ஐந்து வயதானாலும் துருதுருவென்று இருப்பாள் ரோஸி. கிறிஸ்மஸ் விழாவின்போது அவளுடைய வீட்டில் ஒரே அமர்க்களம். ரோஸியின் அம்மாவும் அப்பாவும் வேலையாட்களை வைத்துக்கொண்டு வீடு முழுவதும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
வீட்டுக்கு வெளியே பிளாஸ்டிக் தாளில் செய்த நட்சத்திரங்களை பல இடங்களில் தொங்கவிட்டு மினுமினுக்கச் செய்தனர். வண்ணக் காகிதங்களில் தோரணங்கள் வீடு முழுக்கத் தொங்கவிட்டனர்.
டெம்போவில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் வந்து இறங்கியது. அதை ஒரு பெரிய அறையில் வைத்து மின்மினிப் பூச்சி விளக்குகளை எரியவிட்டு ஜோடித்தனர்.
மரத்தின் அருகில் ஒரு குடிலை அமைத்தனர். இயேசு பாலன் பிறந்த மாட்டுத் தொழுவம் எப்படி அப்பொழுது இருந்திருக்குமோ, அதைக் கற்பனை செய்து, அப்படியே அமைத்தனர்.
அந்தக் குடிலுக்குள் வெளியிலும் உள்ளேயும் வைக்கோல் புல் போன்ற பிளாஸ்டிக் தாள்களை பரப்பினர். வண்ணப் பூச்சு தீட்டப்பட்ட சுரூபங்கள் (சிலைகள்) அங்கங்கே வைக்கப்பட்டன.
இடையர்கள், ஆடுகள், மாடுகள், வழிப்போக்கர்கள், மூன்று ராஜாக்கள்- இவர்களுடைய பொம்மைகள் குடிலைச் சுற்றி அங்கங்கே வைக்கப்பட்டன. குடிலின் மத்தியில் மாதா- சூசையப்பர் சிலைகளும் வைக்கப்பட்டு, அவர்களுக்கு இடையில் ஒரு நீண்ட மெத்தையும் வைக்கப்பட்டது. ஆனால் மெத்தை காலியாகவே இருந்தது.
இவை எல்லாவற்றையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ரோஸி, “ஏனப்பா இந்த மெத்தையில் யார் படுப்பார்?” என்று கேட்டாள்.
“இன்று இரவு இயேசு பாலன் பிறப்பார் அல்லவா? அந்த குழந்தைப் பொம்மையை இரவு சரியாக 12 மணிக்குத்தான் இந்த மெத்தையில் வைத்து நாம் வணங்க வேண்டும்.”
“எங்கே அப்பா அந்த இயேசு பொம்மை? நான் பார்க்கணும், ஆசையா இருக்கு….”
“இல்லை ரோஸி, நீ போய் தூங்கு. இரவு மணி ஒன்பது ஆயிடுச்சு.”
“அப்பா, அந்த இயேசு பாப்பாவை இப்போ நான் பார்க்கணும்ப்பா…..”
“சொன்னா கேட்க மாட்டே? மண்டு மண்டு… இரவு 12 மணிக்குத்தான் பார்க்கணும்.”
வந்த எரிச்சலில் ரோஸி ஒரு தொங்கலைப் பிடித்து இழுத்தாள். அறுந்து விழுந்த மணிகள் சிதறி ஓடின. ரோஸியின் அப்பாவுக்கு கோபம் பொங்கி வந்தது.
“ரோஸி, உன்னைத்தான் இங்கே வராதேன்னு சொன்னேன்ல. இப்படித்தான் எதையாவது ஒடச்சு வைப்பே. போ, பக்கத்து வீட்ல போய் விளையாடிட்டு வா” என்று பளிச்சென்று ஓர் அறை விட்டார்.
ரோஸி அழுது கொண்டே போய்விட்டாள்.
ரோஸியின் அப்பாவும் அம்மாவும் இன்னும் சில வேலைகளை முடித்துக்கொண்டு அந்தப் பெரிய அறையின் கதவை சாத்திக் கொண்டு வெளியில் வந்தனர்.
“அட இரவு மணி 11 ஆகிவிட்டது, நாம் இருவரும் குளித்துத் தயாராக வேண்டும். ரோஸியையும் எழுப்பிக் குளிக்க வைத்து ரெடி பண்ண வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே போய் குளித்து முடித்து வந்தனர்.
பிள்ளை அழுது கொண்டே போனாளே, என்ன ஆயிற்றோ என்று பதைபதைத்து வீடு முழுவதும் தேடினார்கள். காணோம். பக்கத்து வீடுகளில் தேடலாம் என்றாலோ எல்லோரும் தூங்கிப் போய் இருந்தனர்.
அம்மா அப்பா இருவரும் அழுது கொண்டே “அட, இன்னும் இரவு 12 மணி அடிக்க இரண்டு நிமிடம்தான் இருக்கிறது, குழந்தை இயேசு சுரூபத்தை குடிலில் வைத்து ஜெபம் செய்யலாம், ரோஸி கிடைத்து விடுவாள்” என்று பேசிக்கொண்டே, கவலையுடன் இயேசு பாப்பாவின் பொம்மையைத் தூக்கிக் கொண்டு அறையின் கதவைத் திறந்தனர்.
மெத்தையில் ஏற்கனவே ஒரு பெரிய பொம்மை வைக்கப்பட்டிருந்தது. அருகில் நெருங்கி பார்த்தார்கள். ரோஸி தான் சுருண்டு படுத்திருந்தாள் அந்த மெத்தையில். ‘நானே உங்கள் குழந்தை இயேசு’ என்று எழுதப்பட்டிருந்த பலகையை கையில் பிடித்தபடி ரோஸி தூங்கிக் கொண்டிருந்தாள்.
சரியாக நடு இரவு 12 மணி அடித்து ஓய்ந்தது. முதல் முறையாக அப்பாவும் அம்மாவும் ரோஸியின் முன் மண்டியிட்டு வணங்கி அவளை வாரி அணைத்து முத்தமிட்டனர்.
“நீ இருக்கும் போது குழந்தை இயேசு பொம்மை என்னத்துக்கு செல்லம்?” என்று இருவரும் முணுமுணுத்தது அவர்களுடைய வாழ்க்கையின் சிறந்த பிரார்த்தனை வாசகமாக மாறியது.
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2587%25e0%25ae%25af%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1-3%2F">logged in</a> to post a comment.
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2587%25e0%25ae%25af%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1-3%2F">logged in</a> to post a comment.