மனிதனுடைய பெரிய சிக்கல் எது? எதிர்பார்ப்புகள் என்ற முடிச்சுகளை தனக்குத் தானே போட்டு, அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பதுதான்! எந்த வயதினரும் எந்த மனிதரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போதே, இது ஒரு பத்திரிகையிலோ சமூக ஊடகங்களிலோ வெளியாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதின் மூலையில் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. அது நடக்காவிட்டால் தேவையில்லாமல் துயரம் என்னை ஆட்கொள்கிறது.
பலன் கருதாமல் பணி செய்ய வேண்டும் என்று சொல்வது எளிதாய் இருக்கிறது. ஆனால் அப்படி ஆசைப்படுவதே ஒரு பலன் கருதும் துயரமாய் முடிந்து விடுகிறது. விரும்பும் பலன் கிட்டிவிட்டால் இன்பம் பெருக்கெடுக்கிறது. தொடர்ந்து அந்த இன்பம் கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு மீண்டும் துயரமாய் மாறுகிறது.
நான் இளைஞனாய் இருந்தபோது இதே எதிர்பார்ப்பு நோயினால் அவதிப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு ஒரு எளிய மனிதர் ஒரு எளிய மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அதுதான் இந்த “நடந்தா ரைட், நடக்காட்டி அதைவிட ரைட்” மந்திரம்.
அந்த வார்த்தைகளை அவர் தினமும் பல முறைகள் சொல்லுவதுண்டு. அவரைச் சுற்றி இருப்பவர்கள் ‘கொல்’ என்று சிரிப்பார்கள். அந்த ஒரு நொடியில் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்பார்ப்பு என்ற அடைப்பை உடைத்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஓடச் செய்வதில் இணைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாவதைப் பார்க்கலாம்.
‘ஒரு குறிப்பிட்ட வேலை சம்பளம் வசதி கௌரவம் புகழ் என்ற பாதையில் பயணித்தால் எதிர்பார்ப்புகள் என்ற தடைகளுக்குள் சிக்கித் திணற வேண்டியிருக்கும்’ என்ற காரணத்தால் அந்தப் பெரியவருடன் அவர் மறையும் வரை 21 வருடங்கள் வாழ்ந்து, காந்திய அறநெறி பரப்பும் பணியில் என் வாழ்வின் முக்கியப் பகுதியை ஆனந்தமாகக் கழித்தேன்.
“எதிர்பார்ப்பு இயல்பானதுதான், அதிலிருந்து தப்பிக்க முயல்வதே துயரம், அதைவிட எதிர்பார்ப்பு என்பது எப்படி எண்ணங்களின் விளைவாக மூளையில் பதிக்கப்படுகிறது என்பதை கூர்ந்து முழுமையாகப் பார்த்தாலே மூளை அந்தப் பதிக்கும் பணியிலிருந்து விடுபட்டு, புத்தம்புதிய மலரைப் போன்று ஆகிவிடும், அதுவே உண்மையான தியானம் ஆகும்” என்று விளக்கிய ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியையும், நிஷ்காம்ய கர்மத்தின் உச்சத்தில் நின்ற வினோபா அடிகளையும் நான் நேரில் தரிசனம் செய்ய உதவினார் அந்தப் பெரியவர்!
கோடி கோடியாய் நான் நன்றி செலுத்த வேண்டிய அந்த மாமனிதர் காந்திய மாமணி டி.டி. திருமலை அவர்கள்.
1976 – இல் நடந்த ஒரு நிகழ்வு. சென்னை காந்தி அமைதி நிறுவனத்தில் காந்திய சிந்தனையில் இலக்கியப் பேருரை ஆற்ற திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்களை அழைத்திருந்தோம். மாலை 6:30 மணிக்கு கூட்டம். கி.வா.ஜவோ வந்துவிட்டார். இரண்டே பேர்தான் வந்திருந்தனர். எனக்குப் படபடப்பு கூடிக்கொண்டே போனது. அதைப் பார்த்த திருமலை, “கூட்டம் வந்தா ரைட், வராட்டி அதைவிட ரைட்” என்றார்.
“அது என்ன அப்படிச் சொல்றீங்க?” என்று கோபத்துடன் கேட்டேன். “ஆமாம், நிறைய பேர் வந்தால் நல்லதுதான், யாருமே வரலைன்னா நாம் நான்கு பேரும் கி.வா.ஜவுடன் அருகில் அமர்ந்து ஆத்மார்த்தமாக ஆற அமர பல நுணுக்கமான விஷயங்களைக் கேட்டுக் கற்கலாமே” என்றார்.
அப்போதுதான் எனக்குப் படபடப்பு நீங்கி நிதானத்துக்கு வந்தேன். கூட்டம் முடியும்போது, கூட்டம் நிரம்பி வழிந்தது என்பது வேறு.
திருமலை போன்ற சாதாரண மனிதர்கள் பலர் காந்தியப் பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தங்களுடைய சொத்துக்களை இழந்து வாழ்க்கையைத் தவமாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றாகத்தான் இருந்தது. தேச விடுதலை!
ஆனால் மகாத்மா காந்தி அந்த எதிர்பார்ப்பு என்ற சிக்கலைத் தீர்த்துவைக்க, “தேச விடுதலை கிட்டினால் ரைட், கிட்டாவிட்டால் அதைவிட ரைட்” என்ற மந்திரத்தைக் கற்றுக் கொடுத்ததாக திருமலை கூறுவார். ‘அது எப்படி, புரியவில்லையே?’ என்று கேட்டேன்.
“தேசம் விடுதலை அடைந்து விட்டால் நல்லதுதான். இல்லாவிட்டால், அதைவிட, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆன்ம விடுதலையை அடைவதற்கு முயன்றுகொண்டே இருக்கலாமே, அகத்தில் மலருவதற்கு ஆங்கிலேயர் தடை போட முடியாதே” என்று மகாத்மா காந்தி சுட்டிக்காட்டுவதாக திருமலை விளக்கம் கொடுத்தார்.
வளமான பெற்றோருக்கு 1921 அக்டோபர் 26 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார் திருமலை. பள்ளிப் பருவத்தில் இருந்தே இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுடன் இளைஞர் எழுச்சிக் குழுக்களை அமைத்து வந்தார் அவர். தனது 16-வது வயதிலேயே கதர்க் குல்லாய் தரித்து, திரு ஜவஹர்லால் நேருவின் சுதந்திர எழுச்சிமிகும் சொற்பொழிவைக் கேட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்றதால் நான்கணா அபராதம் இவருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் விதிக்கப்பட்டது. அதுவே அப்பகுதியில் சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சிமிக்க தொடக்கமாயிற்று.
மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் போராட்ட முறைகளையும் பிரச்சாரம் செய்தமைக்காக இருபத்தைந்து முறை கைது செய்யப்படவும், பலமுறை தலைமறைவாகச் செல்லவும் நேர்ந்தது இவர். எனவே கல்லூரிப் படிப்பை முடிக்க இயலாமல் போனது.
ஆச்சார்ய வினோபா அடிகளின் பூமிதான யாத்திரையில் ஐந்து வருடம் பங்கு கொண்டு, சுமார் 12000 ஏக்கர் நிலத்தை இவர் தானமாகப் பெற்றுத் தந்தார்.
காந்திஜியின் வாழ்வும் வாக்கும் பெருமளவு இளைஞர்களுக்குக் கிட்டும் வண்ணம் அஞ்சல் வழியாகவும் மாதப் பத்திரிகைகளாகவும், சத்திய சோதனை நூலில் தேர்வுத் திட்டமாகவும் நடத்தி, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு காந்திய வாழ்வியலில் எழுச்சி ஊட்டினார்.
அகில இந்திய காந்தி அமைதி நிறுவனத்தின் ஊழியராக மதுரையில் சேர்ந்த இவர், பிறகு 1973 முதல் (11.8.1993) மறைவு வரை சென்னையில் காந்தி அமைதி நிறுவனம் நடத்திய காந்திய அறநெறிகள் மூலம் அமைதிக் கல்விப் பயிலரங்குகளிலும், காந்திய அறநெறிகள்-பயில்-உறைவிட முகாம்களிலும், பாமரருக்கும் கலை இலக்கியம் இசை நிகழ்வுகளிலும் உறுதுணையாய் நின்று உரமூட்டியவர்.
காந்தியத்தை அவருடைய வாழ்வின் வேதமெனக் கொண்டு பணிவின் எல்லையில் நின்று ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உள்ளத்தில் அவரவர் சுயத்தை உணர்த்தியவர்.
விளம்பரமோ ஆதாயமோ தேடி அலையாமல், ஆனால் அதற்காக அலையும் கூட்டத்தை பறவை போன்று வேடிக்கை பார்த்து, ஒவ்வொரு வினாடியையும் தன்னடக்கம் தன்னிறைவுடன் முழுமையாக ஆனந்தத்துடன் வாழ்ந்தவர். இதற்குத் தேவையான உரத்தை காந்திஜி, வினோபா பாவே, ஜே. கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி, ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் ஆகியோரிடமிருந்து பெற்றதாக இவர் கூறுவார். வட்டத் தொட்டியின் நெடுநாளைய உறுப்பினராய் இருந்த இவர், ‘உலக இதய ஒலி’ என்ற மாத இலக்கிய இதழை விடாது நடத்தி வந்தார்.
இவ்வளவு வறுமையிலும் ஒரு ஆதாரமும் இல்லாமல் இவர் எப்படி இவ்வளவு வேலைகளைச் செய்து வருகிறார் என்று அப்போது குழம்பியவர்கள் பலர். ஆனால் காந்திய சிந்தனை பரப்பும் பணிகளில் இவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே இவ்வளவுக்கும் ஆதாரமாயிருந்தது என்பதை அவர் வரலாறைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வர்!
இன்று டி.டி. திருமலை (26.10.2024) அவர்களுடைய பிறந்தநாள். “நடந்தா ரைட், நடக்காட்டி அதைவிட ரைட்” என்று சொல்லி நம் ஒவ்வொரு செயலிலும் முழுமையான பலன்களை நோக்கிப் பரிணமிக்கக் கற்றுக் கொள்வோம். எதிர்பார்ப்பின் வேலிகளை உடைத்து, மன அழுத்தம் நீங்கி, ஆனந்த வானில் சிறகடித்துப் பறப்போம்.
சூ.குழந்தைசாமி
செயலர்
காந்தி அமைதி நிறுவனம்
சென்னை-18.
Share This Post :
2 Replies to “நடந்தா ரைட், நடக்காட்டி அதைவிட ரைட் ! ”
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%2F">logged in</a> to post a comment.
2 Replies to “நடந்தா ரைட், நடக்காட்டி அதைவிட ரைட் ! ”
Excellent article
Very interesting to know such facts about Thiru.Thirumalai sir…”If it happens good or else very good Thank you for sharing sir