அமைதித் தலைமுறையை உருவாக்கும் இளைஞர் இயக்கம்
சென்னை காந்தி அமைதி நிறுவனம் கடந்த 52 ஆண்டுகளாக, காந்தியச் சிந்தனைகளையும் அமைதிக்கான வாழ்வியல் நெறிகளையும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அமைதி என்பது படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடம் மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கையில் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் வழியாகப் பயிற்சி செய்யப்பட வேண்டிய வாழ்வியல் என்பதே நிறுவனத்தின் அடிப்படையான நம்பிக்கையாகும்.
இதன் அடிப்படையில், குழந்தைகளும் இளைஞர்களும் தங்களால் மேற்கொள்ளக்கூடிய சிறு சிறு செயல்களை ஆக்கப்பூர்வமான திட்டங்களாக வடிவமைத்து, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. ஆர்வமுள்ள மாணவர்களை இத்திட்டங்களில் இணைப்பதுடன், அவர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்துவதற்கான ஆசிரியர் பயிற்சிகளையும் தொடர்ந்து அளித்து வருகிறது.
சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், பிற மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் அமைதிக்கான இளைஞர் இயக்கங்களைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை நிறுவனம் வழங்கியுள்ளது. பள்ளிகளும் கல்லூரிகளும் தாங்களாகவே இத்திட்டங்களைத் தொடர்ந்து நடத்தக்கூடிய வகையில் பயிற்சி முறைகள், செயல்பாட்டுக் கையேடுகள் மற்றும் மாணவர் செயல்திட்டங்களும் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய குழந்தைகள் ‘ஜெனரேஷன் ஆல்ஃபா’ என்றும், இளைஞர்கள் ‘ஜெனரேஷன் Z’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இவ்விரு தலைமுறையினரையும் அமைதியைச் சிந்தித்து, பேசி, செயல்படுத்தும் புதிய தலைமுறையாக உருவாக்கும் நோக்கில், சென்னை காந்தி அமைதி நிறுவனம்
“GEN Z TO GEN P — Generation Z to Generation Peace”
என்ற புதிய இயக்கத்தைத் தொடங்குகிறது.
‘ஜென் P’ என்பது வயதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தலைமுறை அல்ல. அது அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை. எந்த வயதினராக இருந்தாலும் அமைதியான சிந்தனை, அன்பான சொல், பொறுப்பான செயல் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இந்த ‘அமைதித் தலைமுறையைச்’ சேர்ந்தவர்கள்.
இளைஞர்கள் அளப்பரிய ஆற்றல் படைத்தவர்கள். அவர்களின் ஆற்றல் எந்தத் திசையில் செலுத்தப்படுகிறதோ, அந்தத் திசையில்தான் அவர்களின் வாழ்க்கையும் சமூகத்தின் எதிர்காலமும் அமைகின்றன.
எதிர்மறையான சிந்தனைகள், வெறுப்புணர்வு, வன்முறை, பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தவறான ஊடகத் தாக்கங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில், இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் தவறான வழிகளில் செலவிடும் ஆபத்து உள்ளது.
அதே நேரத்தில், நேர்மறையான எண்ணம், இனிய சொல், அன்பான உறவு, தன்னார்வச் சேவை மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் பயனைச் சிறுவயதிலேயே அவர்களுக்குப் புரியவைத்தால், அவர்களின் ஆற்றல் பாதுகாக்கப்பட்டு நன்மைக்கான செயல்வடிவம் பெறும். அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் குடும்பம், பள்ளி மற்றும் சமூகத்திலும் அமைதியை உருவாக்கும்.
இந்த இயக்கத்தில் மாணவர்களுக்கு இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் தங்களுக்குள் உருவாகும் கோபம், பொறாமை, பயம், வெறுப்பு போன்ற உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றை நிதானமாகக் கையாளக் கற்றுக்கொள்வார்கள்.
பிறரைப் புண்படுத்தாத சொற்களைப் பயன்படுத்துதல், கவனமாகக் கேட்டல், கருத்து வேறுபாடுகளை மதித்தல், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், தவறு செய்தால் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டல் போன்ற அமைதியான வாழ்வியல் பழக்கங்களைப் பயிற்சி செய்வார்கள்.
உலக அமைதி என்பது பெரிய மாநாடுகள் அல்லது அரசுகளின் நடவடிக்கைகளால் மட்டுமே உருவாவது அல்ல. ஒவ்வொரு மனிதரும் அன்றாடம் மேற்கொள்ளும் சிறிய நற்செயல்களும் பேரமைதிக்கான அடித்தளமாக அமைகின்றன.
தன்னுடைய பொருட்களை ஒழுங்காக வைத்துக்கொள்வது, வீட்டுப் பணிகளில் உதவுவது, வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருப்பது, தனிமையில் இருக்கும் மாணவருடன் நட்புகொள்வது, உணவை வீணாக்காமல் இருப்பது, தண்ணீரையும் மின்சாரத்தையும் சேமிப்பது, மரம் நடுவது, குப்பையைக் கண்டால் அகற்றுவது போன்ற ஒவ்வொரு சிறு செயலும் அமைதிக்கான செயலாகும்.
இதையே இவ்வியக்கம்:
“MICRO ACTIONS FOR MACRO PEACE — பேரமைதிக்கான சிறு செயல்கள்”
என்று குறிப்பிடுகிறது.
இயக்கத்தில் இணையும் மாணவர்கள் முதற்கட்டமாக 30 நாள் அமைதிச் செயல்திட்டத்தை மேற்கொள்வார்கள். தங்கள் சொந்த வாழ்க்கை, வீடு, வகுப்பறை, பள்ளி வளாகம், தெரு மற்றும் கிராமத்தில் மேற்கொண்ட சிறு மாற்றங்களையும் நற்செயல்களையும் ஒரு செயல்பாட்டுக் குறிப்பேட்டில் பதிவு செய்வார்கள்.
அது செயல்களின் பட்டியலாக மட்டும் இருக்காது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் வகையில் சில கேள்விகளுக்குப் பதில் தேடுவார்கள்:
மேலும், தாங்கள் செல்லும் இடங்களில் காணப்படும் குறைபாடுகளைக் குறைகூறுவதோடு நிற்காமல், அவற்றைச் சரிசெய்யத் தாங்களாகவே முன்வந்து செயல்படுவார்கள்.
இதன்மூலம் மாணவர்களின் அகம் சமூகத்துடன் இணைக்கப்படுகிறது. தனிப்பட்ட மாற்றமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று துணையாகின்றன.
அடிப்படைப் பயிற்சிக்குப் பின்னர், மாணவர்கள் அடுத்தநிலைச் செயல்திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
உணவை வீணாக்காத பள்ளியை உருவாக்குதல், வீடுகளிலும் பள்ளிகளிலும் மின்சாரத்தையும் தண்ணீரையும் சேமித்தல், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், இயற்கையைப் பேணுதல், மாற்றுத்திறனாளிகளிடம் அன்பும் சமத்துவமும் காட்டுதல் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
போட்டி, வெற்றி, தோல்வி ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், அனைவரையும் இணைத்து மகிழ்விக்கும் விளையாட்டுகளையும் உருவாக்குவார்கள். இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களிடையே ஒத்துழைப்பு, பரிவு, சமத்துவம், தலைமைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும்.
இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, தனிமை உணர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து படிப்படியாக வெளிவந்து, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள்.
இந்த இயக்கத்தின் மிகப்பெரிய பயன் மாணவர்கள் பெறும் சுய அறிவாகும்.
“நான் யார்?”, “என்னுடைய சிந்தனைகள் எவ்வாறு செயல்படுகின்றன?”, “உடல், அறிவு, உணர்வு மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு என்ன?”, “எனக்கும் பிறருக்கும் உள்ள உறவு என்ன?”, “எனக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?”, “என்னுடைய பொறுப்புகள் என்ன?” என்பவற்றை மாணவர்கள் தாங்களாகவே அறிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
எனவே, இது சில செயல்களை மட்டும் மேற்கொள்ளச் செய்யும் திட்டமல்ல; தன்னையும் சமூகத்தையும் உணர்ந்த ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் வாழ்வியல் இயக்கமாகும்.
ஆசிரியர்களின் உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இந்த இயக்கம் முழுமையான வெற்றியை அடைய முடியாது. எனவே, பள்ளி ஆசிரியர்களின் மனமார்ந்த பங்களிப்பை சென்னை காந்தி அமைதி நிறுவனம் நாடுகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் 10 முதல் 20 மாணவர்களைக் கொண்ட ஓர் அமைதிச் செயல்குழுவை உருவாக்கி, ஆறு மாதங்கள் அவர்களுடன் இணைந்து பயணிப்பார்.
மாணவர்களுக்குக் கட்டளையிடுபவராக அல்லாமல், அவர்களின் சிந்தனையைத் தூண்டி, தனித்திறமைகளை வெளிப்படுத்த உதவி செய்து, செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வழிகாட்டியாக ஆசிரியர் செயல்படுவார்.
அந்தந்தப் பள்ளிகளில் அமைக்கப்படும் மாணவர் குழுக்கள், அமைதிக்கான சிந்தனை, சொல் மற்றும் செயலை அடிப்படையாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளும்.
அமைதிச் சிந்தனைகள், சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நல்லிணக்கச் செய்திகளை மாணவர்கள் ஓவியம், கவிதை, பாடல், கதை, முழக்கம், உரையாடல் மற்றும் நாடகம் போன்ற படைப்புகளாக வடிவமைப்பார்கள்.
மாணவர்களின் இத்தகைய படைப்புகள், பள்ளியில் அதற்கென ஒதுக்கப்படும் ‘அமைதிச் சுவரில்’ அனைவரும் காணும் வகையில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும்.
இவை ஆசிரியர்களால் எழுதிக் கொடுக்கப்படும் வழக்கமான பாடங்களாக இல்லாமல், மாணவர்களே சிந்தித்து உருவாக்கும் வாழ்வியல் பாடங்களாக அமையும். ஒரு மாணவரின் படைப்பு மற்றொரு மாணவரின் மனத்தில் கேள்வியையோ மாற்றத்தையோ நற்செயலுக்கான தூண்டுதலையோ ஏற்படுத்தும்.
இவ்வாறு, மாணவர்களால் உருவாக்கப்படும் அமைதிச் சுவர், பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் உயிரோட்டமுள்ள அமைதிப் பாடமாகவும் தொடர்ச்சியான சிந்தனைத் தளமாகவும் மாறும்.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் ‘அமைதித் தோட்டம்’ அமைக்கப்படும்.
மாணவர்கள் மனச்சோர்வு, கோபம், குழப்பம் அல்லது மன அழுத்தத்தை உணரும்போது, அத்தோட்டத்திற்குச் சென்று மண்ணுடன் உறவாடலாம். விதைகளை விதைக்கலாம்; செடிகளை நடலாம்; அவற்றுக்கு நீரூற்றிப் பராமரிக்கலாம்.
மண்ணுடனும் தாவரங்களுடனும் ஏற்படும் இந்த உறவு மாணவர்களுக்கு மனஅமைதி, பொறுமை, அன்பு மற்றும் பொறுப்புணர்வை அளிக்கும். இயற்கையைப் பாதுகாப்பது உலக அமைதியைப் பாதுகாப்பதன் ஒரு பகுதி என்ற உண்மையையும் அவர்கள் அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்வார்கள்.
அமைதிச் செயல்குழுக்கள் வெற்றி–தோல்வி மற்றும் கடுமையான போட்டியை மட்டுமே மையப்படுத்தாத ‘இணைக்கும் விளையாட்டுகளை’ உருவாக்கும்.
அனைத்து மாணவர்களும் நட்புடன் இணைந்து பங்கேற்று மகிழும் புதிய விளையாட்டுப் பண்பாடு இதன்மூலம் பள்ளிகளில் வளர்க்கப்படும்.
ஒருவர் தோற்றால்தான் மற்றவர் வெல்ல முடியும் என்ற எண்ணத்திற்கு மாற்றாக, அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் அனைவருக்கும் வெற்றி என்ற மனப்பான்மை உருவாக்கப்படும். இந்த அனுபவம் மாணவர்களின் வகுப்பறை உறவுகளிலும் சமூக வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்–மாணவர் குழுக்கள் பள்ளியில் ஏற்படும் சிறு சிக்கல்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை வன்முறையின்றி அணுக முயல்வார்கள்.
குற்றஞ்சாட்டுதல் அல்லது தண்டனைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், கவனமாகக் கேட்டல், நேரடி உரையாடல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், மன்னிப்புக் கேட்டல் மற்றும் நட்புறவை மீண்டும் உருவாக்குதல் ஆகியவற்றின் வழியாகச் சிக்கல்களைத் தீர்க்கப் பழகுவார்கள்.
இதனால் மாணவர்களுக்கிடையிலும் ஆசிரியர்–மாணவர் உறவிலும் அன்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை நிறைந்த சூழல் உருவாகும்.
அடுத்த கட்டமாக, மாணவர்கள் தங்கள் கிராமங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைதிக்கான சைக்கிள் பயணம் அல்லது நடைப்பயணம் மேற்கொள்வார்கள்.
அமைதிக்கான அடிப்படை விதிகள், நல்லிணக்கச் செய்திகள் மற்றும் எளிய வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்குவார்கள்.
இதன்மூலம் அமைதிச் செய்தி பள்ளியின் சுவர்களுக்குள் மட்டும் நின்றுவிடாமல், வீடுகளுக்கும் தெருக்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றடையும். மாணவர்கள் அமைதியைப் படிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அமைதியை வாழ்ந்து காட்டுபவர்களாகவும் பிறருக்கு எடுத்துச் செல்பவர்களாகவும் வளர்வார்கள்.
“GEN Z TO GEN P” இயக்கம், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2026 அக்டோபர் 2 அன்று தொடங்கப்படுகிறது.
முதற்கட்டமாகச் சுமார் பத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 1,000 முதல் 1,500 மாணவர்களை இதில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவு செய்துகொள்ளும் மாணவர்கள் 15 நாள், 30 நாள் மற்றும் 45 நாள் இடைவெளிகளில் தங்களுடைய செயல்பாடுகளைப் பதிவு செய்து பகிர்ந்துகொள்வார்கள். ஆசிரியர்கள் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, செயல்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள்.
முதற்கட்டச் செயல்பாடுகளை நிறைவு செய்த மாணவர்கள், 2027 ஜனவரி 30—மகாத்மா காந்தியின் நினைவு நாளான தியாகிகள் தினத்தன்று, சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து ஆறு மாதப் பயணத்தை நிறைவு செய்யும் மாணவர்கள், அடுத்த ஆண்டில் மேலும் 10 முதல் 20 மாணவர்களைத் தங்களுடன் இணைத்து வழிநடத்தும் அமைதித் தூதுவர்களாக வளர்த்தெடுக்கப்படுவார்கள்.
இதன்மூலம் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பள்ளியின் பிற ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்கான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
ஒரு ஆசிரியர் — ஓர் அமைதிச் செயல்குழு!
ஒரு செயல்குழு — ஓர் அமைதியான பள்ளி!
ஓர் அமைதியான பள்ளி — ஓர் அமைதியான சமூகம்!
GANDHI PEACE FOUNDATION, MADRAS
காந்தி அமைதி நிறுவனம், சென்னை
332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018, தமிழ்நாடு.
தொலைபேசி: 99628 60350
மின்னஞ்சல்: gpfchennai@gmail.com
இணையதளம்: www.gpfmadras.org
For the past 52 years, Gandhi Peace Foundation, Madras, has been continuously engaged in taking Gandhian thought and the principles of peaceful living to children and young people.
The Foundation firmly believes that peace is not merely a subject to be studied. It is a way of life that must be practised every day through our thoughts, words and actions.
Based on this conviction, the Foundation has been designing small, constructive and practical projects that children and young people can undertake in their daily lives. These projects have been introduced in schools and colleges, involving interested students in meaningful activities. The Foundation has also been organising training programmes for teachers to equip them to motivate and guide the participating students.
The Foundation has helped initiate youth peace movements not only in Chennai and other parts of Tamil Nadu, but also in other Indian states and a few countries abroad. Training methods, activity manuals and student project plans have been developed so that schools and colleges can implement these programmes independently.
Today’s children are described as “Generation Alpha,” while today’s youth are known as “Generation Z.” To enable both these generations to think, speak and act for peace, Gandhi Peace Foundation, Madras, is launching a new movement titled:
“GEN Z TO GEN P — Generation Z to Generation Peace.”
“Gen P” is not a generation defined by age. It is a new generation defined by peace. Anyone, irrespective of age, who practises peaceful thinking, compassionate speech and responsible action can become a member of this Generation of Peace.
Young people possess immeasurable energy and potential. The direction in which their energy is channelled will determine not only their own lives but also the future of society.
In the present age, negative thinking, hatred, violence, terrorism, extremism and harmful media influences are on the rise. Consequently, young people face the danger of spending their valuable time and energy on destructive thoughts and activities.
However, if children are introduced at an early age to the value of positive thinking, kind speech, caring relationships, voluntary service and constructive action, their energy can be protected and channelled towards the common good. This will enrich their personal lives and help create peace within their families, schools and communities.
The movement introduces students to two principal approaches.
Students will learn to recognise feelings such as anger, jealousy, fear and hatred arising within them and to respond to these feelings calmly and wisely.
They will practise peaceful habits such as using words that do not hurt others, listening attentively, respecting differences of opinion, understanding the feelings of others, acknowledging their mistakes and seeking forgiveness.
World peace cannot be achieved through international conferences or governmental action alone. Every small act of goodness performed in daily life contributes to the foundation of global peace.
Keeping one’s belongings in order, helping with household work, maintaining a clean classroom, befriending a lonely student, avoiding food waste, conserving water and electricity, planting a tree and removing litter are all small but meaningful actions for peace.
The movement describes this approach as:
“MICRO ACTIONS FOR MACRO PEACE.”
During the first stage, participating students will undertake a 30-day Peace Action Programme. They will record the small changes and constructive actions they undertake in their personal lives, homes, classrooms, school campuses, streets and villages in a Peace Action Journal.
The journal will not be merely a list of completed activities. It will encourage students to reflect on questions such as:
Whenever students notice a problem or deficiency, they will be encouraged not merely to complain about it but to come forward voluntarily and do what they can to address it.
Through this process, their inner development becomes connected with the world around them. Personal transformation and social responsibility begin to support each other.
After completing the basic programme, students will participate in advanced community action projects.
These may include creating a school that does not waste food, conserving water and electricity at home and school, protecting public health and cleanliness, caring for Nature and promoting love, dignity and inclusion for persons with disabilities.
Students will also create games that bring everyone together, instead of focusing only on competition, victory and defeat. These activities will nurture cooperation, compassion, equality, leadership and social responsibility.
Through such constructive involvement, students can gradually overcome feelings of emptiness, inferiority, superiority, loneliness and emotional stress. They will begin to use their time and energy in meaningful activities.
One of the greatest gifts students will receive from this movement is a clearer understanding of themselves.
They will begin to explore important questions:
“Who am I?”
“How do my thoughts work?”
“What is the relationship between my body, intellect, emotions and inner being?”
“What is my relationship with other people?”
“What is my relationship with society?”
“What are my responsibilities?”
Therefore, this is not merely a programme encouraging students to perform a few activities. It is a movement that seeks to develop self-aware, socially responsible and whole human beings.
This movement cannot fully succeed without the support and guidance of teachers. Gandhi Peace Foundation, Madras, therefore seeks the wholehearted participation of schoolteachers.
Each teacher will form a Peace Action Group consisting of 10 to 20 students and accompany them on a six-month journey.
The teacher will not merely give instructions. The teacher will serve as a mentor who stimulates the students’ thinking, helps them express their individual talents and coordinates their activities.
Peace Action Groups in each school will undertake constructive activities based on peaceful thought, speech and action.
Students will express ideas about peace, methods of resolving conflicts and messages of harmony through drawings, poems, songs, stories, slogans, dialogues and short plays.
These creations will be displayed prominently on a specially designated “Peace Wall” in each school.
They will not be conventional lessons written for students by adults. They will become living lessons in peace, imagined and created by the students themselves. One student’s creative work may inspire a question, a change of attitude or a constructive action in another student.
In this way, the Peace Wall will become both a living classroom for the entire school and a continuously evolving space for reflection.
Each school will establish a “Peace Garden” to be created and maintained by the students.
Whenever students experience tiredness, anger, confusion or emotional stress, they may spend time in the garden and reconnect with the soil. They may sow seeds, plant saplings, water the plants and care for them.
This relationship with the earth and plants will help students develop calmness, patience, love and responsibility. Through direct experience, they will understand that protecting Nature is an essential part of protecting world peace.
The Peace Action Groups will create “Games That Unite,” which do not revolve entirely around competition, winning and losing.
These games will allow all students to participate, cooperate and enjoy themselves together. Instead of believing that one person must lose for another to win, students will learn that everyone succeeds when everyone works together.
This experience will positively influence their classroom relationships and their wider social behaviour.
Trained teacher–student groups will attempt to address misunderstandings, disagreements and minor conflicts arising in schools without violence.
Instead of relying only on accusation or punishment, students will learn to resolve conflicts through attentive listening, direct dialogue, understanding one another’s feelings, acknowledging mistakes, seeking forgiveness and rebuilding friendships.
This will help create an atmosphere of affection, trust and mutual respect among students and between teachers and students.
In the next stage, students will organise peace cycle rallies or peace walks in their villages and neighbourhoods.
They will distribute pamphlets containing basic principles of peace, messages of harmony and simple practices for peaceful living.
In this way, the message of peace will not remain within the school walls. It will reach homes, streets, villages and surrounding communities. Students will grow from being learners of peace into practitioners and messengers of peace.
The “GEN Z TO GEN P” Movement will be launched on 2 October 2026, the birth anniversary of Mahatma Gandhi.
Preparations are being made to enrol approximately 1,000 to 1,500 students from around ten schools during the first phase.
Participating students will record and share their progress at intervals of 15, 30 and 45 days. Their teachers will continue to encourage, guide and coordinate their activities.
Students who complete the first phase will be honoured with certificates and prizes on 30 January 2027—Martyrs’ Day and the death anniversary of Mahatma Gandhi.
Students who complete the six-month journey will be developed as Peace Ambassadors. During the following year, each Peace Ambassador will bring together and guide another group of 10 to 20 students.
Through this movement, school managements, teachers, students, parents, non-teaching staff and members of the surrounding community will have an opportunity to work together for peace.
One Teacher — One Peace Action Group!
One Peace Action Group — One Peaceful School!
One Peaceful School — One Peaceful Society!
GANDHI PEACE FOUNDATION, MADRAS
காந்தி அமைதி நிறுவனம், சென்னை
332, Ambujammal Street, Alwarpet,
Chennai – 600 018, Tamil Nadu, India.
Phone: 99628 60350
Email: gpfchennai@gmail.com
Website: www.gpfmadras.org

Leave A Comment