மகாத்மா காந்தியா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்?
வழக்கம்போல அன்றும் ஒரு பள்ளியில் அமைதிக் கல்வி பாடங்களை நடத்திக் கொண்டிருந்தேன்.
அமைதிக் கல்வி பாடம் என்பது மாணவனுக்கு போதிக்கப்படுவது அல்ல; மாணவனும் ஆசிரியனும் இணைந்து பயணித்து கற்பதாகும். சில வேளைகளில் அமைதியைப் பற்றி நுண் உணர்வுடன் மாணவனால் ‘பெட்டிக்கு வெளியே’ சிந்திக்க முடிவதால், ஆசிரியன் எனப்படுவோன் மாணவனிடம் மண்டியிட்டுக் கற்றுக் கொள்ள அவசியமும் சில நேரங்களில் உண்டாகும். எனக்கு அது உகந்ததுதான். ஆனால் இன்றைய ஆசிரியர்களுக்கு அது ஒரு சவாலாகத்தான் இருக்கும்.
எனவே அமைதி என்ற பாடத்தைப் பொறுத்தவரை இணைந்து நட்புறவுடன் கண்டு உணர்தலே நிகழ்கிறது. இந்த வழிமுறையில் மாணவனுக்கு உள்ளிருக்கும் அதிசய அற்புத ஆற்றலை உணர்ந்து வெளிக்கொணர்ந்து, அந்த ஆற்றலை, தான் வாழும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வைப்பது ஒரு ஆசிரியனின் கடமை என்று நம்முடன் வாழ்ந்த காந்தி என்ற மனிதன் நமக்கெல்லாம் அறிவுறுத்தினான்.
என்ன, மகாத்மா காந்தியைப் போய் ‘காந்தி என்ற மனிதன்’ என்று கூறுகின்றாயே என்று கோபிக்கிறீர்களா? மகாத்மா காந்தி என்று வாயைத் திறந்தாலே வெறுப்பவர்கள் பெருகி வருகிறார்கள் இன்று. ஏனோ தெரியவில்லை, அண்ணலைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் பிடிக்கிறது பலருக்கு. ஆனால் காந்தியைப் பிடிக்கவில்லை ஒரு சிலருக்குக் கூட. அப்படியானால், நன்மையை அழிக்கக்கூடிய தீமை வெகுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது?
எனவே உதட்டளவில் மகாத்மா என்று சொல்லிவிட்டு உள்ளத்தளவில் ஒதுக்குவதை விட, காந்தி என்று சொல்லி நண்பனாக அவரை என் உள்ளத்தில் இருத்தப் பழகிக் கொண்டேன்.
ஒழுக்கமில்லாத கல்வி குப்பைக்கு சமம் என்று கருதிய காந்தி, ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தனக்குள் சுய சிந்தனை சுய கட்டுப்பாட்டுடன் ஆனால் சுதந்திரமாக கண்டறிய வேண்டும் என்று கருதினார். அப்படிப்பட்ட கல்வியே ஒரு மாணவனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக அமையும் என்பதால் அதற்கு ஆதாரக் கல்வி என்றும் பெயரிட்டார்.
என்னுடைய வகுப்பில் காந்தியைப் பற்றிக் குறிப்பிட்டு சுய விழிப்புணர்வும் சுயமாய் முடிவெடுக்கும் ஆற்றலும்தான் அமைதிக் கல்விக்கான அடிப்படை என்று கூறினேன். இந்தியாவுக்கு மட்டும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அகிம்சை முறையில் விடுதலை கிட்டியது என்றால் அதற்கு காந்தியே காரணம் என்றும் கூறினேன்.
வகுப்பு முடிந்தது. 40 வருடம் முன்னர் என்றால் இதுபோன்று என் வகுப்பு முடிந்த பிறகு சில மாணவர்கள் என்னிடம் ஓடிவந்து, அகிம்சை முறையில் வாழ்ந்தால் வெற்றிபெற முடியுமா, இந்த நவீன காலத்தில் இது ஒத்து வருமா, அன்றாடம் அகிம்சையைக் கடைப்பிடிப்பது எப்படி என்றெல்லாம் விவாதிப்பார்கள். அநேகமாக கம்யூனிசமா காந்தியமா என்ற பொது விவாதமே நடக்கும்.
ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு மாணவன் ஓடி வந்தான். “சார் இனிமேல் சினிமா ஜோக்ஸ் சேர்த்து சொல்லுங்க” என்றான். இன்னொரு மாணவன், “சார் எதாவது த்ரில்லிங்கா பேய்க் கதை சொல்லுங்க” என்றான். இன்னொரு மாணவி கேட்டாள்: “சார், காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்னு சொல்றாங்க. ஆனால் சுபாஷ் சந்திர போஸ் போன்ற பலரும் போராடித்தானே சுதந்திரம் வந்துச்சு?”
நான் சொன்னேன்: “காந்தி தவிர மத்தவங்கதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாங்க.”
“ஆமாம்மா. ஆனா அவரால் சுதந்திரம் வரல. இதுதான் உண்மை. அவரால் சுதந்திரம் வந்திருந்தால் இந்த இந்தியா இப்படியா இருக்கும்? அகிம்சை முறையில் அல்லவா ஆட்சி நடக்கும், நம் வாழ்வியலும் மாறி இருக்குமே?”
“புரியலையே சார்….”
“சுதந்திரம் வந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி அந்த விழாவில் கலந்து கொள்ளவே இல்லையே. மக்கள் அமைதியாக வாழ கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் இந்தியாவின் ஒரு கிராமத்தின்
மூலையில். அவர் விரும்பிய சுதந்திரம் வரவே இல்லை என்று தான் வருத்தப்பட்டார். எனவே காந்தியினால் இந்த சுதந்திரம் வரவேயில்லை.”
“பிறகு ஏன் காந்தியைப் பாராட்டுகிறீர்கள்?”
“ஏம்மா உனக்கு சாப்பாடு போடுகிறவர் முக்கியமா அல்லது சுய முயற்சியுடன் அந்த சாப்பாட்டை உன் உடலுழைப்பு மூலம் நீயே பெறுவதைக் கற்றுக் கொடுப்பவர் முக்கியமா?”
“இரண்டாமவர்தான்…..”
“அந்த ஆள்தான் காந்தி. ஒப்பிடவே முடியாதவர் மட்டுமல்ல, ஒப்பிடப்படவே முடியாதவர் அவர். என்னதான் அழித்து ஒழிக்கணும்னு நினைச்சாலும் இமயம் போல் உயர்ந்து நிற்பவர் அவர். ஏனென்றால் காந்தி என்பது மனிதன் அல்ல; அகிம்சை வாழ்வியலின் அடையாளம். குறையாத செல்வம், வற்றாத ஜீவ நதி அவர்….”
அந்தப் பெண் ஆழமாய் யோசித்துக் கொண்டே நின்றாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, கேள்வி கேட்ட முதல் பையன்: “சாரி சார், செல்லுல ரீல்ஸ் ஜோக்ஸ் கேட்டுக் கேட்டு சுயமாய் இப்படி யோசிக்கிற சக்தியே போயிடுச்சு எனக்கு” என்றான்.
அடுத்தவன் சொன்னான்: “அடிச்சா திருப்பி அடிக்கிறது தான் திரில்லிங்கா இருக்கும்னு நினைச்சேன்; ஆனா இப்பதான் புரியுது, யாராவது அடிச்சா திருப்பி அடிக்காம என்னை நான் கட்டுப்படுத்துகிறேன் அல்லவா, அதுதான் திரில்லிங்கா இருக்கும்னு.”
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் மீண்டும் கேட்டாள்: “சார், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் காந்திதான்னு சொல்றாங்களே?”
“ஆமாம், காந்திதான் காரணம்….”
“என்ன சார் இப்படிச் சொல்றீங்க?”
“பின்னே என்ன? எப்படி பதில் சொன்னாலும், நீங்க ஏத்துக்க போறதில்ல. காந்திதான் தப்பு பண்ணினார் என்று உங்களையெல்லாம் சொல்ல வைக்கிறாங்க. பிரிவினையின் போது நீயும் இல்லை நானும் இல்லை; அப்படியானால் இந்த மாதிரிக் கேள்விகளுக்கு நம் போன்ற இளைஞர்கள் ‘தெரியாது’ என்றுதானே பதில் சொல்லணும்? அல்லது சுயமாக பதில் தேட முயற்சிக்கணும் இல்லையா?
இன்று இந்த நிமிடத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கணும் இல்லையா? அதுதானே புத்திசாலித்தனம்? சொந்த புத்தியைப் பயன்படுத்த விடாமல் மழுங்கடிக்கச் செய்கிறார்கள் சிலர். இது பிரிவினைக்கான முயற்சி அல்லவா? மனிதனை மனிதன் வெறுத்து ஒதுக்கி பிரித்துத் தரம் தாழ்த்திக் கேவலப்படுத்தும் வேலை, நாட்டுப் பிரிவினையை விட மோசமானது அல்லவா?
நீங்கள் எல்லோரும் குழந்தைகள். தூய உள்ளத்துடன் எல்லோரையும் இணைப்பதே உங்களுடைய பணி. நமக்கு முன்னால் வரலாற்றில் நடந்தவைகள் பற்றியும் வாழ்ந்தவர்கள் பற்றியும் படிப்பதை விட, இன்று வரலாறு படைக்க வேண்டும் நீங்கள். அகிம்சை வழியில் மட்டுமே வரலாறு படைக்க முடியும். அதில் தான் ஒவ்வொரு கணமும் புதுமை மிளிரும். உங்களையே நீங்கள் தூய மலர்களாகப் பாருங்கள். நல்ல எண்ணம் நல்ல சொற்கள் நல்ல செயல்களையே செய்யுங்கள். வதந்திகளை காதிலும் வாங்காதீர்கள், பரப்பவும் செய்யாதீர்கள். சுய சிந்தனையை முடுக்கி விடுங்கள்; சுயக் கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். தன்னிறைவுடன் சுயச்சார்புடன் வாழுங்கள்.
இந்தியா ஒரே தேசம் என்று நாம் ஓங்கிச் சொன்னாலும், மனிதர்கள் மனதளவில் பிரிந்து நிற்கக்கூடிய ஆபத்து பெருகிக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஒற்றுமைக்கு உழையுங்கள். தானாகவே இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு பெருகும். அதன் மூலம் தான் உலக ஒற்றுமையைக் கொண்டு வர முடியும். உன்னை அடுத்திருப்பவரை நேசி, உலகமே உன் நண்பன் ஆகும்” என்று ஒரு நீண்ட பிரசங்கம் செய்தேன்.
சுயமாக சிந்திக்கும் ஆவல் அந்தக் குழந்தைகளிடம் துளிர்த்து வருவதைக் காண முடிந்தது என்னால்.
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2585%25e0%25ae%2595-%25e0%25ae%2592%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%2F">logged in</a> to post a comment.
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F%25e0%25ae%2585%25e0%25ae%2595-%25e0%25ae%2592%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%2F">logged in</a> to post a comment.