மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத் கீதையின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது.
“அஹிம்சா பரம தர்ம-
கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையிலே சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்கு கொலை வாங்கவே செய்யும்.
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞானம். இதனை ஆங்கிலேயர் ‘Common Sense’ என்பர். சுத்தமான, மாசுபடாத, கலங்காத, அஞ்சாத, பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும்.
சாதாரண ஞானத்தை கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொன்ன மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின் படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின் படி நடக்கவொட்டாமல் ஜீவர்களை காமக்குரோதாதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தின் தெளிவான கொள்கை யாதெனில் ‘நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால் நாம் மற்றோரை நேசிக்க வேண்டுமென்பது’. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் நம்மிடம் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.
நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும். அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் கொண்டும் இருப்போமாயின்- அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் நாம் அழிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.” (பக்கம்:46-47)
“புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலும் தெளிவாக மாசு மறுவின்றி வைத்திருத்தல்… …அறிவைத் தெளிவாக நிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புக்களும், அவற்றுக்கு ஆதாரமான பாவ நினைப்புகளும் இன்றி அறிவை இயற்கை நிலை பெறத் திருத்துதல்.
‘நீங்கள் குழந்தைகளைப் போல ஆனாலன்றி, மோஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்’ என்று ஏசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்…
.. ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்தநிலை ஏற்படும் வரை, புத்தி இடையிடையே தெளிந்தாலும், மீண்டும் மீண்டும் குழம்பிப் போய்விடும்.” (பக்கம் 15)
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%2F">logged in</a> to post a comment.
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%2F">logged in</a> to post a comment.