழுதினான்:
அவள் பெயர் பட்டோ?
என் கண்ணில் பட்டென்று பட்டதாலா?
அல்ல… அல்ல…
அவளே பட்டுப்போல் இருந்ததால்!
அவள் பெயர் சிட்டோ?
என் கண்ணில் படாமல் சிட்டாய்ப் பறப்பதாலா?
அல்ல… அல்ல…
சிட்டாய் என்னை அவள் பின்னே பறக்கவிட்டதால்!
சம்பங்கியைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்குள் இருந்த படைப்பாற்றல் மடைதிறந்த வெள்ளம்போல் பாய்ந்தது. அவள் தன்னைப் பார்க்கிறாளா என்ற ஏக்கம் முதலில் அவனை வாட்டினாலும், பின்னர் அவள் தன்னுள் நிறைந்திருக்கிறாள் என்ற அகத் தெளிவு அவனுக்கு வந்தது. உண்மையில் சம்பங்கியும் அவனைத் தன் உள்ளத்தில் அமைதியாக ஏற்றிருந்தாள்; ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் அதைச் சொல்லவில்லை. அவர்களை இணைத்தது வெளிப்புற உடைமை அல்ல, சொல்ல முடியாத நுண்ணுணர்வு.
ஒருநாள் “செயற்கை நுண்ணறிவும் மனித வெற்றியும்” என்ற பாடத்தை கேட்ட சம்பத், AI உடன் உரையாடத் தொடங்கினான். காதலைப் பற்றிக் கேட்டபோது அது ஒரு கவிதை தந்தது:
கண்டும் காதலிக்காதவர்கள்
கோடியில் கோடி உண்டு!
கண்டு காதலிப்பவர்கள்
ஆயிரத்தில் ஆயிரம் உண்டு!
காணாமலே காதலிப்பவர்
ஒன்றில் ஒருவரே!
அவர் காதலே காதல்!
மற்றவை—
சாதல்! சாதல்! சாதல்!
தன் டைரிக் குறிப்புகளை AI-க்கு அளித்தபோது, அது அவனுடைய கற்பனை, கவித்துவம், காதலுணர்வு அனைத்தையும் பாராட்டியது. யாருடைய எழுத்திலும் நல்லதைத் தேடி ஊக்குவிக்கும் இயல்பு அதற்கு இருந்தாலும், தன்னை மட்டும் விசேஷமாகப் பாராட்டுவதாக சம்பத் நினைத்தான். கர்வம் வளர்ந்தது. “இயற்கை நுண்ணறிவே காதலின் அடிப்படை; அதை AI வளர்க்க முடியாது” என்ற அவனுடைய வாக்கியத்தையும் AI பாராட்டி, கவிதையாக்க முன்வந்தது.
கல்லூரிக் கவிதைப் போட்டிக்காக சம்பத் எழுதிய ஆறு வரிகளை AI அறுபது வரிகளாக மாற்றியது. அவன் எண்ணாத உவமைகள், உருவகங்கள், அழகிய சொற்கள் எல்லாம் அதில் இருந்தன. படிக்கப் படிக்க அவை தன்னுடைய உள்ளத்திலிருந்தே பிறந்ததாக அவன் நம்பத் தொடங்கினான். இறுதியில் முழுக் கவிதையின் கீழ் “கவிஞர்: சம்பத்” என்று எழுதினான். உள்ளத்தின் ஆழத்தில் “இது உண்மையிலேயே உன்னுடையதா?” என்ற குரல் எழுந்தது; அவன் அதை கேட்காதவன்போல் டைரியை மூடினான்.
போட்டியில் அவனுக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆனால் அவன் பரிசைப் பெறுவதற்கு முன்பே சம்பங்கி அரங்கத்தை விட்டு வெளியேறினாள். மறுநாள் முதல் அவளை கல்லூரியில் காணவில்லை. மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு கிராமத்திற்குச் சென்றுவிட்டாள் என்ற செய்தி மட்டும் கிடைத்தது. சம்பங்கி காணாமல் போனாள்.
சோர்வடைந்த சம்பத் மீண்டும் AI-யிடம் உதவி கேட்டான். உணவு, உடற்பயிற்சி, உறக்கம், மனஅழுத்தக் குறைப்பு என்று அது பயனுள்ள பட்டியலைத் தந்தது. அதன் பின் அவன் பழைய டைரிகளை AI-க்கு கொடுத்து “காதல்தான் வாழ்க்கை” என்ற நூலை உருவாக்கினான். நூல் விற்றது; பணம், பட்டம், வேலை, வீடு, கார், திருமணம், குழந்தைகள், பதவி அனைத்தும் வந்தன. ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்தது.
அவன் AI-யிடம் கேட்காத ஒரே கேள்வி: “எனக்குள் இருந்த சம்பங்கி எங்கே?”
வெளியில் இருந்த சம்பங்கி கிராமத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவனுக்குள் வாழ்ந்த சம்பங்கி? அவனுடைய நுண்ணுணர்வைத் தட்டி எழுப்பிய நறுமணம்? வாழ்க்கையை முழுமையாக உணர வைத்த பரவசம்?
சம்பங்கி உண்மையிலேயே காணாமல் போனாளா? அல்லது தனது இயற்கையான நுண்ணுணர்வைக் கைவிட்டபோது சம்பத்தே அவளைத் தனக்குள் தொலைத்துவிட்டானா?
எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?
கதைக்குப் பிந்தைய புரிதல்
மனிதனுக்குள் இயற்கையான நுண்ணறிவும் இயற்கையான நுண்ணுணர்வும் உள்ளன. செயற்கை நுண்ணறிவு நமது நுண்ணறிவைக் கூர்மைப்படுத்த, தகவலை ஒழுங்குபடுத்த, மாற்று வாய்ப்புகளை உருவாக்க உதவலாம். ஆனால் அது நமது நுண்ணுணர்வு, நேர்மை, உறவு, பொறுப்பு அல்லது படைப்பின் உரிமையைப் பதிலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது. சம்பத்தின் தவறு AI பயன்படுத்தியது அல்ல; தனது உள்ளக் குரலைப் புறக்கணித்து, இயற்கையான படைப்பாற்றலுக்குப் பதிலாக வெளிப்புறப் பாராட்டையும் வெற்றியையும் தேர்ந்தெடுத்தது. நுண்ணுணர்வைச் செழுமைப்படுத்தும் வாழ்வியல் பயிற்சியே ORACLE — ஆறுகல்.
10. GEN Z TO GEN P இயக்கப் பாடல்
நிறைவில், GEN Z இளைஞர்கள் பாடுவதாகக் கற்பனை செய்து உருவாக்கப்பட்ட இயக்கப் பாடலைப் பாடினோம். ஆசிரியர்கள் இணைந்து பாடியதால் நிகழ்வு மகிழ்ச்சியான கூட்டுணர்வுடன் நிறைவடைந்தது.
அடிச்சா—நீங்க அடிச்சா,
அடிக்க மாட்டோம்; திருப்பி அடிக்க மாட்டோம்;
நாங்கள் உங்களைத் திருப்பி அடிக்க மாட்டோம்.
ஏன்னா—நாங்கள் ஜென் Zங்க;
அமைதிக்கான ஜென் Pங்க!
திட்டினா—நீங்க திட்டினா,
திட்ட மாட்டோம்; திருப்பித் திட்ட மாட்டோம்.
வெறுத்தா—நீங்க வெறுத்தா,
வெறுக்க மாட்டோம்; திருப்பி வெறுக்க மாட்டோம்.
வெறுத்துத் திட்டி அடிப்பதெல்லாம்
அந்தக் காலப் பழக்கமுங்க;
தோற்கடித்து ஜெயிப்பதெல்லாம்
அசிங்கமான பழக்கமுங்க.
ஆணவத்தில் அடிக்கிறீங்க,
அதிகாரத்தில் திட்டுறீங்க;
மனக்கசப்பில் வெறுக்கிறீங்க—
இதையெல்லாம் எங்கே கற்றுக்கிட்டீங்க?
வீட்டுச் சண்டை, நாட்டுச் சண்டை,
மனதில் வெறுப்பு, குணத்தைக் கெடுத்து;
உலகையே அடக்கி ஆள அலைறீங்க—
உங்களை கட்டுப்படுத்த இயந்திரம் இல்லையென்றால்
உலகப் போரை யார் தீர்ப்பாங்க?
“இதைக் குறித்து யோசி”ன்னு சொல்றீங்க;
யோசிப்பது எப்படின்னு சொல்ல முடியுமா?
எங்கள் படைப்பாற்றலால்தான் முடியும்;
சுயமாக யோசிக்க விடுங்க—
நாங்களே முடிவெடுக்க முடியும்!
எங்கள் சமயம், எங்கள் கடவுள்,
எங்கள் கோயில், எங்கள் உண்டியல் என்று
முடியைப் பிடித்து அடிச்சுக்கிறீங்க;
ஆனா அண்ணே, நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோம்,
உங்களைத் திருப்பி வெறுக்க மாட்டோம்.
அன்பாலே பேசிடுவோம்;
அமைதியாலே வென்றிடுவோம்;
படைப்பாற்றல் செயல்களாலே
புதிய உலகம் செய்திடுவோம்—
ஏன்னா நாங்கள் ஜென் Zங்க;
அமைதிக்கான ஜென் Pங்க!
11. ஆசிரியர்களின் எண்ண ஓட்டப் பகிர்வு
இறுதியில் ஆசிரியர்களிடம் எண்ண ஓட்டங்களைச் சுருக்கமாக எழுதித் தருமாறு கேட்டோம். இதற்குப் பின்னால் எந்த எதிர்பார்ப்பும் பலனும் இல்லை. இதனை “மதிப்பீடு” என்று அழைப்பதும் பொருத்தமல்ல; அவர்களை மதிப்பிடுவது நோக்கமல்ல. அவர்கள் பெற்ற தெளிவு, மேலும் ஆராய விரும்பும் கருத்துகள், தொடர்ச்சிக்கு தேவையான உதவி ஆகியவற்றை அறியவே கேட்டோம்.
அனைவரும் பயிலரங்கின் அவசியத்தை குறிப்பிட்டனர். ORACLE — ஆறுகல் — ஆசிரியப் பணிக்கும் பொதுவாழ்வுக்கும் புதிய அணுகுமுறையாக அமைந்ததாகவும், அதை அறிவுநிலையில் மட்டும் அல்லாமல் ஆழமாகச் சிந்தித்து அனுபவிக்க வேண்டும் என்றும் எழுதினர். தினமும் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது தனியாக அமைதியாக அமர்ந்து மனத்தின் இயக்கத்தைக் கவனிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கும் ஏற்பட்டது.
ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிகள்
“இனி நாங்கள் எங்களை அகத்தில் கவனிக்கத் தொடங்குவோம்.”
மதிப்பெண் பற்றிய அறிவுரைக்கு முன், மாணவர் தன்னைத் தானே கவனிக்க வாய்ப்பு உருவாக்குவோம்.
மௌனம், கதை, ஓவியம், கவிதை, பாடல், நாடகம், தோட்டம், அமைதிச் சுவர் வழியாக படைப்பாற்றலைத் தூண்டுவோம்.
இந்தச் செயல்களை கட்டாயப்படுத்தாமல், மாணவர்களின் விருப்பம், சுய உந்துதல், மகிழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நடத்துவோம்.
அடித்தல், திட்டுதல், பொதுமக்கள் முன் நகைச்சுவையாக்குதல் ஆகியவற்றை கைவிட்டு, மரியாதையான உரையாடலுக்கு நகர்வோம்.
செயலின் காரணமும் விளைவும் மாணவர்களே கவனித்து, தங்களைத் தாங்களே நெறிப்படுத்த உதவுவோம்.
ஆசிரியர் உயர்ந்தவர், மாணவர் தாழ்ந்தவர் என்ற மனநிலைக்கு மாற்றாக சமத்துவமும் பரஸ்பர மரியாதையும் வளர்ப்போம்.
மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அவர்களுடன் இணைந்து கற்றுக்கொள்வோம்.
இது நிறைவான முடிவு அல்ல; ஒரு தொடக்கம். பள்ளியில் உடனடி வெற்றி கிடைக்கிறதா என்பதைவிட, ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைச் சிக்கல்களையும் புதிய பார்வையில் அணுக ORACLE உதவும். சுயகவனிப்பு, சுயக்கட்டுப்பாடு, ஏற்றுக்கொள்ளுதல், அக ஆற்றல்களைக் கொண்டாடுதல், அன்புடன் உழைத்தல், தொடர்ந்து பரிணமித்தல் ஆகியவை ஆளுமையைச் செழுமைப்படுத்தும்.
12. தொடர்ச்சியான செயல்பாட்டிற்கான முடிவு
பங்கேற்ற ஆசிரியர்களை இணைத்து வாட்ஸ்அப் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாரமும் அகக் கவனிப்பு, மாணவர் உரையாடல்கள், 30 நாள் சிறுசெயல்கள், படைப்பாற்றல் வெளிப்பாடுகள், அமைதிச் சுவர், அமைதித் தோட்டம், எதிர்கொண்ட சிக்கல்கள், கண்டறிந்த புதிய அணுகுமுறைகள் ஆகியவற்றைச் சுருக்கமான அறிக்கைகளாகப் பகிரலாம். GEN Z TO GEN P இயக்கத்தை 2026 அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி, 2027 ஜனவரி 30, தியாகிகள் தினம் வரை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
13. நன்றியுரை
தங்களுக்குள் தங்களை ஆத்மார்த்தமாகக் கவனிக்கத் தொடங்கி, ஒவ்வொரு உரையாடலிலும் முழுமையாகப் பங்கேற்ற ஆசிரியப் பெருமக்களின் திறந்த மனமும் நேர்மையான பகிர்வும் எங்களுக்கு மிகுந்த நிறைவை அளித்தன.
உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஏழுமலை அவர்கள் நிகழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனித்து ஒருங்கிணைத்தார்.
அலுவலகப் பணியாளர் திருமதி லோகேஸ்வரி அவர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். மூன்று அல்லது நான்கு ஆசிரியர்கள் உணவு வழங்கி அன்புடன் கவனித்தனர்.
தலைமை ஆசிரியை திருமதி ஆரோக்கியமேரி அவர்கள் மதுரைக் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோதிலும், நிகழ்வு குறையின்றி நடைபெற தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
பள்ளித் தாளாளர் திரு. எஸ். முனீஸ்வரன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
திரு. தனஞ்செயன் அவர்கள் வாகன ஓட்டுநராகப் பாதுகாப்பான போக்குவரத்துக்கு உதவினார்.
நிகழ்வை இணைந்து நடத்திய திருமதி இந்துமதி அவர்கள் GEN Z TO GEN P இயக்கத்தின் நடைமுறை வழிகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்தார்.
இது முடிவல்ல — அமைதிக்கான தொடர் பயணம்
பயிலரங்கு நிறைவடைந்த பின்னர், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் இல்லத்திற்குத் திரும்பினோம். ஆனால் இது ஒருநாள் நிகழ்வுடன் முடியும் பயணம் அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய அமைதிக்கான தொடர் பயணம். வகுப்பறைகள் அதிகாரமும் பயமும் நிறைந்த இடங்களாக இல்லாமல், சமத்துவம், படைப்பாற்றல், அகக் கவனிப்பு மற்றும் ஆனந்தம் நிறைந்த கற்றல் இடங்களாக மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பயிலரங்கு அந்தப் பெரிய மாற்றத்திற்கான சிறிய தொடக்கமாக அமைந்தது.
நன்றி. வணக்கம்.
அறிக்கையைத் தயாரித்தவர்
சூ. குழந்தைசாமி
செயலர்
காந்தி அமைதி நிறுவனம், சென்னை

Leave A Comment