(சிறுகதை)
மூர்த்தி குளித்து புத்தாடை உடுத்தி கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். மூர்த்தியின் மனைவி மாயா அவன் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த இரண்டரை இட்லிகளை சொச்சம் இருந்த தேங்காய் சட்னியைத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இட்லிதான் அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய பலகாரம். அந்த அளவுக்கு இரண்டு பேருக்கும் சுகர் இருக்கு.
“ஏங்க, நீங்க சாமி கும்பிட்டுட்டு அப்படியே ரங்கன் மாமா மாமியைப் பார்த்துட்டு வாங்க. எனக்கும் அவரைப் பார்க்கணும் போல இருக்கு. ரெண்டு வருசம் ஆயிடுச்சு அவரையும் மாமியையும் பார்த்து. அந்த மாதிரி மனுசங்களை நாம எத்தனை வருசம் தவம் இருந்தாலும் பார்க்க முடியாது. எனக்கு இருக்கிற முட்டி வலியில ரெண்டு மாடி எங்க ஏறி இறங்கிப் போறது?” பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினாள் மாயா.
“ஆமாம் மாயா, முக்கியமா அவங்களைப் பார்க்கறதுக்குத்தான் போறேன்.”
“ஒரு வாய் காபி குடிச்சிட்டுப் போறீங்களா?”
“வேண்டாம், அங்கதான் மாமி எப்படியும் குடுப்பாங்களே!”
சைக்கிளில் ஏறிக் கொண்டே சொன்னான் மூர்த்தி. ஆற அமர சாலையை ரசித்துக்கொண்டு இன்று ஓட்ட முடியாது. ஒரே புகைமயம், வெடிகளின் ஒளி மயம், ஒலிமயம். மூச்சைத் தம் பிடித்துக் கொண்டு புகைக்குள் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டே சைக்கிளை ஓட்டினான்.
மாரியம்மன் குளத்தருகே இருந்த பழக்கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டான். மாமா மாமியைப் பார்த்துட்டு சாமியைப் பார்க்க வருவோமா அல்லது சாமியைப் பார்த்துட்டு மாமா மாமியைப் பார்க்கப் போவோமா என்ற குழப்பத்தில் கோயிலுக்குள் நுழைந்தான். திரை போட்டிருந்தது. எப்படியும் அரை மணி நேரம் ஆகும்.
மீண்டும் சைக்கிளில் ஏறி குமரன் தெருவில் இருந்த சண்முகா பிளாட்டுக்கு விரைந்தான். மாமாவும் மாமியும் வயதானவர்கள். எப்படியும் அவருக்கு எழுபத்தைந்தும் மாமிக்கு எழுபதும் இருக்கலாம். தனியாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு மகன்களும் சென்னையில் வெவ்வேறு இடங்களில் குடும்பமாக வசிக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து இவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்து விடுகிறார்கள். யாருக்கும் தொந்தரவு தராமல் மாமாவும் மாமியும் தனியாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
மாமாவும் மாமியும் அருமையான ஜோடி. ஒரு நேரம் ஓய்ந்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்து கொள்வார்கள். அவர்களுக்கு சொந்தமான கீழ் பிளாட்டில் குடி இருக்கிறார்கள்.
ஐந்து வருடம் முன்னால் மூர்த்தியும் மாயாவும் அங்கு முதல் மாடி வீட்டுக்கு குடி வந்தார்கள். இவர்களுக்கு மாமா மாமியை ரொம்ப ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அவர்களுக்கும் இவர்களை ஏனோ ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
மூர்த்தியும் மாயாவும் அவர்களைப் போலவே அறுபதில் தனியாகத்தான் வசித்து வந்தனர். இரண்டு வருடம் அங்கு குடியிருந்து விட்டு இப்பொழுது வீடு மாற்றி விட்டார்கள். அப்பொழுது இந்த சண்முகா பிளாட்டில் குடியிருந்த பன்னிரண்டு வீடுகளில் மூர்த்தியும் மாயாவும் மட்டும்தான் அசைவம். மீன் கறி வாங்கவே தயங்கினார்கள்.
ஒரு நாள் யாரோ கதவைத் தட்டவே, திறந்தால் அங்கு மாமா நிற்கிறார்.
“என்ன மாயாம்மா, வாசலில் மீன் கூடை போச்சு. நிற்கச் சொன்னேன். வேணுமா?” என்றதும் மாயா திக்கித் திணறினாள்.
“ஏன் என்ன தயக்கம் மாயாம்மா? வாங்கிக் குழம்பு வையுங்க. எங்களுக்கெல்லாம் சாப்பிடத்தான் முடியல. வாசனையாவது புடிக்கலாமே!” என்று மாமா கூறியதும், மலர்ந்த சிரிப்பில், உறவு அன்னியோன்யமானது.
“ஐயா மூர்த்தி, ஒண்ணும் கவலைப்படாதீங்க. மீன் குழம்பு கொதிச்சு வரும்போது வாசனை கிளம்பும் இல்லியா? அப்போ என்ன பண்ணுங்க… ரெண்டு மெழுகுவத்திங்களை ஜன்னல் பக்கம் வைத்து எரியவிட்டு குப்புன்னு ஊதி அணைச்சுருங்க. மத்த பிளாட்டுக்காரங்களுக்கு பிரச்சனை வராத மாதிரி, இந்த வாசனையை அந்த வாசனை அடிச்சுடும்.”
“ரொம்ப வில்லங்கமான ஆளா இருப்பிங்க போல….” என்று சொன்ன மூர்த்திக்கு, மாமா மேல ஏகப்பட்ட பாசம் வந்துருச்சு.
மாலை நேரம் வந்தா, மாமா தன் வயது நண்பர்களுடன் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். மாமிக்கு எப்போதும் வீட்டு வேலைதான். வேடிக்கை என்னவென்றால் அவர்கள் வீட்டில் டிவி கிடையாது, ஃப்ரிட்ஜ் கிடையாது, ஏசி கிடையாது, வாசிங் மெசின் கிடையாது, டைனிங் டேபிள் கூட கிடையாது. ஹால், பெரிய அறை, இன்னொரு சின்ன அறை எல்லாம் காலியாத்தான் இருக்கும். சின்ன அறையில் நடு நாயகமாக நட்ட நடுவில் மாமா அமர்ந்து பூஜை செய்து கொண்டிருப்பார் காலையில் குளித்துவிட்டு.
அகலமான ஒரு மர பெஞ்சு மட்டும் உண்டு. அதில் இருவரும் படிக்கிற புத்தகங்கள் செய்தித்தாள்கள் அடுக்கி வைத்திருப்பார்கள். யாராவது வந்தால் அந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்வார்கள். பிளாஸ்டிக் சேர் இரண்டும் இருக்கும். இருவரும் பாயை விரித்து தரையில்தான் படுத்துக்கொள்வார்கள் போல.
மாமாவிடம் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ உண்டு. அதிலிருந்து செய்திகள் பழைய சினிமா பாட்டுகள் கேட்டுக்கொண்டே இருக்கும். சுவற்றில் ஒரு ஆணியில் அதை மாட்டித் தொங்க விட்டிருப்பார்.
அப்பப்போ தேவையான மளிகை காய்கறி அரிசி பருப்பை மாமியே பக்கத்தில் இருக்கும் கடைக்கு நடந்தே போய் வாங்கி வந்துவிடுவார். மாசக்கணக்கா தேவைக்குன்னு மூட்டை மூட்டையா வாங்கி அடுக்கி வைப்பதில்லை.
யாரும் அவங்க வீட்டுக்குப் போனா காபி குடிக்காம வர முடியாது. தீபாவளி போன்ற நாட்களில், பண்டிகை பலகாரங்கள் லேகியம் எல்லாம் கிடைக்கும். இன்னைக்கும் அதே போல கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வீட்டை நெருங்கினான் மூர்த்தி. சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டு வாசலுக்குச் சென்றான்.
கிரில் மட்டும்தான் எப்போதும் சாத்தியிருக்கும். ஒற்றைப் பெரிய கதவு திறந்தே இருக்கும். இன்று ஏன் மூடி இருக்கிறது? ஒருவேளை ஊரில் இல்லையோ? மூர்த்திக்குத் தெரிந்து அவர்கள் இருவரும் ஊர் பயணம் சென்றதாக நினைவில்லை. காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறந்தது. அதே முகமலர்ச்சியுடன் கதவைத் திறந்தார் மாமி.
“வாங்கோ, வாங்கோ, தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று அதே உற்சாகத்துடன் வரவேற்றார். உள்ளே நுழைந்த மூர்த்திக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாயை விரித்து அதில் ஒரு ரப்பர் சீட்டு போர்வை விரித்து மாமா படுத்திருந்தார்.
“என்ன மாமி, மாமாவுக்கு என்ன ஆச்சு?”
“ரெண்டு மாசமாகவே கொஞ்சம் உடம்பு சரியில்லை. முதல்ல நடக்க கஷ்டப்பட்டார். வெளியில எங்கேயும் போக வர முடியல. வரவர உட்காரவே கஷ்டப்பட்டார். இப்போ ஒரு மாசமா படுத்த படுக்கையா ஆயிட்டாரு.”
“அது சரி, பாத்ரூம் எப்படி போவாரு? யாரு அவருக்கு உதவி பண்றாங்க?”
“எல்லாம் படுக்கையிலதான். யூரின் வந்தா சொல்லுவாரு. பேசின்ல புடிச்சு ஊத்திருவேன். பாத்ரூம் வந்தா ரப்பர் சீட்லயே போயிடுவாரு. நானே எடுத்துப் போட்டு சுத்தம் செய்து விட்டுருவேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை. நானே பார்த்துக்கறேன்.”
முகமலர்ச்சி சிறிதும் மாறாமல் கலகலன்னு சிரித்துக் கொண்டே சொன்னார் மாமி. ஆனால் மூர்த்தியின் முகத்துல மலர்ச்சி மறைந்து போனது. இதயத்தில் ஏதோ அடைத்த மாதிரி இருந்தது.
“சரி தீபாவளி அன்று வந்திருக்கீங்க. பட்சணம் சாப்பிடுறீங்களா? மைசூர்பாக்கு, ஓமப்பொடி, தீபாவளி லேகியம், காபி தரேன். அதுசரி, உங்க ஒய்ஃப் மாயாம்மா எப்படி இருக்காங்க? அவர்களுடைய முட்டிக் கால் வலி எப்படி இருக்கு? பாவம் அவங்க! ரொம்ப கஷ்டப்பட்டாங்க!”
மூர்த்தி தனக்குள்ளேயே பேசிக் கொண்டான். “மாமி எப்பவும் நின்னுக்கிட்டேதான் பேசிப் பார்த்து இருக்கேன். ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பதையோ சாப்பிடுவதையோ பார்த்ததே இல்லை. பக்கத்து வீடுகளில் போயி பேசிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு ஏதாவது தேவைன்னா செய்து கொடுப்பாங்க. பக்கத்துல இருக்கிற திருவீதி அம்மனை தெருவிலேயே தரிசித்து விட்டு வந்துருவாங்க. சில நேரம் பத்திரிகைகளில் வருகிற குறுக்கழுத்துப் போட்டித் தாளை கையில் வைத்துக்கொண்டு பூர்த்தி செய்து, அதை எடுத்துக்கொண்டு நடந்து போய் பக்கத்தில் இருக்கிற அஞ்சலகத்தில் கவர் வாங்கி முகவரி எழுதி பத்திரிகைக்கு அனுப்பிட்டு வந்துருவாங்க. அப்படியே வர்ற வழியில வாடகை நூலகத்தில் பழைய எழுத்தாளர்களுடைய நாவல்கள் ஏதாவது எடுத்து வந்து படிப்பாங்க. நவீன உலகமே வேறு, இவர்கள் இருவருடைய உலகமே வேறாக இருக்குது.
நான்கு வருடம் முன்னர், முதல் மாடியில் நாங்க குடியிருந்தபோது நடந்தது இது. என்னுடைய இடது காலில் குதிகாலில் முழியில் ஒரு கொழுப்பு கட்டி இருந்து ஆடிக் கொண்டே இருக்கும். திடீரென்று அது உடைந்து விட்டது. கெந்தி கெந்தி நான் நடப்பதைப் பார்த்து மாமி காரணம் கேட்டார்கள். சொன்னேன்.
அன்று இரவு படுக்கப் போகும் முன் யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், மாமி நிற்கிறார். கையில் ஒரு பெரிய கரண்டியும் தூய வெள்ளைத் துணியும் வைத்திருக்கிறார். “கட்டி உடைந்த இடத்தில் இதை அப்படியே துணியில் கொட்டி வைத்து கட்டுங்கள், காலையில் பாருங்கள், சீழ் வடிந்துவிடும். கட்டியுடைய முளையும் வெளியே வந்துவிடும். நன்றாக பிறகு ஆறிவிடும். சூடாய் இருக்கு ஜாக்கிரதை” என்று சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
அதே மாதிரி கட்டினேன். அதிகாலையில் எழுந்தால் கட்டிக்குள் இருந்த முளை, சீழ் எல்லாம் துணியில் வந்துவிட்டது. வலி சுத்தமாகக் குறைந்துவிட்டது. முதல் வேலையாக அவரிடம் போய் செய்தியைச் சொல்லி நன்றியும் சொல்லப் போனேன்.
“பச்சரிசி மாவு விளக்கெண்ணெய் இன்னும் பல மருந்துகள் வைத்து தயார் செய்தேன். இன்னும் இரண்டு நாள் கட்டு போடணும்” என்று சொன்னார் மாமி.
மறுநாள் இரவு அதே போல மாவுக்கட்டுக்கு உரியவைகளை பக்குவம் செய்து ஒரு பெரிய கரண்டியில் சூடாக எடுத்துக்கொண்டு ஓடி வந்தார் மாடிக்கு. மூன்றாம் நாளும் அப்படியே செய்ததில் கால் முழுவதும் குணமாகிவிட்டது.
கட்டி உடைந்த நான்கு நாட்கள் முன்புதான் ஒரு டாக்டரிடம் அதைக் காண்பித்தேன். “ஒரு சின்ன ஆபரேசன்தான், ஆனால் முப்பதாயிரம் ரூபாய் ஆகும்” என்றார் டாக்டர். கை வைத்தியத்துக்கு இவ்வளவு மகிமையா என்று வியந்து கொண்டே யோசித்தான்.
இது வெறும் கை வைத்தியமாக இருக்க முடியாது. அந்த வைத்தியம் செய்த மாமியின் சக்திதான் என்று உள்ளுணர்வு சொல்லியது.”
“என்ன ஒரே யோசனை? பட்சணம் சாப்பிடுறீங்களான்னு கேட்டேன். அதுக்குப் போய் இவ்வளவு யோசனை?”
மாமியின் குரல் மூர்த்தியை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.
“ஆமா, ஆமா, குடுங்க குடுங்க” என்று சொல்லி நிதானத்துக்கு வந்தான் மூர்த்தி. மைசூர்பாக்கு, ஓமப்பொடியை ஒரு தட்டில் வைத்து நீட்டினார் மாமி.
இவருக்கு எப்படி இவ்வளவு சக்தியும் சந்தோசமும் கிடைக்கிறது? தனி ஆளாய் வீட்டைப் பராமரித்து, மாமாவுக்கும் பணிவிடை செய்து, சமையலும் செய்து, பட்சணங்களும் செய்து, எல்லாவற்றையும் விட ஒரு நொடியும் முகம் மாறாமல் மலர்ச்சியுடன் நிற்கிறாரே!
மூர்த்தி அங்கு இருந்த அரை மணி நேரமும் மாமி அமரவே இல்லை. எதிரே நின்று கொண்டும் நடந்து கொண்டும் பேசிக் கொண்டேயும் இருந்தார்.
வாங்கி வந்த பழங்களை மூர்த்தி நீட்டினான். “அட என்னங்க இதெல்லாம் எதுக்கு? சரி சரி, நீங்க என் சகோதரர் மாதிரி. சகோதரிக்கு தீபாவளி பரிசுன்னு வெச்சுக்கிறேன்” என்று கலகலன்னு சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டார்.
“சார் வந்திருக்கார்…. யார் தெரியுதா?” என்று இடையில் மாமாவைச் சீண்டினார். பேச்சு தெளிவாக வரவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது மூர்த்திக்கு. ‘பலகாரம் சாப்பிட்டீங்களா, காபி குடிச்சீங்களா’ என்று கேட்கிறார் என்பது புரிந்தது. விருந்தினர்களைக் கவனிப்பதில் இருவருமே மன்னர்கள்.
“எப்போதும் கதவு திறந்திருக்குமே, ஏன் இன்று சாத்தியிருக்கிறது என்று யோசித்தேன் வரும்போதே” என்று மூர்த்தி கேட்டான்.
“மாமாவுக்கு உடம்பு சரியில்லை, துணி சில நேரம் விலகிப் போயிடும். மாடிக்குப் போறவங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. அதனால தான் கதவை சாத்தி வச்சேன். அறை ஜன்னலையும் சாத்திட்டேன். பயங்கரமா வெடி போடுறாங்க, நாம யாரையும் குத்தம் சொல்லக்கூடாது,” என்று அதே புன்னகையுடன் சிரித்துக்கொண்டே வாசல் வரை வந்து வழியனுப்பினார் மாமி.
மாமிக்குள் இருக்கும்
சக்தி எந்தவித சக்தி என்று யோசித்துக் கொண்டே மூர்த்தி சைக்கிளில் ஏறினான்.
“அட, மாமா மாமியைப் பார்க்கப் போனதில் சாமி கும்பிட மறந்து விட்டோமே!
அவனுக்கு நினைவு வரவும் செக்கு மாடு போன்று அவனுடைய சைக்கிளும் சரியாக கோவில் வாசலில் வந்து நின்றது. இவன் உள்ளே நுழையவும் அவனை வரவேற்பது போல மணி அடித்து, திரைகளும் விலகியது. காலை பூஜை நியமங்களை முடித்து ஈசுவரனும் அம்மனும் ஒரு சேர காட்சியளித்தார்கள்.
ஒருவித புரிதலில் இவனுக்குள் சிலிர்ப்பு உண்டாகியது. மாமிக்குள் உறைந்திருக்கும் அன்பெனும் சக்தியை, கோவிலில் சிவசக்தியாகக் கண்டு மெய்மறந்து நின்றான்.
சூ.குழந்தைசாமி
செயலர்
காந்தி அமைதி நிறுவனம்
332, அம்புஜம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை
சென்னை-600018.
மின்னஞ்சல்: kulandhaisamy.gpf@gmail.com
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25aa-%25e0%25ae%2592%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%2F">logged in</a> to post a comment.