நொடிக்கு நொடி வாழும் கலை
2026, பிப்ரவரி எட்டாம் தேதி: திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 20666) வந்தே பாரத் ரயிலில், நானும் (வயது 73) எனது மனைவி (வயது 65)யும் திருச்சியில் காலை 9.50க்கு ஏறினோம். பெட்டி C-9, இருக்கை எண் 15,16.
மதியம் 1:45க்கு தாம்பரத்தில் எங்களை இறக்கி விட்டு விட்டு ரயில் படுவேகமாகச் சென்றுவிட்டது. சற்று நேரம் அந்த ரயில் வேகமாகச் செல்வதை அழகு பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் மனைவியும்.
திருச்சியில் இருந்து தாம்பரம் சரியாக 3:30 மணி நேரத்தில் வந்துவிடுகிறது இந்த ரயில். ரயில் முழுதும் ஏசி. அலுக்கல் குலுக்கல் இல்லை. சீட்டை சாய்த்து விட்டு நன்கு தூங்கலாம். தூக்கம் வரவில்லையா? இருக்கவே இருக்கிறது மொபைல் அல்லது லேப்டாப். சினிமா பார்க்கலாம், வீடியோ பார்க்கலாம், அலுவலக வேலைகளைப் பார்க்கலாம்.
இரண்டு பேருக்கும் சேர்த்து பயணக் கட்டணம் ரூபாய் 2136.30. அந்த அளவு செலவு செய்து பயணம் செய்ய எங்களால் முடியாதுதான். ஆனால் என் மனைவிக்கு இரண்டு முட்டிக் காலிலும் 10 வருடங்களாக இருந்த வலியைச் சரி செய்ய அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதம்தான் ஆகிறது. நடைப்பயிற்சி, படியேறும் பயிற்சி செய்யச் சொல்லி இருக்கிறார் மருத்துவர். மற்ற ரயிலிலோ பேருந்திலோ, உட்கார்ந்து செல்லும் நேரம் அதிகமாகும் என்பதால், இந்த சொகுசு ரயிலில் பயணம் செய்தோம்.
பயணம் வெகு இனிமையாக சொர்க்கம் போல் இருந்தது. ஆனால் அது தாம்பரத்தில் இறக்கி விடப்பட்ட போது கொடுமையான நரகமாக மாறும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தாம்பரம் மேற்கு வெளி வாசல் செல்ல படி ஏற வேண்டும். அவ்வளவு படிகளை என் மனைவியால் ஏற முடியாது. மின் தூக்கியும் எலிவேட்டரும் வேலை செய்யவில்லை என்ற அறிவிப்புடன் மூடப்பட்டிருந்தன. மின்சார கார் இரண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. பொறுமையாக நின்றிருந்தோம்.
என் மனைவி குச்சியை ஊன்றி தத்தித் தத்தி நடப்பதைக் கண்ட ஒரு போர்ட்டர் “அம்மா, சக்கர நாற்காலி எடுத்து வரவா?” என்றார்.
“அதற்கு எவ்வளவு கொடுக்கணும்?” என்றார் என் மனைவி.
“ஐநூறுதாம்மா…”
“ரயிலுக்கே இவ்வளவு ஆயிடுச்சே… இது வேறயா?”
மின்சார கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
“இதில் போனால் வெளியில் கொண்டு போய் விட்டு விடுவார்களா?” என்று அப்பாவித்தனமாக என் மனைவி அந்த போர்ட்டரிடமே கேட்டார்.
“போங்க போங்க… அந்தப் படிக்கட்டு வரைக்கும்தான் விடுவார். அப்புறமும் நீங்கதான் படியேறி வெளியே போகணும்….” என்று கிண்டலடித்தார் அந்த போர்ட்டர்.
“சரி, இந்த இடத்தை விட்டு நகருவோம்” என்று முணுமுணுத்தபடி நானும் என் மனைவியும் அந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டு லக்கேஜை மடியில் வைத்துக்கொண்டோம்.
மனிதர்கள் மட்டும்தான் அதில் ஏற முடியும் என்ற நிபந்தனை வேறு. பெட்டிகளை வேறு எப்படிக் கொண்டு போவது?
பேட்டரி கார் பிளாட்பாரத்தின் அந்தக் கோடியில் இருந்த படிக்கட்டு அருகில் எங்களை இறக்கி விட்டு விட்டு, ஒருவருக்கு இருபது ரூபாய் வீதம் 40 ரூபாயைப் ரூபாயை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார். சில இடங்களில் தலைக்கு 30 ஏன் 50 கூட கேட்கிறார்கள்.
“ஏம்ப்பா, இவங்களுக்கு கால் ஆபரேஷன்…. படி ரொம்ப ஏற முடியாதுன்னு தானே உன் வண்டியில் ஏறினோம்? வெளியில் கொண்டு போய் விடலாம் அல்லவா?”
“சார் இதுவரைக்கும்தான் நாங்க ஓட்ட முடியும். இதோ போறாங்கள்ல…. அவங்க பின்னாடியே போங்க…. வெளியில போயிடலாம்….”
மதியம் வெயில் சுள் என்று அடித்தது. நான்கு மணி நேரம் ஏசியில் அமர்ந்து வந்த எங்களுக்கு அதுவும் சுகமே!
எனது மனைவி கம்பை ஊன்றிக் கொண்டே கண்களை இடுக்கிக் கொண்டு தொலைவாகத் தெரிந்த ரயில் தண்டவாளங்களை அசதியுடன் பார்த்தார். நான் தோளில் மாட்டியிருந்த இரண்டு பைகளும் கையில் ஒரு பையுமாக நின்று கொண்டே, அவரை பாவமாய் பார்த்தேன்.
எனக்கும் உடல் முழுவதும் வலி உண்டு. இருந்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு பொங்கி வந்தது. அம்மையார் எப்படி அமர்க்களமாக ஏசியில் உட்கார்ந்து வந்தார்! ஒரு நொடியில் நிலைமை, நம்முடைய வாழ்க்கை மாதிரி, மாறிவிட்டதே என்று ஒரு நிமிடம் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
சிரிப்பை வெளியில் காட்டினாலோ தத்துவார்த்தமாக அந்த நேரத்தில் பேசினாலோ அம்மாவுடைய கைத்தடிக்கு என் தலை மீது மோகம் வந்து பாய்ந்து விடும் என்று தெரியும். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு “என்ன மேடம், என்ன பண்ணலாம்னு யோசனை? ஹெலிகாப்டர் பறந்து வந்து இந்த இடத்தில் செங்குத்தாய் இறங்கி நம்மை ஏற்றிக் கொண்டு போனால்தான் உண்டு. அது பெரிய பெரிய பதவியில் இருக்கும் தலைவர்களுக்கே அந்தச் சலுகை. நம்மைப் போன்ற பாமரர்களுக்கும் அதிகாரம் வகிக்க தெரியாத வக்கத்தவர்களுக்கும் கிடையாது” என்றேன்.
என் மனைவி “வேற என்ன செய்யறது? நடக்கிறேன்… இம்புட்டு தூரம் இருக்கே… அரை கிலோ மீட்டர் இருக்கும் போல…. ரயில்வே ட்ராக் வேற இத்தனை இடையில் இருக்கு…. குறுக்கே ரயில் வந்துடாதா?” என்று புலம்பிக் கொண்டே எறும்பு ஊர்வது போன்று ஊரத் தொடங்கினார்.
கனமான சாமான்களைத் தூக்கிக்கொண்டு, இவரைத் தனியாக நடக்க விட்டு விட்டு, வேகமாக சென்று ஒரு இடத்தில் வைத்து உட்காரவும் முடியாது என்னால். அங்கே முன்னால் பைகளைக் கொண்டு போய் வைத்துவிட்டு இவருக்கு துணை செய்ய வரவும் முடியாது. மனைவிக்கு கால் வலி, எனக்கு லக்கேஜ் வலி. வலிகளை தாங்கிக் கொண்டு பொடிப்பொடியாய் அடிவைத்து இணையாக நடந்தோம். அதுதானே திருமண வாழ்க்கையின் அர்த்தம்? நிற்க.
×××××××××××××××
இது எங்களுக்கு ஏழு எட்டு வருட அனுபவம். வெளியூரிலிருந்து எழும்பூர் வந்து இறங்கினால் ஏழாவது எட்டாவது பிளாட்பாரத்தில் ரயில் சென்று நிற்கும். மனம் உடைந்து போகும். என்ன செய்வது? இதே அனுபவம் தான்.
ஒரு முறை 500 ரூபாய் கொடுத்து வீல் சேரில் அமர்ந்து வெளியில் வந்து விட்டார் என் மனைவி. மறுமுறை போர்ட்டரின் ஆதிக்கத்திற்கு அடிபணிய நாங்கள் தயாராக இல்லை. மனைவியை லக்கேஜ்ஜூடன் உட்கார வைத்துவிட்டு பிளாட்பாரம் படியேறி, முதல் பிளாட்பாரம் வந்து இறங்கி, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குச் சென்று, என்னுடைய ஆதார் கார்டை அடகு வைத்து, வீல் சேர் பெற முயன்றேன். அதுதான் முறையாம்.
அப்படிக் கிடைத்தால், அதை எடுத்துச் சென்று என் மனைவியை அதில் உட்கார வைத்து பிளாட்பாரத்திலும் பிளாட்பாரம் இல்லாத கரடு முரடு தரைகளிலும் சாமர்த்தியமாகத் தள்ளி வெளியில் ஆட்டோ ஸ்டாண்ட் வரைக்கும் மனைவியை கொண்டு வந்து விட்டு, பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குச் சென்று, வீல்சேரை ஒப்படைத்து விட்டு, என்னுடைய ஆதார் கார்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அதற்கும் தயாராகி விட்டேன். ஆனால் அதற்குரிய பொறுப்பானவர் அந்த அறையில் இல்லை. வருவார் வருவார் என்று சுமார் அரை மணி நேரம் சொன்னார்கள், வரவில்லை.
போர்ட்டர் மட்டும் எப்படி உடனே எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார் என்பது மாயமாக இருந்தது. வாழ்வில் எத்தனை விசயங்கள் நமக்கு மாயமாக இருக்கின்றன! அதில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்!
நான் பொறுமையோடு இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை; ஆனால் பொறுமை இழக்கும் என் மனைவியின் நிலையை நினைத்துக் கலங்கி, திரும்பி படி ஏறி, ஏழாம் பிளாட்பாரம் ஓடினேன். எங்கிருந்தோ அந்தப் போர்ட்டர் காட்சி கொடுத்தார் அங்கே! அவருக்கும் கௌரவம் இருக்காதா என்ன? எங்கேயோ பார்த்துக்கொண்டு நடந்து போவது போல் எங்களைக் கடந்தார்.
“ஐயா, வீல் சேர் எடுத்துக்கிட்டு வர்ரீங்களா?” என்று என் வெட்கத்தை விட்டுக் கேட்டேன்.
“அதான் நான் அப்பவே சொன்னேன்ல? வீல் சேர் இருந்தா எடுத்துட்டு வரேன்” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார். ஒவ்வொரு பதவிக்கும் ஒரு கெத்து இருக்கத்தானே செய்கிறது? நாம் அதற்கு ஆட்படத்தான் வேண்டும். அந்த நேரத்தில் நான் அவரை ஆபத்பாந்தவனாக வணங்கினேன்.
“ஐயா, கொஞ்சம் சீக்கிரம் எடுத்து வாங்க… மனைவிக்கு கால் வலி அதிகமாகிவிட்டது…”
மாயமோ மந்திரமோ தெரியவில்லை. ஐந்தே நிமிடத்தில் வீல் சேருடன் ஓடி வந்தார். மனைவியை அதில் உட்கார வைத்தார்.
மனைவி மடியில் ஒரு பையை வைத்துவிட்டு மற்றதைத் தூக்கிக் கொண்டு நானும் கூடவே ஓடினேன். வெளியில் வந்து இறக்கிவிட்டு, நான் கையில் தயாராக வைத்திருந்த 500 ரூபாயை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார்.
“அப்படியானால் இவ்வளவு ரயில்வே நிர்வாகமும் அதிகாரிகளும் இந்த போர்ட்டர்களின் நிரந்தர அடிமைகள் ஆகி விட்டார்களா?” என் உள் மனம் சொல்லிற்று.
வெள்ளை பேண்டு வெள்ளை சட்டை போட்ட எந்த அதிகாரிகளும் செய்ய முடியாத ஒரு உதவியை, இந்த அழுக்குச் சட்டை போட்ட ஒரு போர்ட்டர் இவ்வளவு எளிதாக செய்து முடித்து விட்டாரே… அதுவும் 80 கிலோ கொண்ட என்னுடைய மனைவியை பத்திரமாக வெளியில் கொண்டு சேர்த்துவிட்டாரே… இதற்கு 500 என்ன, 5 லட்சமே கொடுக்கலாமே….”
××××××××××××
ஆனால் நேற்று தாம்பரத்தில் அதுபோலச் செய்ய எனக்கு இஷ்டமில்லை. என்னவோ ஒரு கேவலமும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன. கையாலாகாத தனத்தின் உச்சியில் எங்களைக் கொண்டு நிறுத்திவிட்டு சுற்றி நின்று எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பது போன்று இருந்தது. அதில், எங்களை வந்தே பாரத்தில் வேகமாகக் கொண்டு வந்து தள்ளி விட்டுச் சென்ற ரயில் டிரைவரும், தாம்பரம் ஸ்டேஷனின் போர்ட்டர்கள், அதிகாரிகள், ரயில்வே நிர்வாகம், மத்திய மந்திரி எல்லோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
எங்களைப் போன்று இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு முதியவர்கள் பலர் தள்ளாடியபடியே ஐந்து ஜோடி ரயில் தண்டவாளங்களைக் கடந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். எங்கள் நிலையோ இன்னும் மோசமானது.
என் மனைவி இறை வழிபாட்டுத்தலங்களில் நேர்ச்சை வைத்தது போன்று சிறு சிறு அடிகளாக வைத்து முன்னேறிக் கொண்டிருந்தார். அந்த நேரம் லக்கேஜ் பாதி ஏற்றிக்கொண்டு இரும்பாலான கை வண்டி-ட்ராலி-யை இழுத்துக் கொண்டு வந்தார் ஒருவர்.
“அம்மா, இதில் உட்காருங்க, வெளியில் விடுகிறேன்” என்றார். அந்த இரும்பு வண்டி ஒன்றரை அடி உயரம். மனைவி அதில் அமர்ந்தால் தொங்கும் கால்கள் தரையில் அடிப்படும். இருப்பினும் மனைவி அவரிடம் கேட்டார்:
“எவ்வளவு வேணும்?”
“200 ரூபாய் கொடுங்க…”
“வேண்டாம் போங்க….” என்று சலிப்புடன் மனைவி கூறினார்.
ரயில் நிர்வாகம் இந்த பிரச்சனையை முழுமையாகக் கவனித்து இருந்தால், அந்த பேட்டரி காரைக் கொண்டு பயணிகளை வெளியில் கொண்டு சேர்த்திருக்க முடியும். 20க்கு பதிலாக 100 ரூபாய் கூட வாங்கிக் கொள்ளட்டும். ஆனால் இந்த அங்கீகரிக்கப்படாத பணி-பணப் பரிவர்த்தனை எல்லாமே தடியெடுத்தவன் தண்டல்காரன் மாடலில்தான் நடக்கிறது. வரைமுறை, கணக்கு எதுவும் கிடையாது. ரயில் நிர்வாகத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. தொடர்பு இல்லாவிட்டால் எப்படி இவர்கள் உள்ளே இப்படிச் செயல்படுகிறார்கள்? நீங்கள் கேட்கலாம். அதுவும் சிதம்பர ரகசியமே!
சுமார் அரை மணி நேரம் பொடிப் பொடியாய், வலியுடன் நடந்து என் மனைவி வெளியே வந்து சேர்ந்தார் ஒரு வழியாக. ஒரு கார் அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். என் உடல் பொருள் ஆவி முழுவதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த அரை மணி நேரம் பட்ட அவமான வலி நிறைந்திருந்தது. அதை மனைவியுடன் பேசுவதிலும் ஜோக் அடிப்பதிலும் கரைக்க முயன்று கொண்டிருந்தேன்.
கார் வசதி இருப்பவர்கள் வீட்டிலிருந்து காரில் ஏறி பல இடங்களுக்கு சென்று விட்டு திரும்பி வந்து வீட்டுக்குள் சென்று விடுகிறார்கள். பாமரர்கள் படும் அவஸ்தை அவர்களுக்குப் புரியாது. மக்கள் தலைவர்களும் அதிகாரிகளும் தங்களுக்குக் கிடைக்கும் சொகுசு வாழ்க்கையை விரும்பியே அந்தப் பதவிகளையும் அதிகாரத்தையும் அடைய விரும்பி வெறிகொண்டு அலைகிறார்கள்.
இவர்களைப் போல உயர் பதவிகளைப் பெற விரும்பும் இளைஞர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றவே பள்ளி கல்லூரிகள் ஆசிரியர்களை மிரட்டி உருட்டி வேலை வாங்கி, அதிகக் கட்டணங்களையும் வசூலிக்கிறார்கள். வணிகத்தில் கொடிகட்டிப் பறக்க இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டுமானால், கல்வி நிறுவனங்கள் வணிகமயமாய் ஆகித்தானே தீர வேண்டும்?
அதேபோல பதவிக்கு வருபவர்கள் சேவை செய்யத்தான் என்று சொன்னாலும், அவர்களுடைய சேவை முழுவதும் தங்களுடைய அரசியல் வாழ்வை வலுப்படுத்தும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கும் பணியை மட்டுமே சேவையாய்ச் செய்கிறார்கள்.
சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் சமத்துவமாக வாழ முன்வருவதில்லை. ரயில் நிலையங்களிலேயே இந்த ஏழை பணக்காரர்களின் நிலை நமக்குத் தெளிவாக தெரிய வரும்.
பேருந்துகளில் பயணம் செய்து ரயில் நிலையத்தை அடைய முயலும் ஏழைகள் நெடுந்தூரம் தங்கள் உடமைகளை தூக்கிக் கொண்டு நடந்து வர வேண்டி இருக்கிறது. ஆட்டோவில் பயணிப்பவர்கள் ஓரளவு அருகில் செல்லலாம். காரில் செல்பவர்கள் மட்டுமே மேலும் நெருங்கிச் சென்று இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் பார்த்தால் எல்லோருமே மனிதர்கள்தான்.
பிளாட்பாரத்தில் நுழைந்த உடனேயே அருகிலேயே ஏசி பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்த வகுப்பினரும், பதிவுச் சீட்டு வாங்காதவர்களும் தொலைதூரம் நடந்து ஏற வேண்டி உள்ளது. பணம்தான் வாழ்வின் மையம் என்பதை இந்த அமைப்பியல் வன்முறை மனிதனுக்கு மறைமுகமாக உணர்த்துகிறது, பயமுறுத்துகிறது.
ரயிலில் கழிவறை வசதிகள் பயணக் கட்டணத்தைப் பொறுத்தே வழங்கப்படுகின்றன. சாதாரண டிக்கெட் வாங்கி பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணிப்பவர்கள் ஆடு மாடுகளை விட மோசமாகப் பயணிக்க வேண்டியுள்ளது. பத்து மடங்கு கொடுத்து டிக்கெட் வாங்குபவர் ராஜாவைப் போல கவனிக்கப்படுகிறார். அவருடைய உடல் சவுகரியத்துக்கு ஏதாவது ஊறு ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்து விடுகிறார். இது தனியார் நிறுவனங்களுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் பொருந்தலாம். ஆனால், எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அரசுக்குப் பொருந்தாது அல்லவா? ஆரோக்கியமும் உடல்நலனும் சுற்றுப்புறப் பாதுகாப்பும் எல்லா மனிதர்களுக்கும் ஒன்றாக வழங்க வேண்டியது ஓர் அரசின் கடமைதானே?
எல்லா இடங்களிலும் பாமரன் இழிவுக்கு ஆளாகிறான். பணக்காரன் கௌரவம் பெறுகிறான். சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு பொதுவான ஒன்றுதானே? பணம் இல்லை என்பதால் ஏழை இழிவுக்கு ஆளாக்கப்படலாமா?
மனிதன் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு வழி வகுப்பது தானே ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும்?
மதுவை விற்று பெற்றோரைக் கொன்று, விற்று வரும் வருமானத்தில் அந்தப் பெற்றோரின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதை ஒரு அரசு பெருமையாகக் கருதினால் அதை மக்கள் நலம் காக்கும் அரசு என்று எப்படிக் கருதுவது? அப்படிப்பட்ட நல்லாட்சியை தருகிறோம் என்று வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வாறு வாக்கு அளிப்பது?
மதுவை முற்றிலும் மக்கள் வாழ்வில் இருந்து நீக்கி, காசு இல்லா தூய குடிநீர் வழங்குவோம் என்று உறுதி கொடுக்கும் கட்சிகள் இன்று ஒன்றுகூட இல்லை. மக்களை ஏமாற்றி வஞ்சித்து அரசு அதிகாரத்தை பிடிக்கும் வெறி இந்த அரசியல்வாதிகளின் ரத்தத்தில் நஞ்சாக ஊறிவிட்டது.
பசுத்தோல் போர்த்திய புலிகளாக மக்களிடம் ஆசை வார்த்தைகள் காட்டுகிறார்கள். பொங்கல் இனாமாக, சென்ற ஆட்சியை விட, ஒரு கரும்பு அதிகமாகத் தருவோம் என்று அறிவிக்கிற அளவுக்கு மக்களை இலவசத்துக்கு அலையும் மாக்களாகக் கருதுகிறார்கள் இந்த ஓட்டுக்குப் பிச்சை எடுப்பவர்கள்!
தங்களுடைய சுயமரியாதையை உயிரினும் மேலாக மதிக்கும் ஒவ்வொரு மனிதனும், மறுபக்கம், இலவசங்களைப் பெற ஓடிக் கொண்டிருக்கிறான். ரேஷன் கார்டுகள் மனிதர்களை தரம் பிரித்துக் காட்டுகின்றன. வறுமைக் கோட்டுக்கு மேலே மக்களை உயர்த்த முயலும் மக்கள் தலைவர்கள் அதே மக்களைப் போன்று வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து காட்ட முன்வருவதில்லை. தங்கள் குடும்பத்திற்கு ரேஷன் கடையில் இருந்து பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதில்லை. தங்கள் குழந்தைகளை தாங்களே நடத்தும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் சாதாரணப் பாமரனை போன்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வருவதில்லை.
அப்படியானால் பாமரனை அடக்கியாளும் ஒரே வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்களா?
ஒரு சாலையின் அகலத்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து பெரிய கார்களில் செல்பவர்கள் மிகவும் பாதுகாப்பாகச் செல்ல முடிகிறது; சமூகத்தில் மதிக்கப்படுகிறார்கள். அடுத்தது, ஆட்டோ. அடுத்தது, இருசக்கர பைக், ஸ்கூட்டர். அடுத்தது சைக்கிள், நடப்போர்.
சைக்கிளில் செல்வோர் ஓரம் கட்டப்படுகின்றனர். நடப்போருக்கு பாதை கிடையாது. புழுக்கள் போன்று சாலைகளில் நெளிந்து ஒளிந்து வதங்கிச் செல்ல வேண்டும். மனிதன் ஏன் இவ்வளவு கேவலத்துக்கு ஆளாக வேண்டும்?
இதனால், மென்மையானவர்கள் மெல்ல மெல்ல தங்களையே ஓரங்கட்டிக்கொண்டு வாழ்விலிருந்து ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்; காணாமலே போயும் விடுகிறார்கள்.
பெரிய பெரிய பங்களாக்களில் முன்னால் இருக்கும் போர்ட்டிகோவை கழுவி சாலை வரைக்கும் குழாய் கொண்டு தண்ணீரை பீய்ச்சு அடிக்கிறார்கள். கேட்டால், முதலாளிக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிறார்கள் இந்த அடிமைகள். 300 அடி 500 அடி வரை போர் போட்டு பூமியின் நீரை உறிஞ்ச முடிகிறது அவர்களால். தாறுமாறாக நீரை வீணாக்குகிறார்கள். ஆனால் ஏழைகள் அடி பம்பு போட்டு நீரை எடுக்க முயன்றால் நீர் கிடைப்பதில்லை. அரசு தரும் பைப்புகளில் வரும் நீரை நம்பியே நிற்க வேண்டியிருக்கிறது.
பணம் நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் பணிகளில் சேர இளைஞர்கள் முண்டியடிக்கிறார்கள். தங்களுடைய படைப்பாற்றல் மிக்க அக சக்தியை வலுப்படுத்துவதற்கு அவர்களுக்கு தெளிவும் இருப்பதில்லை, அதைத் தேடி ஓடுவதுமில்லை. செயற்கை அறிவு அவர்களை கபளீகரம் செய்து விடுகிறது. பாமரன் என்று ஒருவன் இருப்பதோ அவனுடைய துயரங்களோ அவர்களுக்குத் தெரிவதில்லை.
மக்கள் அப்படிப்பட்ட சிறுமைத்தனம் கொண்டவர்களைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். தலைவர்கள் என துதி பாடி, கூடவே லாப நோக்குக் கருதி, அலைகிறார்கள்.
பள்ளிகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் தேவை ஒழுக்கம் என்கிறார்கள். ஆனால் ஒழுக்கச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதைப்பொருட்கள் இன்று சிறு வயது குழந்தைகளையும் பாதிக்கும் அளவுக்கு அவர்களுக்கு விற்கப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் இதற்காக குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் வெளிப்படையாக. போதைப்பொருள் விற்பவர்கள் என்று பகிரங்கமாக பழி போடுகின்றனர் ஒருவர் மீது ஒருவர். ஆனால் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எவரும் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதும் இல்லை.
இளைஞர்கள் ஒருவர் விடாமல் எல்லோரும் தங்களுடைய மொபைல் என்ற கையடக்கக் கருவிக்குள் தங்களை மாய்த்துக் கொண்டு விட்டனர். முன்னர் சொத்து கொள்ளையடிக்கப்பட்டால், விரக்தியில், ஓரிருவர் தற்கொலை செய்து கொள்வர். இன்றோ ஒரு இளைஞனிடமிருந்து அவனுடைய செல்லைப் பறித்து விட்டால் வாழ்வே சூனியம் ஆகி விடுகிறது அவனுக்கு.
ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய உணவுக்கு உடலால் உழைத்து உண்ண வேண்டும் என்ற தார்மீக நெறி இன்று செல்லுபடி ஆகாது. ஒருவரைக் கொலை செய்ய லட்சக்கணக்கான கோரமான வக்கிரமான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் மூளைகளில் திணிக்கப்படுகின்றன. இளைஞர்கள் தங்களுடைய மென்மைத் தன்மை மாறி, எந்த நேரமும் தற்கொலைக்கும் கொலைக்கும் தயாராகிவிடுகிறார்கள். இன்றைய பொழுதுபோக்குகள் மக்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் அளவுக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.
இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இயலாத வறட்டு மூளைகளாகி விட்டன இளைஞர்களுடைய மூளைகள். அதனால் விளையும் விரக்தி மனச்சோர்வு அழுத்தம் காரணமாக தற்கொலையோ கொலையோ செய்யும் அளவுக்கு தெளிவற்ற போதை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் முதியோர் படும் பாடு கொஞ்சமாவது அவர்களுக்குப் புரியவருமா?
வலியவன் வாழ்வான் என்ற கோட்பாடு வலிவடைந்து வருகிறது. எல்லோருக்கும் நன்மை கருதிச் செயல்படுவதோ, அதிகத் துன்பப்படுவோரின் துயரை முதலில் துடைக்க முன் வருவதோ இளைஞர்களுக்கு புரியாத ஒன்றாகி வருகிறது. வலியவருடன் எளியவரையும் முன்னேற்றி சமத்துவம் தந்து மனிதர் யாவருமே கவுரவம் சுயமரியாதை பெறும் வகையில் செயல்படும் பாமரர்களின் அரசு மலரும் என்று நம்ப முடியுமா? முடியாது. ஏனெனில் நாம்தான் எல்லோரையும் விட வலியவராக ஆகிட முண்டியடித்துக் கொண்டிருக்கிறோமே? வலியவரை மேலும் வலிமைப்படுத்தும் முன்னேற்றத் திட்டங்களும், எளியவரை கேவலப்படுத்தும் இலவசத் திட்டங்களுமே இன்று அரசுகளின் கைகளில் மக்களை கவரும் துருப்புச் சீட்டுகளாக உள்ளன.
சுய சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, சுயச் சார்பு இவைகளின் அடிப்படையில் ஒழுக்கம் வளர்த்து, உடல் உழைப்பால் உணவைத் தேடும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் அந்த இயற்கையான வாழ்வை விரும்பினாலும், சொகுசான வாழ்வை செயற்கை அறிவே தரும் என்று ஆசை காட்டப்பட்டு மூளை மழுங்கடிக்கப் படுகின்றனர். பைடு பைபர் (The Pied Piper of Hamelin) என்ற கதையில் வருவது போன்று ஏஐ (Artificial Intelligence)க்குப் பின்னர் செல்லும் வெறிகொண்ட கூட்டமாகி வருகின்றனர்.
இளைஞர்கள் உடலை எப்போதும் சுகத்தில் ஆழ்த்தி வைக்கவே விரும்புகின்றனர். உடலை வருத்தி உண்மையைத் தேடும் வழியை யாரும் விரும்புவதில்லை. எனவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நாசமாகி சொல்லொணா நோய்களால் தாக்கப்படுகின்றனர். துரித உணவு துரிதமாக அவர்களுடைய ஆயுளைப் பறிக்கப் பார்க்கிறது. வருங்காலத்தில் முதியோர் மட்டும் சாலைகளில் ஒதுக்கப்பட்டு அலைந்து திரிய மாட்டார்கள்; மனிதர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இசைவு இல்லாது குழப்பத்துடன், தங்களிடமிருந்தே விலக்கப்பட்டு, சுயத்தை இழந்து திரிவார்கள்.
செயற்கை அறிவு உற்பத்தி செய்த ரோபாட்டுகள் தான் அவர்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது, அவர்கள் தங்களுடைய இழந்த வாழ்வைப் பெறுவதற்கு.
என்ன அது?
பாமரன் எங்கெங்கு அல்லல் துன்பத்துக்கு ஆளாகிறானோ அவனுடைய துயர் தீர்க்க அவனோடு நின்று வாழ்ந்து, அவனுடைய துயர் துடைக்கச் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒன்று:
பத்து இளைஞர்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்குச் சென்று நாள் முழுவதும் முதியோருக்கு சேவை செய்ய வேண்டும். தங்கள் பணத்தைக் கொண்டு ஒரு வீல் சேரை வாங்கிக் கொண்டு, என் மனைவியைப் போன்று கையறு நிலையில் நின்று தவிப்போரை அதில் உட்கார வைத்து தள்ளிச்சென்று ஸ்டேஷனுக்கு வெளியில் விட்டாலே போதும்.
இது போன்று, அவர்களுடைய உடல் வலுவைப் பயன்படுத்தி, பாமரர்களுடைய நலனுக்கு உழைத்தால் அவர்களுடைய இயற்கை அறிவு செழிக்கும்; மூளை வலுப்பெறும்.
எந்தக் குறைக்கும் நிர்வாகத்திடம் முறையிடும் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அமைப்பியலில் மாட்டிக் கொண்ட நிர்வாகத்திடம் முறையிட்டு நிரந்தரத் தீர்வு இதுவரை கிடைத்ததே இல்லை.
இந்த சேவை மாடல் தொடர்ந்தால் அரசுப் பணிகளில் சேர்ந்து விடும் வெறி இளைஞரிடையே மெல்ல குறையும்; உடல் உழைப்பு செய்து ஊதியம் பெறும் ஆர்வம் மேலோங்கும்; பாரம்பரியமும் பண்பாடும் மீண்டும் தழைக்கும்; படைப்பாற்றல் புத்துயிர்ப்புப் பெறும். பதவிகளையும் அதிகாரத்தையும் பாமரனின் சேவைக்குப் பயன்படுத்தாதவர்களை சற்றும் மதிக்காது ஓரங்கட்டும் பண்பாடு இளைஞரிடையே மெல்ல வளரத் தொடங்கிவிடும். ஏழ்மையைப் போற்றி எளிய வாழ்வை ஏற்க இளைஞர்கள் முன் வருவர். எளிமையும் பணிவும் மட்டுமே ஒரு மனிதனை வலுப்படுத்தும் என்ற உண்மையை உணரத் தொடங்குவார்கள்.
இங்கு ஒரு உண்மையைக் கூற வேண்டும். தாம்பரத்தில் எங்களுக்கு ஏற்பட்ட அவமானம் தான் எங்களுக்குப் பிரச்சினை ஆயிற்றே தவிர, உடல் வலியுடன் நடந்தது பிரச்சனை ஆகவில்லை. ஏனெனில் நானும் மனைவியுமே ஒரு வாழ்வியல் கொள்கையை வைத்துள்ளோம். ஒவ்வொரு கணமும் எது எங்களுக்கு நேருகிறதோ அதை அப்படியே முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வது என்பதே.
எவ்வளவு உடல், மன வலியாக இருந்தாலும், மனைவியைப் பொருத்தவரை அந்த அரை மணி நேரம் வலிக்க வலிக்கப் பொறுத்துக் கொண்டு நடந்தது சிறந்த பிசியோதெரபியாக மாறியது. யார் மேலும் கோபமோ வெறுப்பும் கொள்ளவில்லை நாங்கள். அப்படியே ஏற்றுக் கொண்ட எங்களுடைய மன தியானம் மானிடருக்கு நன்மையாக மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக இருந்தது.
இதன் பிறகு அந்த நிகழ்வு எங்களுக்கு கேவலமாகப் படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு ஆசீர்வாதமாகவே நாங்கள் நினைத்தோம். அப்பொழுது எங்கள் மனதில் எங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தவர்களாக நினைத்த அத்தனை பேரையும் நன்றிக்கு உரியவர்களாக வணங்கி மகிழ்ந்தோம். ரயில்வே நிர்வாகம், ஊழியர்கள், போர்ட்டர்கள், மந்திரிகள் அனைவருமே எங்களுக்கு அந்த ஞானத்தை வழங்கியவர்களாக மாறிக் காட்சியளித்தார்கள்.
இவை எல்லாமே, நொடிப் பொழுதில் வாழும் கலையைக் கற்றுக் கொண்டால், எவருக்குமே சாத்தியம்தான்.
அது எப்படி?
என் மனைவியை அடிமேல் அடிவைத்து நடப்பதை எதிரிலே நின்று மொபைலில் படம் எடுத்து மகிழ்ந்தேன் அந்த தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில். பழைய சினிமா பாடல் ஒன்றை அவருடைய காது படாமல் முணுமுணுத்துக் கொண்டே நடந்தேன்.
“நடையா, இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது… இடையா, இது இடையா, அது இல்லாதது போல் இருக்குது….”
சிலுவையைத் தூக்கி நடந்த போது இயேசு பெருமான் இப்படித்தான் நடந்திருப்பார்.
பகவானின் ஞானம் உதித்த பின் இளைஞன் குருநானக் இப்படித்தான் பெற்றோரையும் குடும்பத்தையும் விட்டு தள்ளாடி ஓடி இருப்பான்.
நிர்வாண நிலை அடைந்த மகாவீரரின் நடை இதைவிட மோசமாக இருந்திருக்கும்.
அன்றாட வாழ்வியலில் அறிவியலைக் கற்பித்த முகமது நபிகள் இப்படித்தான் மென்மையாகச் செயல்பட்டிருப்பார்.
பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு முழு கவனத்துடன் இருக்க இப்படித்தான் நடக்கக் கற்றுக் கொடுத்திருப்பார்.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று ஞானம் பெற்ற புத்தர் இப்படித்தான் தள்ளாடி நடந்து இருப்பார்.
அடி மேல் அடிவைத்து நடந்த எனக்கும் என் மனைவிக்கும் அந்த அரை மணி நேரம் உடலில் பொறுமையையும் வலி தாங்கும் சக்தியையும் அதைத் தந்த பரம்பொருளுக்கு அர்ப்பணிக்கும் ஞானத்தையும் தந்தது. மாறாக குடுகுடுவென்று ஓடிப் படியேறி ஐந்து நிமிடத்தில் வெளியேறி இருந்தால் இந்த ஞானம் கிடைத்திருக்குமா? நோய் எதிர்ப்பு சக்திதான் கூடியிருக்குமா?
நேரும் துன்பங்களுக்குக் காரணமாக, பலர் நாட்டுத் தலைவர்களைக் குற்றம் சொல்கின்றனர்; குறை கூறுகின்றனர்; புலம்புகின்றனர். இதனால் என்ன நேருகிறது? நம்மை அறியாமலே நம் சக்தி விரையம் ஆகி சோர்வுக்கு உள்ளாகிறோம்.
ஒவ்வொரு மனிதரும் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த வியாபாரம் செய்பவராயினும் சரி ஒரு (சிஸ்டம்) அமைப்பின் கருவியாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் மனிதர்களே அல்ல; மனித எந்திரங்கள். மனைவிக்கு அடிமையானவனை மனைவி எப்படி இயக்குகிறாரோ, அதுபோல அமைப்பியல் மனிதனை இயக்குகிறது. ஒன்றும் பண்ணிக் கொள்ளவே முடியாது. கொரோனா போன்றது இந்த அமைப்பு. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
முல்லா கதைகளில் வேடிக்கையான கதை ஒன்று உண்டு. முல்லா தன் கழுதையில் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார் வேகமாக. ‘முல்லா முல்லா’ என்று கூப்பிட்டு அவரை நிறுத்த முயல்கின்றனர் சிலர். வேகமாகச் சென்று விடுகிறார் அவர்.
அவர் மீண்டும் கழுதையில் வேறு ஒரு பக்கம் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார். கூப்பிடுகிறார்கள், நிற்காமல் சென்று விடுகிறார்.
மூன்றாவது முறை வலுக்கட்டாயமாகக் கழுதையைப் பிடித்து இழுத்து நிறுத்தி கோபமாக “ஏன் முல்லா நிற்காமல் செல்கிறீர்?” என்கிறார்கள். அதற்கு சொன்ன பதில் ஞானம் நிறைந்தது.
“இந்தக் கழுதையை கிழக்குப் பக்கம் போ என்றால் மேற்குப் பக்கம் போகிறது. மேற்கே போ என்றால் வடக்கே போகிறது. அது இஷ்டப்படிதான் போகிறது. நில் என்றால் வேகமாக ஓடுகிறது. நான் அதன் மீது இருப்பதால் வேறு வழி இன்றி அது போகிற போக்கில் நானும் போகிறேன். இறுதியில் ஒன்று புரிந்து கொண்டேன். கழுதையுடன் மல்லுக் கட்டுவதை விட அதனுடன் சமரசம் செய்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று புரிந்து கொண்டேன். எனவே அது போகிற போக்கில் நானும் போய் அங்கங்கு உள்ள வேலைகளை முடித்துக் கொள்கிறேன்.”
இந்தக் கழுதை போன்றது நாம் வாழ்கிற வாழ்க்கையின் அமைப்புகள். அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண்டு புத்திசாலித்தனமாக வாழ எல்லோரும் கற்றுக் கொண்டு விட்டனர். இதில் அநீதி உள்ளீடாக அமைந்திருந்தாலும், அதைக் கண்டுகொள்ளாதவர்கள் அதை வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள். இதனால் ஓரம் கட்டப்படும் நலிந்தவர்கள் முதியவர்கள் வறியவர்கள் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. கவலை கொள்பவர்கள் அந்த அமைப்புகளிலிருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். அதாவது கழுதையிலிருந்து குதித்து விட வேண்டும். அதனால் வரும் இன்னல்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட வேண்டும். இதுவே உண்மையான சுதந்திரம் என்பதை உணர வேண்டும். கழுதையுடன் மாரடிப்பதை விட இது எவ்வளவோ ஆனந்தம் தரும் அல்லவா? ஆனால் அந்த அமைப்பு இப்படிப்பட்டவர்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்துகிறது, பரவாயில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டாள்கள் யார்? கழுதைக்கு அடிமையாய் இருப்பவர்கள் தானே?
முல்லா கதையில், கழுதை வேறொன்றையும் குறிக்கிறது. அது கடந்த காலம். மனிதன் தன்னுடைய நினைவுக் குப்பைகளைக் கழுதையாக்கி அதன் மீதே பயணிக்க விரும்புகிறான். அதில் சுகம் காணுகிறான். எனவே அந்தந்த நொடியின் ஆனந்தத்தை இழக்கிறான்.
இதற்கு ஒரே தீர்வு?
கடந்த காலம்-எதிர் காலம் என்ற கழுதையிலிருந்து இறங்கி, நின்று நிதானித்து, அந்தந்த நொடியில் நிகழ்பவைகளை ரசித்து மகிழ்ந்து பயணிக்க வேண்டும். இதில் எண்ணம், எதிர்பார்ப்பு, வெற்றி, தோல்வி, போட்டி, பொறாமை, கள்ளத்தனம், ஏமாற்று, மோசடி, எதற்கும் இடம் இல்லை. தூய உள்ளமே வழிகாட்டும். எல்லையற்ற பணிவே எல்லையற்ற வலிமையை உண்டாக்கும். அறிவிலியாக பணக்காரனாக வாழ்வதை விட ஞானத்துடன் கூடிய ஏழை முட்டாளாக இருப்பது எவ்வளவோ சுகம் தரும். எனவே செயற்கை அறிவை நம்முடைய சேவகன் ஆக்கி, இயற்கை ஞானத்திற்கு அடிமையாவோம்.
அமைப்பியலில் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டு, மற்றவருக்கும் அவதியை உண்டாக்கும் அரசு மற்றும் சமய, பொருளாதார எந்திரமயமான நிறுவனங்களில் இருந்து விடுதலை பெறுவோம். எண்ணங்களில் இருந்து விடுதலை அடைவோம். நிறுவனச் சார்புடன் ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்களைத் தூக்கி வீசுவோம்.
வாழ்வை முழுமையாகக் கவனிப்போம். ஆனந்த வானில் சிறகடிப்போம். நொடியில் இறக்கத் தயாரானால் நொடியில் பிறக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வோம்.
அடுத்தவர் நம்மைத் துன்புறுத்தினால் அதற்கு நாம் எதிர்வினை செய்யத் தொடங்கும்போது நாம் அவருக்காக வாழத் தொடங்குகிறோம்; அது நம் வாழ்க்கை இல்லை. அவருக்கு எதிர்வினை செய்ய நான் மறுக்கும் போது மட்டும்தானே நான் என் வாழ்வை முழுமையாக வாழ்வதாக அர்த்தம்? எனவே நம் வாழ்வை நாம் வாழ்வோம்; பிறர் வாழ்வை மல்லுக்கட்டி நாம் வாழ வேண்டாமே! அமைப்பியல் என்ற கழுதையிலிருந்து இறங்கிப் பாமரனாய் சுதந்திரமாய் நடந்து பயணிப்போம்.
“வீல்சேர் இல்லை, எலிவேட்டர் இல்லை, லிப்ட்டு இல்லை, அரை கிலோமீட்டர் தூரம் ஸ்டேஷனில் நடந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில், எங்கும் புகார் கொடுக்கக் கூடாது, நிவாரணம் தேடி அலையக்கூடாது, வருவதை ஏற்று நொடி நேர நிகழ்காலத்தில் புலம்பாமல் நடந்து கொண்டே செல்ல வேண்டும்” என்று கூறுகிறீர்களே, திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிட்டால் என்ன செய்வது என்கிறீர்களா?
ஆகா, அது அற்புதமான ஆனந்தமான முடிவு அல்லவா? ரயில்வே நிர்வாகத்தை, மனிதர்களின் அணுகுமுறையை, அரசுகளை சரி செய்து, மனிதநேயம் உண்டாக்குவதில் உங்கள் வழிமுறை வன்முறையாகித்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கை என்று எல்லோருடைய வாழ்வியலிலும் ஊட்டப்படுகிறது. அப்படிப் பார்த்தாலும் வன்முறை வழி மூலமாக அந்த உயிரை நீடித்து வாழவைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் வழிமுறைதானே முக்கியம்?
அமைப்பு மாறவே மாறாது. தங்களுக்குள் இருக்கும் அமைப்பியல் வன்முறையைத் துடைத்தெறிந்து, ஆன்மாவில் ஆனந்தத்தைக் கலக்கச் செய்ய அந்த ஒரு நிமிட நிகழ்வு உதவுமானால், அதை முழுமையாக ஏற்றுக் கொள்வது தானே புத்திசாலித்தனம்?
மேலும் ஒரு உண்மை என்னவென்றால், வெயில் படாமல் நடக்காமல் உழைக்காமல் சொகுசாக ஏசியிலேயே காலம் கழிப்பவர்களுக்குத்தான் இதய நோய் வருவதாக அறிவியல் மருத்துவம் கூறுகிறது.
உடலுக்கு வலி வரும்போது ஏற்க மறுப்பவர்களுக்கு அதிர்ச்சியில் இதயம் பலம் இழக்கலாம். ஆனால் வலியை ஏற்று அதை ஞானமாகவும் நோய் எதிர்ப்பு சக்திக்கான உரமாகவும் மாற்றுபவர்களுக்கு இதயம் பலப்படுகிறது.
சிபாரிசு நாடி தனக்குத் தேவையானவற்றை எளிதாக நிறைவேற்றிக் கொள்பவர்களுக்கு இந்த உரம் கிட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, ரயிலில் நானும் எனது மனைவியும் பதிவு செய்யும்பொழுது காத்திருப்போர் பட்டியலில் எங்களுக்கு பயணச்சீட்டு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பயணத்தின் அன்று எங்களுக்கு அது ஆர்.ஏ.சி ஆக மாறி இருவருக்கும் ஒரே ஒரு படுக்கை வழங்கப்படும்.
காத்திருப்போர் பட்டியலிலே இருந்து விட்டால் பதிவுச் சீட்டை ரத்து செய்துவிட்டு பயணம் செய்யாமலே வீட்டிலேயே இருந்து விடுவோம். ஆனால் ஆர் ஏ சி என்று வந்த பிறகு பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிக் கொள்ளலாம் என்ற முறையில் அந்தப் படுக்கையில் போய் அமர்ந்திருப்போம். இன்னொரு படுக்கை இரவு 12 மணிக்குள் பதிவு அதிகாரி தந்தால் உண்டு; இல்லையெனில் ஒருவர் உட்கார்ந்தே வர வேண்டியது தான்.
சிலர் அதிகாரிக்குப் பணம் கொடுத்து ‘கிவ் அண்ட் டேக்’ என்ற முறையில் படுக்கை பெறுவதை பார்த்திருக்கிறேன். நாங்கள் அந்த வழிமுறையை எடுத்துக் கொண்டதில்லை. அத்துடன் ரயில்வே நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் பலரும் அந்த அதிகாரிகளின் தயவால் உடனடி புக்கிங் செய்து கொள்வதும் உண்டு.
இவை எதையுமே நாடிப் போகவில்லை என்றால் பயணம் பல முறைகளில் கடினமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அந்தக் கடினத்தை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன், அந்த இரவு நேரும் வலியுடன், தாங்கிக் கொண்டால் அது என்னுடைய உடம்புக்கு வலுவாக மாறி இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
குறுக்கு வழிகளில் செல்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கும். இதேபோல் ஒருவர் அடிக்கும் பொழுது மற்றவர் உடனடியாகத் திருப்பி அடித்து விடுகிறார். அதில் திருப்தியும் இன்பமும் காண்கிறார். ஆனால் திருப்பி அடிக்காமலும், அடி வாங்கியதில் துன்பம் காணாமலும் இருக்கும் நிலையை ஒருவர் அனுபவித்து ஏற்றுக் கொண்டு, திருப்பி அடிப்பதில்லை என்ற உறுதி பூண்டு விட்டால் பிறகு ஏது வாழ்வில் துன்பம்? எல்லாம் இன்பமயமே!
அரசுப் பணிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பல தேர்வுகளை எழுதி பல்லாயிரம் பேர்களை பின்தள்ளி முண்டியடித்துக் கொண்டு அரசுப் பணிகளைப் பெறுகிறார்கள் பலர். இதைவிட இரயில்வே துறைக்குச் செல்லவும் மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்லவும் துடிக்கிறார்கள் இளைஞர்கள். இது எதைக் காட்டுகிறது?
வாழ்வில் உடலை வருத்தி வேலை செய்வதை விரும்பாமல் சுலபமாகப் பணி செய்து, ஆனால் நிறைய சம்பாதிக்க மனம் விரும்புகிறது. மேலும் ஒரு நிரந்தரமான வேலையை நாடுகிறார்கள். வேலை கிடைத்த உடனேயே அவர்களுடைய மூளை அவர்களிடம் “நிரந்தரமாக வாழ்க்கையை நீ அமைத்துக் கொண்டதால் இனி நீ கடினப்பட்டு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்” என்று அறிவுறுத்தி விடுகிறது. அதனால் வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை அவர்களால் கண்டுணர்ந்து, புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் மங்கி விடுகிறது. பணத்தை நிறைய சேர்த்து வங்கியில் வைத்துவிட்டு, அது பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வதிலேயே அவர்களுடைய வாழ்க்கை கழிந்து விடுகிறது. பாவம்!
ஞாநிகளும் மகான்களும் நமக்கு இறக்கும் கலையைக் கற்றுத் தந்தார்கள். இப்போது உள்ள அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொருளாதார மேதைகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள் எல்லோருமே இறப்பிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நமக்குக் கற்றுத் தந்து, அதற்கான கட்டணமாக நம் வாழ்வையே சூறையாடி விடுகிறார்கள்!
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்! மல்லுக்கட்டிக் கொண்டு உயிர் வாழ இவர்களிடம் தஞ்சம் புகுவதைவிட, நேரடியாக இறப்பை வரவேற்கத் தயாராகி விட்டால் அடிமைத்தனம் மறைந்து ஆனந்த சுதந்திரம் பிறக்கும் அல்லவா?
இது தற்கொலை முயற்சி அல்ல; அது மடையர்களின் வழி. ஆனால் நான் சொல்வது, இறக்கும் கலை அறிவது. அதை முழுமையாக அறியும் மனிதன் என்றும் வாழ்வான்! இது ஞாநிகளின் வழி!
சூ.குழந்தைசாமி
தொடர்புக்கு:

Leave A Comment